Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 189)

மூன்றாம் ப்ரகரணம்

மனஞ்செய் எல்லையில் ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞனப்பிரானை ஞானத்துவைம்மி னென்றவிது, தத்வ விவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்ய ஸாம்யாஹங்காரேந்த்ரிய தோஷ பல மந: ப்ராதாந்ய கரணநியமந ஸுக்ருதி பேத தோவாஸுர விபாக விபூதியோக விச்வரூப தர்சந ஸாங்கபக்தி ப்ரபத்தி த்வைவித்யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமமென்னும். குறிப்பு – இந்தச் சூர்ணைக்கான வ்யாக்யானத்தில் முதல் பகுதியில் ஸ்ரீகீதையின் விளக்கங்களையும், இரண்டாவது பகுதியில் அந்த விளக்கங்களுக்கு ஏற்ப உள்ள திருவாய்மொழியையும் அருளிச்செய்துள்ளார். ஆனால் இங்கு, அந்தந்த கீதா வ்யாக்யானத்தைத் தொடர்ந்து, அதற்கான திருவாய்மொழி வ்யாக்யானம் உள்ளது போன்றி மாற்றி தரப்பட்டுள்ளது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று கருதியே இவ்விதம் அமைக்கப்பட்டது.

இனிமேல் இப் ப்ரபந்த ப்ரதிபாத்யார்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, அதில் ப்ரதமத்திலே, ஸாக்ஷாத் க்ருத பகவத் தத்வரானவிவர் ஸம்ஸாரிகளுக்கு உஜ்ஜீவநார்த்தோபதேசம் பண்ணின இப் ப்ரபந்தம் ப்ரதிபாத்யார்த்த ஸாம்யத்தாலே பகவத் ப்ரணீத கீதோபநிஷத் ஸமமாகச் சொல்லப்படுமென்கிறார் (மனம்செய்) என்று தொடங்கி.

– இனி இந்த ப்ரபந்தத்தில் கூறப்படுகின்ற ஆழ்பொருள்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துரைக்கத் திருவுள்ளம் பற்றுகிறார். முதலில் பகவத்விஷயம் குறித்து உள்ளது உள்ளபடி நேரடியாக அறிந்தவராகிய நம்மாழ்வாரால், இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் கரையேறுவதற்காக உபதேசிக்கப்பட்ட இந்த ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கருத்துக்களின் ஒற்றுமை காரணமாக, இது பகவானால் கூறப்பட்டதான கீதோபநிஷத்திற்கு ஒப்பாக உள்ளது என்று இந்தச் சூர்ணையில் கூறுகிறார்.

– அதாவது (மனஞ்செய் எல்லையில் ஞானவின்பத்தை) “எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்துன் பெருமை” என்றும், “எல்லையில் ஞானத்தன்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வ காரணமாய் அபரிச்சேத்யமான ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தை யுடையனாய், “சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பம்” என்கிறபடியே ப்ரக்ருதி புருஷ தத்வங்களிரண்டும் தனக்குள்ளே யாம்படி வ்யாபித்து தான் அபரிச்சேத்யமாய் உஜ்ஜ்வலமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாயிருக்கிற ஸ்வரூபத்தை யுடையனான ஸர்வேச்வரனை; (நின்மலமாக வைத்தார்) “எனதாவியுள்ளே நிறைந்த ஞனமூர்த்தியாயை நின்மலமாக வைத்து” என்று பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வரூபனான உன்னையென் னெஞ்சுக்குள்ளே விசததமாமாக வநுபவித்தென்னும்படி ஸாஷாத்கரித்தவாழ்வார், (ஞானப்பிரானை ஞானத்துவைம்மி மென்றவிது) “இருங்கற்பகஞ்சேர் வானத்தவர்க்கு மல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் எறிதிரை வையம் முற்று மேனத் திருவாயிடந்த ஞானப்பிரானை யல்லாவில்லை நான் கண்ட நல்லது” என்று ப்ரளயார்ணவ மக்நையான பூமியை மஹாவராஹமா யுத்தரித்த ஜ்ஞாந சக்திகளையும் ஸ்வாமித்வ ப்ராப்தியையு முடையனாய் ச்லோக த்வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனுமா யிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கு முஜ்ஜீவந ஹேதுவாயிருயிருப்ப தொன்றில்லை, இது நானறுதியிட்ட விலக்ஷணமான வர்த்தம் என்று ப்ரதம ப்ரபந்தத்தி லருளிச்செய்த விஷயத்தை உபாயமாகப் பற்றச் சொல்லுகிறவளவில் “திருக்குருகூரதனையுளங்கொள் ஞானத்துவைம்மி னும்மை யுய்யக் கொண்டு போகுறில்” என்று உஜ்ஜீவிக்க வேண்டியிருந்தீர்களாகில் அவன் நித்யவாஸம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மாநஸ ஜ்ஞாநத்துக்கு விஷயமாக்குங்கோளென்று ஸம்ஸாரிகளைக் குறித்து உபதேசித்த இப்பரபந்தம் தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தமாக வவதரித்தருளின க்ருஷ்ணன். “அஸ்த்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம், பார்த்தம் ப்ரபந்நமுத்திச்ய சஸ்த்ராவதரணம் க்ருதம்” என்கிறபடியே, அஸ்த்தாநேயுண்டான பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும், ஸ்வதர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி, “நயோத்ஸ்யாமி” என்று யுத்தாந் நிவ்ருத்தனாய், “யச் ச்ரேயஸ் ஸ்யாந் நிச்சித ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” என்ற வர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே ப்ரவ்ருத்தனாக்குகை