Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 187)

மூன்றாம் ப்ரகரணம்

இவற்றில் ப்ராவண்யம் இவள் பரமே யென்னவுண்டாய் ஷோடச கலாபூர்ணமான சந்த்ரமண்டலம்போலே பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே தேவபோக்யமானவதில் அம்ருதம் போலன்றிக்கே என்னாத் தமிழரிசைகாரர் முதற்பத்தர் மானவரென்னம்மான் பார் பரவென்னும்படி ஸேச்வரவிபூதி போக்யமான பாலோடமுதன்ன மென்மொழி முகஞ்செய்தது.

இத்திருப்பதிகளில் ப்ராவண்யம் இவர்க்குண்டாய்த்தெப்போது? இவர் தாம் ப்ரபந்த மருளிச்செய்யத் தொடங்கிற்று எத்தனை திருநக்ஷத்ரத்தளவிலே? இது தனக்கு போக்த்ரு நியாமமுண்டோ? இதன் போக்யத்தை தானிருக்கும்படி யெங்ஙனே யென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் மேல் (இவற்றில் ப்ராவண்யம்) என்று தொடங்கி.

– இத்தகைய திவ்யதேசங்களில் நம்மாழ்வாருக்கு ஆழ்ந்த ஈடுபாடு எப்போது ஏற்பட்டது? இத்தகைய ப்ரபந்தங்களை இவர் எந்த வயதில் அருளிச்செய்தார்? இந்த ப்ரபந்தங்களுக்கான அதிகாரி தகுதி உண்டா? இந்தப் ப்ரபந்தங்களுடைய இனிமை எத்தகையது? இது போன்ற கேள்விகளுக்கு இந்தச் சூர்ணையில் விடை அருளிச்செய்கிறார்.

அதாவது இவ்வர்ச்சாவதார ஸ்தலங்களில் ப்ராவண்யம் “முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்னும்படி, பருவம் நிரம்புவதற்கு முன்னேயுண்டாய்; பதினாறு கலைகளாலும் பரிபூர்ணமான சந்த்ரமண்டலம் போலே, பதினாறு திருநக்ஷத்ரம் பூர்ணமானவாறே. “க்ருஷ்ணபக்ஷேமரைச் சச்வத் பீயதே வை ஸுதாமய:” என்கிறபடியே தேவர்களுக்கு போக்யமாகையாலே போக்த்ரு நியமமுடைத்தான அந்த சந்த்ரமண்டலத்தில் அம்ருதம் போலன்றிக்கே, “என்னாவிலின்கவி” என்றும், “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்” என்றும், “தூமுதல் பத்தர்க்கு” என்றும், “கேட்டாரார் வானவர்கள்” என்றும், “தென்னாவென்னு மென்னம்மான்” என்றும், “பார் பரவின்கவி” என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்வபாவிபாகம், ஸூரிஸம்ஸாரி விபாகம், ஈசேசிதவ்ய விபாகமற ஈச்வரனோடே கூட இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய், “பாலொடமுதன்ன வாயிரம்”, “அமுதமென்மொழி” என்கிறபடியே வாச்ய வாசகங்களும் ஸம்ச்லேஷ ரஸத்தாலே பாலுமமுதும் கலந்தாப்போலேயாய், போக்யதாதிசயத்தாலும் புஜித்தார்க்கு நித்யத்வத்தைக் கொடுக்கையாலும் அம்ருதஸமமாய் அதில் வ்யாவ்ருத்தமான மார்த்தவத்தை யுடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த் தென்கை.

– (இவற்றில் ப்ராவண்யம்) - இத்தகைய அர்ச்சாவதார திவ்யதேசங்களில் உள்ள ஈடுபாடும் ப்ரேமையும், திருவிருத்தம் (60) - முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே – என்பதற்கு ஏற்ப பருவம் நிரம்புவதற்கு முன்பாகவே ஏற்பட்டதாக. (ஷோடச கலாபூர்ணமான சந்த்ரமண்டலம்போல) – பதினாறு கலைகள் நிறைந்த சந்த்ரமண்டலம் போன்று, (பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே) – பதினாறு வயது முடிந்தபோது, (தேவ போக்யமான அதில் அம்ருதம்போல் அன்றிக்கே) ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-11-22) – க்ருஷ்ணபக்ஷேமரைச் சச்வத் பீயதே வை ஸுதாமய: – க்ருஷ்ணபக்ஷத்தின்போது அமிர்தமயமான சந்த்ரன் தேவர்களால் உண்ணப்படுகிறான் - என்பதற்கு ஏற்ப, தேவர்களுக்கு இனிமையான உணவாக உள்ளதால், அதிகாரி நியமம் உள்ளதான அந்த சந்த்ரனில் உள்ள அமிர்தம் போன்று அல்லாமல், (என்னா) – திருவாய்மொழி (3-9-1) – என் நாவில் இன்கவி - என்றும், (தமிழர் இசைகாரர்) - திருவாய்மொழி (1-5-11) - பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் - என்றும், (முதல் பத்தர்) - திருவாய்மொழி (7-9-3) – தூமுதல் பத்தர்க்கு – என்றும், (வானவர்) - திருவாய்மொழி (10-6-2) - கேட்டாரார் வானவர்கள் – என்றும், (என்னம்மான்) - திருவாய்மொழி (10-7-5) - தென்னாவென்னு மென்னம்மான் - என்றும், (பார்பரவு) - திருவாய்மொழி (7-9-5) – பார் பரவு இன்கவி - என்றும், (என்னும்படி) - கூறுவதற்கு ஏற்ப “நான் – மற்றவர்” என்ற வேறுபாடு, “நித்யஸூரிகள் - ஸம்ஸாரிகள்” என்ற வேறுபாடு, “நியமிப்பவன் – நியமிக்கப்படும் பொருள்” என்ற வேறுபாடு போன்ற அனைத்தும் நீங்கும்விதமாக. (ஸேச்வர விபூதி போக்யமான) – ஸர்வேச்வரனுடன் சேர்ந்து இரண்டுவிதமான விபூதிகளும் அனுபவிப்பதற்கு ஏற்றபடியாக, (பாலோடு அமுதன்ன மென்மொழி) – திருவாய்மொழி (8-6-11) – பாலொடு அமுது என்ன ஆயிரம் – என்றும், திருவாய்மொழி (6-5-2) - அமுதமென்மொழி – என்றும் கூறுவதற்கு ஏற்ப, கூறப்பட்ட சொல் மற்றும் அதனால் உணர்த்தப்படும் பொருள் என்ற இரண்டும் சரியாகக் கலந்த சுவை காரணமாக பாலும் அமிர்தமும் ஒன்றாகச் சேர்ந்தது போன்றும், அளவற்ற இனிமை காரணமாகத் தன்னைப் பருகுபவர்களுக்கு நித்யத்தன்மை அளிப்பதாக உள்ளதால் அமிர்தத்தைப் போன்றும், அதிலிருந்து வேறுபட்ட மென்மையுடன் கூடியதாகவும் உள்ள சொற்கள், (முகம் செய்தது) - நம்மாழ்வாரிடமிருந்து வெளிப்பட்டது.