Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 188)

மூன்றாம் ப்ரகரணம்

நீர்பால் நெய்யமுதாய் நிரம்பின வேரி தெளிக்குமாபோலே பரபக்த்யாதிமய ஜ்ஞாநாம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழிபட்டு அவாவிலந்தாதி யென்று பேர்பெற்றது.

இவர் பக்கல் ப்ரபந்தம் அவதரிக்கத் தொடங்கின காலத்தை யருளிச்செய்தார் கீழ்; இதுதான் அவதரிக்கிறவளவில் “இப்படி நாமவனைக் கவி பாடவேணும்” என்று ஸங்கல்பித்திருந்து பாடினாரோ என்னுமாகாங்க்ஷையிலே, இதின் அவதரண க்ரமத்தை யருளிச்செய்கிறார் மேல் (நீர்பால்) என்று தொடங்கி.

– நம்மாழ்வார் மூலமாக இந்தத் திருவாய்மொழி அவதரித்த காலத்தை மேலே அருளிச்செய்தார். இத்தகைய திருவாய்மொழி அவதரிக்கும்போது “இவ்விதம் நாம் ஸர்வேச்வரனைக் குறித்து உரைக்கவேண்டும்” என்று திருவுள்ளத்தில் எண்ணியபடி இவர் பாடினாரா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை அளிக்கும்விதமாக இந்தத் திருவாய்மொழி அவதாரித்த வரிசையைக் கூறுகிறார்.

அதாவது நீர் பாலாய், பால் நெய்யாய், நெய் அம்ருதமாய் அத்தாலே நிரம்பினதோரேரி பொறாமல் நெளித்து உடையுமாபோலே; “மயர்வற மதிநலமருளினன்” என்கிறவிடத்தில் கர்மஜ்ஞாநாநு க்ருஹீதையான பக்தியின் ஸ்தாநத்திலே பகவத் ப்ரஸாதமாய், அதடியாக பரமபக்தி தொடங்கி பிறக்கையாலே, ஜ்ஞாநம் முதலிலே பரபக்தி ரூபமாய், பரபக்தியானது பரஜ்ஞாநமாய், பரஜ்ஞாநமானது பரமபக்தியாய், “அச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி:” என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாய் நிறைந்த ஜ்ஞாநமாகிற அம்ருதாப்தியானது, ஆச்ரயமழியாமல் பரிவாஹாபேக்ஷை பிறந்து, “நிமியும் வாய்” என்கிறபடியே நெளிகிற வாய்கரையாலே “மிடைந்த சொல்” என்றகிபடியே சொற்கள்தான் “நாமிங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோமாக வேணும்” என்று “என்னைக்கொள், என்னைக்கொள்” என்று மேல்விழுகையாலே நெருங்கிக் கொண்டு, “மொழிபட்டோடும்” என்கிறபடியே வசநரூபமாய் ப்ரவஹித்து இப்படி பரபக்த்யாத்யவஸ்த்தா த்ரயாபந்ந பக்திப்ரேரிதமாய் அவதரிக்கையாலே “அவாவி லந்தாதிகளா லிவையாயிரமும்” என்று பக்தி பலாத்காரத்தாலே பிறந்தவந்தாதியான ஆயிரமென்று நிரூபகமாம்படியாய்த்தென்கை. ஆக, இவர் இப் ப்ரபந்தமருளிச் செய்கைக்கடியான ப்ராவண்யம் பிறந்த காலமும் அருளிச்செய்யத் தொடங்கின காலமும், இதினுடைய ஸர்வாதிகாரத்வமும், ரஸ்யதையும், அவதரித்த க்ரமமும் சொல்லிற்றாய்த்து.

– (நீர்பால் நெய்யமுதாய் நிரம்பின ஏரி) - நீரானது பாலாக, பாலானது நெய்யாக, நெய்யானது அமிர்தமாக, அந்த அமிர்தத்தால் நிரம்பிய ஒரு ஏரி. (நெளிக்குமாபோலே) - தாங்க இயலாமல் தளர்ந்து உடைவது போன்று. (பரபக்தி ஆதிமய ஜ்ஞாந அம்ருத அப்தி) – திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருளினன் - என்பதில் கர்மம், ஞானம் ஆகியவை காரணமாக ஏற்படுகின்ற பக்தியின் இடத்தில் பகவானுடைய ப்ரஸாதமாக, அதன் காரணமாக பரபக்தி தொடக்கமாகப் பிறப்பதால், ஞானம் முதலில் பரபக்தி ரூபமாகவும், பரபக்தி என்பது ப்ரஜ்ஞானமாகவும், ப்ரஜ்ஞானமானது பரமபக்தியாகவும். ஸ்தோத்ரரத்னம் (3) - அச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி: - ஸர்வேச்வரனிடம் கொண்ட பக்தி, உண்மையான ஞானம், இவையாக உள்ள அமிர்தக்கடலில் வெள்ளம் போன்ற மங்களமான திருவாக்கு மூலமாக - என்பதற்கு ஏற்ப பரபக்தி முதலானவற்றால் நிறைந்துள்ள ஞானம் என்ற அமிர்தக்கடலானது. (நிமிகிற வாய்கரை) - தான் ஈடுபட்டு நிற்பதற்கு ஏற்றபடி அழியாமல் நிறைந்து நிற்கவேண்டும் என்ற விருப்பம் உண்டாகி, திருவாய்மொழி (6-5-2) – நிமியும் வாய் - என்பதற்கு எற்ப நெளிகின்ற வாய்கரையில். (மிடைந்து) - திருவாய்மொழி (1-7-11) – மிடைந்த சொல் - என்பதற்கு ஏற்ப சொற்கள் அனைத்தும் “நாம் இங்கு இருந்து கைங்கர்யம் செய்யவேண்டும்” என்று எண்ணி, “என்னைப் பயன்படுத்தவேண்டும், என்னைப் பயன்படுத்தவேண்டும்” என்று நம்மாழ்வாரிடம் விழுந்தபடி நெருங்கி நின்று. (மொழிபட்டு) – திருவாய்மொழி (8-10-5) – மொழி பட்டோடும் - என்பதற்கு ஏற்ப சொற்கள் வசந ரூபமாகப் பெருகி நின்று, பரபக்தி முதலான மூன்று நிலைகளை அடைந்த பக்தியால் தூண்டப்பெற்று அவதரிக்கிறது. ஆகவே, (அவாவில் அந்தாதி என்று பேர் பெற்றது) – திருவாய்மொழி (10-10-11) – அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் - என்பதற்கு ஏற்ப பக்தியின் வேகத்தால் பிறந்த அந்தாதியான ஆயிரம் என்ற பெயர் பெற்றது. இப்படியாக இந்த ப்ரபந்தம் அருளிச்செய்தமைக்குக் காரணமாக உள்ள ப்ரேமை பிறந்த காலத்தையும், அருளிச்செய்த காலத்தையும், இது அனைவருக்குமே ஏற்றதாகும் என்பததையும், இதன் இனிமையையும், அவதரித்த முறையையும் உரைத்தார்.