வ்யாஜமாக, “அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவரறிய” என்கிறபடியே லோகத்துக்கு உஜ்ஜீவந சாஸ்த்ரமாம்படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீகீதையில், (தத்வவிவேக) ப்ரதமத்திலே, தேஹாத்மாபிமாந கார்யமான பந்து ஸ்நேஹத்தையும் வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வஜ்ஞாநத்தை யுபதேசிக்கத் தொடங்கின வளவிலே, “ந த்வே வாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்” என்று ஸர்வேச்வரனான தன்னோபாதி ஸகலாத்மாக்களும் நித்யரென் றருளிச்செய்கிற வழியாலே, ஜீவபர பேதம், ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமாகிற விவற்றை தர்சிப்பித்து, “தேஹிநோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா, ததா தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர நமுஹ்யதி” இத்யாதியாலே ப்ரக்ருத்யாத்ம விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் … இவரும் “அடியேனுள்ளான்” என்கிறவிடத்திலே சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் ஜீவபர பேதமும், ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும், “சென்று சென்று பரம்பரமாய்” என்று ஆத்மாவுக்கு தேஹாதி விலக்ஷணத்வத்தைச் சொல்லுகையாலே ப்ரக்ருத்யாத்ம விவேகமுமாகிற தத்வ விவேகத்தையும், (நித்யவாநித்யத்வ) “அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாச் சரீரிண அநாசிநோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத”, “ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதாவா நபூய: அஜோ நித்ய சாச்வதோயம் புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே”, “வாஸாம்ஸி ஜீர்ணாநியதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி, ததா சரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ” இத்யாதிகளாலே ஆத்மநித்யத்வ தேஹாநித்யத்வங்களையும் … (இவரும்) “மின்னின் னிலையில மன்னுயிராக்கைகள்” என்றும், “உள்ளது மில்லதும்” என்றும் சிதசித் தத்வங்களின் நித்யத்வாநித்யத்வங்களையும், (நியந்த்ருத்வ) “பூமிராபோநலோ வாயு: கம் மநோ புத்தி ரேவச, அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா”, “அப்ரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்” என்கிறபடியே சேதநாசேதந சரீரியாய்; “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதி: ஜ்ஞாநம போஹநஞ்ச” என்றும், “ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேசே அர்ஜுந திஷ்ட்டதி, ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வ ஜநஹ்ருதி ஸ்த்தனாய் நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கையாகிற ஈச்வரனுடைய நியந்த்ருத்வத்தையும், … (இவரும்) “உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்து” என்றும், “கரந்த சிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்து” என்றும் அந்த சேதநாசேதந சரீரியாய், “நின்றனர்” இத்யாதிப்படியே அவற்றின் ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வாதீநமாம்படியிருக்கிற வவனுடைய நியந்த்ருத்வத்தையும், – (ஸௌலப்ய) “தஸ்யாஹம் ஸுலப: பார்த்த நித்யயுக்தஸ்ய யோகிந:” என்றும், “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்த்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்றும் பக்திமான்கள் நிமித்தமாகவும் அவதார ப்ரயுக்தமாகவு முண்டான வவன் ஸௌலப்யத்தையும், … (இவரும்) “பத்துடை யடியவர்க் கெளியவன்” என்றும், “பல பிறப்பாய் எளிவரு மியல்வினன்” என்றும் ஆசாலேசமுடையாரைப் பற்றவும் அவதார ப்ரயுக்தமாகவு முண்டான வவனுடைய ஸௌலப்யத்தையும், (ஸாம்ய) “ஸமோஹம் ஸர்வபூதேஷு நமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” என்று அவனுடைய ஆச்ரயணீயத்வே ஸர்வஸாம்யத்தையும், … (இவரும்) “முற்றவும் நின்றனன்” என்று அவனுடைய ஆச்ரயணீயத்வே ஸாம்யத்தையும். (அஹங்கார தோஷ) “அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமதி மந்யதே” என்று அஹங்கார தோஷத்தையும், … (இவரும்) “நீர் நுமதென்றிவை வேர் முதல்மாய்த்து” என்று ஸம்ஸார ஹேது அதுவேயாகச் சொல்லுகையாலே அஹங்கார தோஷத்தையும். (இந்த்ரியபல) “யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:” என்று இந்த்ரிய ப்ராபல்யத்தையும், … (இவரும்) “விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையுஞ் செறுமைம்புலன்” என்று இந்த்ரிய பலத்தையும். (மந: ப்ராதாந்ய) “சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்றும், “அஸம்சயம் மஹோபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் அப்யாஸேநது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே” என்றும் மற்றை