Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 186)
மூன்றாம் ப்ரகரணம்
அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர் பெற்றது.
– அதாவது, “திருமாலிருஞ்சோலைமலை யென்றேனென்னத் திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்” என்று ஸ்வாங்கீகாரத்துக் குடலான ஸுக்ருத லவமில்லாதாரையும் மடிமாங்காயிடுமாப்போலே “என்னூரைச் சொன்னாய்” இத்யாதியான அஜ்ஞாத ஸுக்ருதங்களை யாரோபித்தும் அங்கீகரிக்கைக்கிடம் பார்க்குமவனுடைய ஸ்வாமித்வம் : “பெருநகரரவணை மேல்” என்று கண்வளர்ந்தருளுகிற திருப்பேர் நகரிலே ப்ரஸித்தமாய்த்தென்கை. ஆக திருப்பதிகள்தோறு மோரோ குணம் ப்ராதாந்யேந ப்ரகாசிக்கு மென்னுமிடம் இவரநுஸந்தித்த திருப்பதிக ளெல்லாவற்றிலும் தர்சிப்பித்தாராய்த்து.
– (அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும்) – திருவாய்மொழி (10-8-1) - திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்னத் திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான் - என்பதற்கு ஏற்ப தன்னுடைய ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு ஏற்றவிதத்தில் புண்ணியங்கள் ஏதும் இல்லாதவர்களாக இருந்தாலும், மடிமாங்காய் அளிப்பது போன்று, “எனது ஊரை உரைத்தாய்” என்பது போன்றதான அறியாமல் செய்த புண்ணியங்களையும் அவர்கள் மீது ஏற்றிக்கொண்டு அங்கீகரிப்பதற்கான இடம் கொண்ட அவனுடைய எஜமானத்தன்மை, (பெருநகரிலே பேர் பெற்றது) - திருவாய்மொழி ( 5-9-3) – பெருநகர் அரவணை மேல் – என்பதற்கு ஏற்ப திருக்கண்கள் வளர்கின்ற திருப்பேர்நகரில் வெளிப்படுகிறது. இப்படியாக திவ்யதேசங்கள் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் முதன்மையான குணம் இன்னதாகும் என்று நம்மாழ்வார் அனுபவித்த திவ்யதேசங்கள் அனைத்திலும் காண்பித்தார்.