Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 190)
மூன்றாம் ப்ரகரணம்
அது தத்வோபதேசம்; இது தத்வ தர்சி வசனம்.
– ஆக ஸ்ரீகீதையோடு திருவாய்மொழிக்குண்டான ஸாம்யாம் சொல்லிற்று கீழ்; அதிலிதுக்குண்டான ஆதிக்யத்தைப் பல ஹேதுக்களாலும் சொல்லுகிறது மேல். ப்ரதமம் வக்த்ரு வைலக்ஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்லுகிறது (அது தத்வோபதேசம்) இத்யாதியால்.
இப்படியாக ஸ்ரீமத்பகவத்கீதையுடன் திருவாய்மொழிக்கு உள்ள ஒப்புமையைக் கடந்த சூர்ணையில் அருளிச்செய்தார். அடுத்து ஸ்ரீமத்பகவத்கீதையைக் காட்டிலும் திருவாய்மொழிக்கு பல காரணங்களால் ஏற்றம் உண்டு என்பதை அருளிச்செய்யத் திருவுள்ளம் கொண்டார். நம்மாழ்வாருடைய பெருமை காரணமாகத் திருவாய்மொழிக்கு உள்ள ஏற்றத்தை முதலில் கூறுகிறார்.
– அதாவது அந்த ஸ்ரீகீதாப்ரபந்தம், “தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸர்வதோமுகை, தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண: பர:” என்கிறபடியே தத்வ பூதனான ஸர்வேச்வரன் தானே உபதேசித்தது. இப் ப்ரபந்தம், “தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந:” என்று ஜ்ஞாநோபதேசத்துக்கு ஆப்ததமராக அவன்தானருளிச்செய்த தத்வதர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசநமென்கை. இத்தால் சொல்லிற்றாய்த்து “அஹம் க்ருத்ஸநஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரளயஸ் ததா, மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய:”, “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று இப்படி ஸ்வவைபவத்தை ஸ்வயமேவ அருளிச்செய்கையாலே ஸ்வப்ரசம்ஸைபோலே யிருக்கையாலே, அது மந்தமதிகளுக்கு விச்வஸநீயமாகாது; சுத்த ஸத்வ ஜ்ஞாநரானவிவர், “மண்ணும் விண்ணும்மெல்லாம் முடனுண்ட நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே”, “கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை”, “கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண் திண்ணமா நும்முடைமையுண்டே லவனடி சேர்த்துய்ம்மினோ” என்று இப்படி மத்யஸ்த்தமாக நின்று தத்வைபவத்தை யுபதேசிக்கையாலே, இது மந்தமதிகளுக்கும் விச்வஸநீயமா யிருக்கு மென்கிற ஆதிக்யம்.
– (அது) - அந்த ஸ்ரீமத்பகவத் கீதையானது. (தத்வ உபதேசம்) - மஹாபாரதம் சாந்திபர்வம் – தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸர்வதோமுகை, தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண: பர: - உண்மையான தத்வத்தைக் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்பட்ட ரிஷிகளுக்கு உயர்ந்தவனும், ஒரே தத்துவமாக உள்ளவனும், அனைத்து பாபங்களையும் போக்கவல்லவனும் ஆகிய ஸ்ரீஹரியாகிய நாராயணன் மட்டுமே பரம்பொருள் என்ற நிலை அறியப்பட்டது - என்பதற்கு ஏற்ப உண்மைப் பொருளாக உள்ள ஸர்வேச்வரன் தானே நேரில் நின்று உபதேசம் செய்ததாகும். (இது) - இந்தத் திருவாய்மொழியானது. (தத்வ தர்சி வசனம்) - கீதை (4-34) – தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந: - ஆத்ம ஞானத்தை, உண்மையைக் காண்கின்ற ஞானிகளிடம் அறிந்து கொள்வாயாக. அவர்களை நீ வணங்குவதாலும், அவர்களுக்குத் தொண்டு புரிவதாலும், எந்த வஞ்சனையும் இன்றி அவர்களைக் கேள்வி கேட்பதாலும், அந்த உயர்ந்த ஞானத்தை அவர்கள் உனக்கு உபதேசம் செய்வர் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஞான உபதேசம் பெறுவதற்கு நம்பத்தகுந்தவர்களில் தலைவராக உள்ள நம்மாழ்வார் அருளிச்செய்ததாகும். இதன் மூலம் கூறப்பட்டது என்ன? கீதை (7-6) - அஹம் க்ருத்ஸநஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரளயஸ் ததா – அனைத்திற்கும் காரணம் நானே ஆவேன், ப்ரளய காலத்தில் என்னிடமே அனைத்தும் லயிக்கின்றன – என்றும், கீதை (7-7) - மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய: - நானே உயர்ந்த பரம்பொருள், என்னைக் காட்டிலும் உயர்ந்த வஸ்து வேறு ஏதும் இல்லை - என்றும், கீதை (18-66) – மாம் ஏகம் சரணம் - என்னிடமே சரணம் அடைவாயாக – என்றும் தனது பெருமையைத் தானே அருளிச்செய்வதன் காரணமாக, தற்புகழ்ச்சி போன்று உள்ளதால், இதனை அற்பமான அறிவு கொண்டவர்கள் நம்பும்விதத்தில் இருக்காது; அவர்களால் ஏற்கத்தக்கதாக இருக்காது. ஆனால் சுத்தமான ஸத்வஞானம் கொண்டவராகிய நம்மாழ்வார், திருவாய்மொழி (2-2-1) - மண்ணும் விண்ணும்மெல்லாம் முடனுண்ட நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே – என்றும், திருவாய்மொழி (5-2-7) - கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை - என்றும், திருவாய்மொழி (9-1-10) – கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண் திண்ணமா நும்முடைமையுண்டே லவனடி சேர்த்துய்ம்மினோ - என்றும் பல பாசுரங்கள் மூலம் நடுநிலையாக நின்று அவனுடைய வைபவத்தை உபதேசிக்கிறார்; ஆகவே இந்தத் திருவாய்மொழியானது அற்பமான அறிவு கொண்டவர்களுக்கு நம்பும்படியாக இருக்கும் என்பதால், இதற்கு ஸ்ரீமத்பகவத்கீதையைக் காட்டிலும் ஏற்றம் உண்டு என்று கருத்து.