யிந்த்ரியங்களில் வைத்துக் கொண்டு மநஸ்ஸினுடைய ப்ராதாந்யத்தையும், … (இவரும்) “மனத்தை வலித்து” என்று மநோநியமநத்தினருமை சொல்லுகையாலே மந: ப்ராதாந்யத்தையும். (கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத் மத்பர: வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டதா” என்றும், “ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி ந்ருத்த்யச” என்றும் கரணநியமநத்தையும், … (இவரும்) “உள்ளமுரை செயலுள்ள விம்மூன்றையு முள்ளிக்கெடுத்து” என்று கரண நியமநத்தையும். (ஸுக்ருதிபேத) “சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந, ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுர் அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப” என்று ஸுக்ருதிகளுடைய பேதத்தையும், … (இவரும்) “பொருநாடு காணவிம்மையிலே பிச்சைதாங் கொள்வர்” என்கையாலே ஆர்த்தனான ப்ரஷ்டைச்வர்ய காமன், “இறுகலிறப்பென்னும்” என்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன், “குணங்கொள் நிறைபுகழ் மன்னர்” இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைச்வர்ய காமன், “திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மின்” என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவச்சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும். (தேவஸுர விபாக) “த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச”, “தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயா ஸுரீமதா” என்று தேவாஸுர விபாகத்தையும், … (இவரும்) “அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” என்றும், “நண்ணாவசுரர் நல்லவமரர்” என்று தேவாஸுர விபாகத்தையும். (விபூதியோக) “ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்ம நச்சுபா: ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே”, “ஆதித்யாநாமஹம் விஷ்ணு: ஜ்யோதிஷாம் ரவிரம்சுமாந்” இத்யாதியாலே விபூதியோகத்தையும், … (இவரும்) “புகழுநல்லொருவன்”, “நல்குரவும்”, “மாயாவாமனன்” இவைகளிலே விபூதியோகத்தையும். (விச்வரூப தர்சந) “பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷ ஸங்காந் ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ச்ச ஸர்வாநுரகாம்ச்ச தீப்தாந்” இத்யாதியாலே விச்வரூப தர்சநத்தையும், … (இவரும்) “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனானாய்” என்று விச்வரூப தர்சனத்தையும். (ஸாங்க பக்தி) “மந்மநா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:” என்று அங்க ஸஹிதையான பக்தியையும், … (இவரும்) “வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களைகட்டுணக்குமின் பசையற” என்றும், “மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை நாவிற் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” என்றும், “மாலை நண்ணி காலை மாலை கமல மலரிட்டு தொழுதெழுமினோ” என்றும் ஸாங்க பக்தியையும். (ப்ரபத்தி த்வைவித்யாதி) “தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா, மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே”, “தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேந பாரத” என்று அங்கத்வேநவும், “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” இத்யாதியாலே ஸ்வதந்த்ரத்வேநவு மிரண்டுபடியான ப்ரபத்த்யுபதேசத்தைப் பண்ணினாப்போலே … (இவரும்) “அவனுடையுணர்வும் கொண்டுணர்ந்து” என்று அவனருளிச்செய்த ப்ரபத்திரூப ஜ்ஞாநத்தை ஸஹாயமாகக் கொண்டு அத்தையறிந்தென்கையாலே பக்த்யங்கத்வேநவும் “மற்றோன்றில்லை”, “சரணமாகும்” என்கிறவற்றாலே ஸ்வதந்த்ரத்வேநவும் இரண்டு வகையான ப்ரபத்தியையு முபதேசிக்கையாலே ஏதத் ப்ரதியார்த்த ஸாம்யத்தைக் கொண்டு “மாயனன்றோதிய வாக்கு” என்கிற ஸ்ரீகீதையோடொக்கச் சொல்லப்படுமென்கை. “ப்ரபத்தி த்வைவித்யாதிகளாலே” என்கிறவிடத்தில் ஆதிசப்தத்தாலே “ஜந்ம கர்மசமே திவ்யமேவம் யோவேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” என்றாப்போலே, “இவை பத்தும் வல்லாரமரரோடுயர்விற் சென்றறுவர் தம் பிறவியஞ்சிறை” என்று சொன்ன அவதார ரஹஸ்ய வைபவம், “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யுபஹ்ருத மச்நாமி ப்ரயதாத்மந:” என்றாப்போலே “பிரிவகையின்றி நன்னீர் தூய்ப்புரிவதுவும் புகைபூ” என்று சொன்னவவன் ஸ்வாராததை முதலாகக் கீழநுக்தங்களையும், தேஹாத்மாபிமாநிகளை க்ரமத்திலே ப்ராப்ய ஸாதநங்களி னெல்லையிலே மூட்டுகையும், ஸாத்யோபாயங்களிலே பரந்து ஸித்தோபாயத்தை மறைத்து உபதேசிக்குமிடத்தில் வைபவம் தோற்ற வெளியிடுகையுமானவற்றையும் நினைக்கிறது.

– (மனஞ்செய் எல்லையில் ஞான இன்பத்தை) திருவாய்மொழி (1-5-2) – எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய் ஞானத்துன் பெருமை - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்துப் பொருள்களுக்கும் காரணமாகவும், (எல்லையில்) - திருவாய்மொழி (3-10-8) – எல்லையில் ஞானத்தன் - என்பதற்கு ஏற்ப அளவிட இயலாத ஸங்கல்ப ரூபமான ஞானத்தை உடையவனாகவும். (ஞான இன்பத்தை) - திருவாய்மொழி (10-10-10) – சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பம் – என்பதற்கு ஏற்ப ப்ரக்ருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டு தத்வங்களும் தனக்குள்ளே இருக்கும்படியாக எங்கும் வ்யாபித்து, தான் அளவுபடுத்தி அறிய இயலாதவனாகவும், ப்ரகாசமாகவும், ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை லக்ஷணமாக உள்ள ஸ்வரூபம் கொண்டவனாகவும் உள்ள ஸர்வேச்வரனை. (நின்மலமாக வைத்தவர்) – திருவாய்மொழி (4-7-7) - எனதாவியுள்ளே நிறைந்த ஞனமூர்த்தியாயை நின்மலமாக வைத்து – என்பதற்கு ஏற்ப “பரிபூர்ணமான ஞான ஸ்வரூபமாக உள்ள உன்னை எனது நெஞ்சத்தில் மிகவும் தெளிவாக வைத்து அனுபவித்தபடி” என்று நேரடியாகக் கண்டு அனுபவித்த நம்மாழ்வார். – (ஞானப்பிரானை) - திருவிருத்தம் (99) – இருங்கற்பகஞ்சேர் வானத்தவர்க்கு மல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் எறிதிரை வையம் முற்று மேனத் திருவாயிடந்த ஞானப்பிரானை யல்லாவில்லை நான் கண்ட நல்லது - என்பதற்கு ஏற்ப, “ப்ரளய நீரில் மூழ்கிக் கிடந்த பூமியை மஹாவராஹனாக அவதரித்து மேலே உயர்த்திய ஞானசக்திகளையும், எஜமானனாக உள்ள தன்மையையும் கொண்டவனாகவும், வராஹ சரம ச்லோகம் மூலம் சரம உபாயத்தை வெளியிடுவதால் ஞானம் ஏற்படுத்த ஏற்றதான உபகாரங்கள் செய்தபடி உள்ளவனாகவும் இருக்கின்ற இவன் அல்லாமல் அனைவரும் கரை ஏறுவதற்கான உபாயம் வேறு ஏதும் இல்லை என்பதே நாம் உறுதியாக அறிந்த விஷயமாகும்”, என்று முதல் ப்ரபந்தமாக உள்ள திருவிருத்தத்தில் அருளிச்செய்த விஷயத்தையே உபாயமாகப் பற்றவேண்டும் என்று கூறுகிறார். (ஞானத்தை வைம்மின் என்ற இது) – திருவாய்மொழி (4-10-9) – திருக்குருகூரதனையுளங்கொள் ஞானத்துவைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறில் - என்பதற்கு ஏற்ப “கரையேற வேண்டும் என்று முடிவு செய்தீர்கள் என்றால், அவன் நித்யமாக வசிக்கின்ற திவ்யதேசத்தை உங்களுடைய மனதின் ஞானத்திற்கு இலக்காகக் கொள்வீராக”, என்று ஸம்ஸாரிகளைக் குறித்து உபதேசிக்கப்பட்ட இந்த ப்ரபந்தம். – (தத்வ விவேக) தர்மத்தை நன்றாக நிலைநிறுத்துவதற்காக அவதரித்த க்ருஷ்ணன். கீதார்த்த ஸங்க்ரஹம் (5) – அஸ்த்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம், பார்த்தம் ப்ரபந்நமுத்திச்ய சஸ்த்ராவதரணம் க்ருதம் - வரச்கூடாத இடத்தில் ஏற்பட்டதான உறவினர்கள் மீது கொண்ட அன்பு, கருணை போன்றவற்றாலும், தனக்கே உரிய தர்மத்தை அதர்மம் என்று உணர்ந்ததாலும் கலங்கியபடி நின்று, தன்னைச் சரணம் புகுந்த அர்ஜுனனுக்காக இந்த கீதாசாஸ்த்ரம் தொடங்கப்பட்டது – என்று கூறுவதற்கு ஏற்ப, வரக்கூடாத இடத்தில் ஏற்பட்ட உறவினர் மீது அன்பு மற்றும் கருணை காரணமாகவும், தனது தர்மத்தை அதர்மம் என்று எண்ணியதாலும் கலங்கி, நயோத்ஸ்யாமி - என்பதற்கு ஏற்ப யுத்தம் செய்யவதில்லை என்று தீர்மானித்து கைவிட்டவனாய், கீதை (2-7) – யச் ச்ரேயஸ் ஸ்யாந் நிச்சித ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் - எனக்கு எது உயர்வை அளிக்கும் என்று நீ தீர்மானித்துள்ளாயோ, அதனை உனது சிஷ்யனாக உன்னைச் சரணடைந்து நிற்கும் எனக்கு உபதேசம் செய்வாயாக - என்று நின்ற அர்ஜுனனுடைய அறிவைத் தெளிய வைத்து, அவனை யுத்தத்தில் ஈடுபடுத்தும்விதமாகக் கூறுகின்ற உபதேசம் என்று ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொண்டு, திருவாய்மொழி (4-8-6) - அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய – என்பதற்கு ஏற்ப “உலகில் உள்ள அனைவரும் கரையேறும் விதமாக அமைந்துள்ல ஒரு சாஸ்த்ரம்” என்று அனைத்துப் பொருள்களும் மிகவும் விரிவாக உரைக்கப்பட்ட ஸ்ரீமத்பகவத்கீதையின் தொடக்கத்தில், சரீரத்தையே ஆத்மா என்று எண்ணியதன் விளைவாக ஏற்பட்டதான உறவினர்கள் மீது உள்ள அன்பு மற்றும் கொல்வதில் உள்ள அச்சம் போன்றவற்றை மாற்றும்விதமாக தத்வஞானத்தை உபதேசிக்கத் தொடங்கும்போது, கீதை (2-12) – ந த்வே வாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் – இதற்கு முன்னால் உள்ள காலங்களில் நான் இல்லாமல் இல்லை, நீயும் இல்லாமல் இல்லை, இந்த அனைவரும் இல்லாமல் இல்லை; இனிவரும் காலங்களிலும் நாம் இல்லாமல் இருப்போம் என்பதும் இல்லை - என்று ஸர்வேச்வரனாகிய தன்னைப் போன்றே அனைத்து ஆத்மாக்களும் நித்யர்களே ஆவர் என்று அருளிச்செய்ததன் மூலம், ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவுக்கு இடையே உள்ள வேறுபாடு, ஒவ்வொரு ஜீவாத்மாக்களிலும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை உபதேசித்தான். தொடர்ந்து கீதை (2-13) – தேஹிநோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா, ததா தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர நமுஹ்யதி – சரீரத்தில் உள்ள ஆத்மா எவ்வாறு சரீரத்தின் இயற்கையான இளமை, வாலிபம், வயோதிகம் ஆகியவற்றை அடைகிறதோ அது போன்றே வேறு ஒரு சரீரத்தையும் அடைகிறது; ஆகவே இதனைக் கண்டு தீரன் வருந்துவதில்லை - என்பது போன்றவை மூலம், சரீரமும் ஆத்மாவும் வெவ்வேறு என்பது உபதேசிக்கப்படுகிறது; இதன் மூலம் தத்வங்களை வேறுபடுத்திக் காண்கின்ற அறிவு ஏற்படுத்தப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும், திருவாய்மொழி (8-8-2) – அடியேன் உள்ளான் - என்ற பாசுரத்தில் உள்ள பதங்கள் மூலம் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவிற்கு உள்ள பேதம், ஜீவாத்மாக்களில் ஒவ்வொருத்தருக்கும் இடையில் உள்ள பேதம் ஆகியவற்றையும், திருவாய்மொழி (8-8-5) – சென்று சென்று பரம்பரமாய் - என்பதன் மூலம் ஆத்மாவிற்கும் சரீரத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் கூறுவதால் தத்வங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை உபதேசித்தார். – ( நித்யத்வ அநித்யத்வ) – கீதையில் (2-18) - அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாச் சரீரிண அநாசிநோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத – நித்யமாகவும், அழிவற்றவனாகவும், அறிபவனாகவும் உள்ள ஆத்மாவின் இந்தச் சரீரங்கள் அனைத்துமே அழியக்கூடியவை என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே நீ கலங்காமல் யுத்தம் செய்வாயாக – என்றும், கீதை (2-20) – ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதாவா நபூய: அஜோ நித்ய சாச்வதோயம் புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே - இந்த ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை; முன்பு உண்டாகி, பின்பு இல்லாமல் போகப்போகிறான் என்பதும் இல்லை; இவன் பிறப்பற்றவன், நித்யமானவன், எப்போதும் உள்ளவன், பழமையானவன்; சரீரம் கொல்லப்பட்டாலும் ஆத்மா அழிவதில்லை - என்றும், கீதை (2-22) - வாஸாம்ஸி ஜீர்ணாநியதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி, ததா சரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ - மனிதன் கிழிந்த துணிகளைக் களைந்துவிட்டு புதிய துணிகளை எவ்விதம் அணிந்து கொள்கிறானோ அது போன்றே ஆத்மாவும் பழைய சரீரத்தை விட்டு புதிய சரீரத்தை எடுத்துக்கொள்கிறது - என்றும் உள்ள ச்லோகங்கள் மூலம், ஆத்மாவின் நித்யத்தன்மை மற்றும் சரீரத்தின் அநித்யத்தன்மை கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (1-2-2) – மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் – என்றும், திருவாய்மொழி (1-2-8) – உள்ளதும் இல்லதும் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், சேதநத்தின் நித்யத்வம் மற்றும் அசேதநத்தின் அநித்யத்வம் ஆகியவற்றை அருளிச்செய்தார். – (நியந்த்ருத்வ) – கீதை (7-4) - பூமிராபோநலோ வாயு: கம் மநோ புத்தி ரேவச, அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா – பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் என்று என்னுடைய இந்த ப்ரக்ருதியானது எட்டுவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது - என்றும், கீதை (7-5) - அப்ரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் – இப்படியாகப் பிரிக்கப்பட்டுள்ள இது “அபரா” என்னும் என்னுடைய ஜடப்ரக்ருதி ஆகும். இதனைக் காட்டிலும் வேறாக உள்ள எந்த ஒரு ப்ரக்ருதிய்னால் அனைத்தும் தாங்கப்பட்டுள்ளதோ அதுவே என்னுடைய ஜீவரூபமான “பரா” என்னும் ப்ரக்ருதி ஆகும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து சேதந அசேதநங்களையும் தனது சரீரமாகக் கொண்டவனாகவும்; கீதை (18-61) - ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேசே அர்ஜுந திஷ்ட்டதி, ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா – சரீரம் என்னும் இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து ஜீவாத்மாக்களையும், அவற்றின் அந்தர்யாமியாக உள்ள ஈச்வரன், தனது மாயை மூலம் அவரவர்களுடைய கர்மங்களுக்கு ஏற்ப சுழலும்படிச் செய்து, அவர்களுடைய இதயத்தில் நிற்கிறான் - என்றும், கீதை (15-15) - ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதி: ஜ்ஞாநம போஹநஞ்ச – நானே அனைத்து உயிர்களுடைய இதயத்தில் உள்ளேன். என்னிடமிருந்தே ஞாபகமும் மறதியும் ஏற்படுகின்றன - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து உயிர்களுடைய இதயத்தில் நின்று அவர்கள் தங்கள் செயல்களைச் செய்தல் மற்றும் செய்யாமல் இருத்தல் ஆகியவற்றை நியமித்தபடி உள்ள ஈச்வரனுடைய நியமிக்கும் தன்மையானது கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (1-1-7) – உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்து - என்றும், திருவாய்மொழி (1-1-10) - கரந்த சிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்து – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், அனைத்து சேதந அசேதநங்களைச் சரீரமாகக்கொண்டவன் என்பதையும்; திருவாய்மொழி (1-1-6) – நின்றனர் - என்பதன் மூலம் அனைத்து பொருள்களுடைய செயல் புரிகின்ற நிலை, செயல் புரியாமல் உள்ல நிலை போன்றவை தன் வசப்பட்டவை என்பதாக இருக்கின்ற நியமிக்கும் தன்மையைக்கொண்டவன் என்பதையும் அருளிச்செய்தார். – (ஸௌலப்ய) கீதையில் (8-14) - தஸ்யாஹம் ஸுலப: பார்த்த நித்யயுக்தஸ்ய யோகிந: – எப்போதும் இடைவிடாமல் என்னுடன் இருக்கவேண்டும் என்ற ஆசை கொண்ட ஞானிக்கு நான் சுலபமாக அடையும்படி உள்ளேன் - என்றும், கீதை (4-8) - பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்த்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே - சாதுக்களைக் காப்பாற்றவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப பக்தியில் நிலைநிற்பவர்கள் காரணமாகவும், தனது அவதாரம் காரணமாகவும் வெளிப்படுவதான எளிமைத்தன்மை கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும், திருவாய்மொழி (1-3-1) – பத்துடை அடியவர்க்கு எளியவன் - என்றும், திருவாய்மொழி (1-3-2) – பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் அவன் மீது சிறிதளவே ஆசை கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றுவதற்காகவும், அவதாரம் காரணமாகவும் அவனுக்குள்ள எளிமையைக் கூறுகிறார். (ஸாம்ய) - கீதையில் (9-29) - ஸமோஹம் ஸர்வபூதேஷு நமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய: - அனைத்து உயிர்களிடமும் நான் சமமாகவே உள்ளேன். எனக்குப் பகைவரோ விருப்பமானவரோ என்று பேதம் இல்லை - என்று அவனை ஆராதிக்கும்விதத்தில் எந்த வேறுபாடும் இன்றியுள்ள நிலை கூறப்பட்டது. இதே போன்று நம்மாழ்வாரும் (1-2-6) – முற்றவும் நின்றனன் - என்பதன் மூலம் அவனைக் அண்டும் முறைகளில் அவன் அனைவருக்கும் சமமாகவே உள்ளதை அருளிச்செய்கிறார். (அஹங்கார தோஷம்) - கீதையில் (3-27) - அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமதி மந்யதே - அஹங்காரத்தால் மயக்கப்பட புத்தியைக் கொண்டவன், தானே இவற்றைச் செய்வதாக எண்ணுகிறான் - என்று அஹங்காரத்தினுடைய தோஷம் கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (1-2-3) – நீர் நுமதென்றிவை வேர் முதல்மாய்த்து - என்பதன் மூலம் ஸம்ஸாரத்திற்கான காரணமாக அஹங்காரத்தை உரைப்பதால், அதன் தோஷத்தை அருளிச்செய்தார் என்றாகிறது. – (இந்த்ரிய பலம்) - கீதை (2-60) – யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: - பற்றுதல் அழியாத காரணத்தால், மனதைக் கலக்கும் இந்திரியங்களானவை, அறிவுள்ள மனிதனின் புத்தியையும் மனதையும் கூடக் கவர்ந்து இழுக்கின்றன - என்பதன் மூலம் இந்த்ரியங்களின் வலிமையைக் கூறியது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (7-1-6) - விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் - என்பதன் மூலம் இந்த்ரியங்களுடைய வலிமையை அருளிச்செய்தார். (மந: ப்ராதாந்ய) - கீதை (6-34) - சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் – க்ருஷ்ணா! இந்த மனம் எதிலும் நிலையாக நிற்பதில்லை. இந்த்ரியங்களை எளிதாக மயக்கவல்லது, உறுதியும் வலிமையும் கொண்டது, அதனை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போன்று கடினமானது - என்றும், கீதை (4-35) - அஸம்சயம் மஹோபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் அப்யாஸேநது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே – இந்த மனம் சஞ்சலம் நிறைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. இதனை வசப்படுத்துவது கடினமே ஆகும். ஆனால் தொடர்ந்த பயிற்சி மற்றும் பற்றின்மை மூலம் இது வசப்படுத்தப்படுகிறது - என்றும் உள்ள ச்லோகங்கள் மூலம், மற்ற இந்த்ரியங்களைக் காட்டிலும் மனதிற்கு உள்ள முதன்மை கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (5-1-4) – மனத்தை வலித்து - என்பதன் மூலம், மனத்தை அடக்குவதில் உள்ள கடினத்தை உரைப்பதால் மனத்தின் முதன்மையை அருளிச்செய்தார் என்றாகிறது. (கரண நியமந) - கீதையில் (2-61) - தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத் மத்பர: வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டதா - அனைத்து புலன்களையும் தன்வசப்படுத்திய ஒருவன், என்னையே உயர்ந்த கதி என்று எண்ணியபடி த்யானித்தில் இருக்கவேண்டும்; காரணம் யார் ஒருவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பட்டு உள்ளனவோ அவனுடைய புத்தியானது ஸ்திரமாக உள்ளது - என்றும், கீதை (8-12) - ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி ந்ருத்த்யச - ஞானத்தின் வழியாக உள்ள அனைத்து இந்த்ரியங்களையும் மற்ற விஷயங்களிருந்து விலக்கி - என்றும் உள்ள ச்லோகங்களால் கரணங்களை அடக்குதல் கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2-1-8) – உள்ளம் – என்பதன் மூலம், கரணங்களை அடக்குவது குறித்து அருளிச்செய்தார். – (ஸுக்ருதிபேத) - கீதை (7-16) - சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந, ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுர் அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப - அர்ஜுனா! தான் இழந்த செல்வத்தைப் பெற விரும்புகிறவன், கைவல்யத்தை விரும்புகிறவன், செல்வத்தைப் புதிதாக அடைய விரும்புகிறவன், என்னைக் குறித்து அறிய விரும்புகிறவன் ஆகிய நான்குவிதமான மனிதர்கள் என்னை ஆராதிக்கிறார்கள் - என்று நன்மையுடன் கூடிய மனிதர்களில் உள்ள வேறுபாடு கூறுகிறது. இதனைப் போன்றே நம்மாழ்வாரால் திருவாய்மொழியில் (4-1-1) - பொருநாடு காணவிம்மையிலே பிச்சைதாங் கொள்வர் – என்பதன் மூலம் இழந்து செல்வத்தைப் பெறவிரும்பும் ஒருவனும், திருவாய்மொழி (4-1-10) - இறுகலிறப்பென்னும் - என்று கைவல்யத்தை விரும்பும் ஒருவனும், திருவாய்மொழி (4-1-8) - குணங்கொள் நிறைபுகழ் மன்னர் - என்று புதிய செல்வத்தை விரும்பும் ஒருவனும், திருவாய்மொழி (4-1-1) – திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மின் - என்று பகவானைச் சரணம் புகுந்த ஞானியும் கூறப்பட்டனர். (தேவாஸுர விபாக) - கீதையில் (16-6) - த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச - இந்த உலகில் தெய்வப்பண்புகள் கொண்டவர்கள், அசுரப்பண்புகள் கொண்டவர்கள் என இருவிதமான பிறவிகள் உண்டு - என்றும், கீதை (16-5) - தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயா ஸுரீமதா - தெய்வப்பண்பு மோக்ஷத்திற்கும், அசுரப் பண்பு பந்தம் என்ற தாழ்ந்த நிலைக்கும் காரணமாகிறது - என்றும் உள்ள ச்லோகங்களால் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகியவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (5-2-5) - அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல் - என்றும், திருவாய்மொழி (10-7-5) - நண்ணாவசுரர் நல்லவமரர் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் தேவர்கள் மற்றும் அஸுரர்கள் ஆகியோரின் வேறுபாட்டை அருளிச்செய்தார். (விபூதி யோக) – கீதையில் (10-19) – ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்ம நச்சுபா: ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே – குருவம்சத்தில் வந்தவனே! எனது விபூதிகள் தெய்வீகமானவை ஆகும். அவற்றில் சிலவற்றை உனக்கு உரைக்கிறேன்; காரணம் அவற்றுக்கு முடிவு என்பது இல்லை - என்றும், கீதை (10-21) – ஆதித்யாநாமஹம் விஷ்ணு: ஜ்யோதிஷாம் ரவிரம்சுமாந் – பன்னிரண்டு ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாகவும், இருளைப் போக்கும் பொருள்களில் நான் சூரியனாகவும் உள்ளேன் - என்றும் உள்ள ச்லோகங்கல் மூலம் விபூதியோகம் கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (3-4-1) – புகழுநல்லொருவன் - என்றும், திருவாய்மொழி (6-3-1) - நல்குரவும்- என்றும், திருவாய்மொழி (7-8-1) – மாயாவாமனா - என்றும் உள்ள திருவாய்மொழிகளில் விபூதியோகத்தை அருளிச்செய்தார். (விச்வரூப தர்சநம்) - கீதையில் (11-5) - பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷ ஸங்காந் ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ச்ச ஸர்வாநுரகாம்ச்ச தீப்தாந் - க்ருஷ்ணா! உனது திருமேனியில் நான் அனைத்து தேவர்களையும், அனைத்து உயிரினங்களையும், தாமரையில் வீற்றுள்ள நான்முகனையும், சிவனையும், அனைத்து ரிஷிகளையும், ஸர்ப்பங்களையும் காண்கிறேன் - என்பது போன்ற ச்லோகங்களால் விச்வரூப தரிசனம் கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (6-9-1) நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய் - என்பதன் மூலம் விச்வரூப தரிசனத்தை உரைத்தார். (ஸாங்க பக்தி) - கீதையில் (9-34) - மந்மநா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: - என்னிடமே மனதை நிலைநிறுத்துவாயாக; எனது பக்தனாக இருப்பாயாக; என்னை வணங்கி, பஜித்து, மனம் மற்றும் இந்த்ரியங்களுடன் கூடிய உனது சரீரத்தை என்னிடமே ஈடுபடுத்தி, நீ சரணம் அடையத்தக்க ஒரே இடம் என்று என்னையே கொள்வாயாக - என்பதன் மூலம் தகுந்த அங்கங்கள் கொண்ட பக்தி கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (1-3-5) - வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களைகட்டுணக்குமின் பசையற - என்றும், திருவாய்மொழி (5-2-9) - மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை நாவிற் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே - என்றும், திருவாய்மொழி (9-10-1) – மாலை நண்ணி காலை மாலை கமல மலரிட்டு தொழுதெழுமினோ - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் அங்கங்களுடன் கூடிய பக்தியை அருளிச்செய்தார். (ப்ரபத்தி த்வைவித்யம்) – கீதையில் (7-14) – தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா, மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே - அந்த உலகில் உள்ள அனைத்திற்கும் அப்பாற்பட்டதும், மூன்று குணமயமாக உள்ளதும் ஆகிய எனது மாயையானது கடப்பதற்கு அரிதே ஆகும்; யார் என்னைச் சரணம் புகுகிறார்களோ அவர்கள் இந்த மாயையை எளிதாகக் கடக்கிறார்கள் - என்றும், கீதை (18-62) - தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேந பாரத – அனைத்துவிதங்களிலும் ஸர்வேச்வரனைக் காரணம் அடைவாயாக - என்றும் உள்ள ச்லோகங்கள் மூலம் அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியும், கீதை (18-66) - ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – அனைத்து தர்மங்களையும் துறந்து - என்பதன் மூலம் சுதந்திரமானவன் என்பதை விடுத்த ப்ரபத்தியும் கூறப்பட்டது. இது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழி (1-3-5) – அவனுடையுணர்வும் கொண்டுணர்ந்து - என்று அவன் அருளிச்செய்த ப்ரபத்தி குறித்த ஞானத்தைத் துணையாகக் கொண்டு, அதனை அறிதல் என்பதால் பக்திக்கு அங்கமாக உள்ள ப்ரபத்தியையும்; திருவாய்மொழி (9-1-7) – மற்றொன்றில்லை - என்றும், திருவாய்மொழி (9-10-5) – சரணமாகும் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் சுதந்திர ப்ரபத்தியையும் அருளிச்செய்தார். ஆக இப்படியாக நான்முகன் திருவந்தாதி (71) - மாயனன்றோதிய வாக்கு - என்பதற்கு ஏற்ப ஸ்ரீமத்பகவத்கீதையுடன் ஒன்றாகக் கூறப்படுகிறது. “ப்ரபத்தி த்வைவித்யாதிகளாலே” என்பதில் உள்ள “ஆதி” என்ற பதம் மூலம் கீதையில் (4-9) - ஜந்ம கர்மசமே திவ்யமேவம் யோவேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந அர்ஜூனா! - எனது பிறப்பு மற்றும் செய்கை தெய்வீகமானவை ஆகும். அவற்றில் களங்கம் ஏதும் இல்லை. இவ்விதம் யார் அறிகிறானோ அவன் சரீரத்தை துறந்த பின்னர் மீண்டும் ஒரு பிறவியை அடையாமல் என்னையே அடைகிறான் - என்று கூறப்பட்டது போன்றே நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (1-3-11) – இவை பத்தும் வல்லாரமரரோடுயர்விற் சென்றறுவர் தம் பிறவியஞ்சிறை - என்பதன் மூலம் அவனுடைய அவதார ரஹஸ்யம் குறித்து உரைத்தார் என்பதும்; கீதையில் (9-26) - பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யுபஹ்ருத மச்நாமி ப்ரயதாத்மந: - யார் எனக்கு பக்தியுடன் இலை, மலர், பழம், தண்ணீர் போன்றவற்றைச் சமர்ப்பிக்கிறானோ, பக்தியுடன் பலன் எதிர்பாராமல் அளிக்கப்பட்ட அவற்றை நான் ப்ரியத்துடன் ஏற்கிறேன் - என்று கூறப்பட்டது போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் (1-6-1) - பிரிவகையின்றி நன்னீர் தூய்ப்புரிவதுவும் புகை பூ - என்பதன் மூலம் எளிதாக ஆராதிக்கப்படக்கூடிய விதமாக அவன் உள்ளான் என்பதும் கூறப்பட்டது. மேலும் சரீரத்தையே ஆத்மா என்று எண்ணியுள்ள ஸம்ஸாரிகளைச் சரியான வழியில் தகுந்த பேற்றினை அடைய வைக்கும் சாதனங்களில் ஈடுபடுத்துதல் மற்றும் ஸாத்ய உபாயங்களில் நிலை நின்று, ஸித்தோபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில் வைபவத்தை வெளிப்படும்படியாக உரைத்தல் ஆகியவை காண்க.