Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 185)
மூன்றாம் ப்ரகரணம்
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள்கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும்.
அதாவது, முமுக்ஷுக்களுக்கு த்யாஜ்யமான தேஹத்தில், சரம தேஹமாகையாலே, மஹிஷியுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜபுத்ரனைப்போலே “வஞ்சக் கள்வனாய் நெஞ்சு முயிருமுள் கலந்து”, “மாயவாக்கையிதனுட் புக்கு” என்கிறபடியே இதின் தோஷம் பாராமல் உள்புக்கு, “திருமாலிருஞ்சோலை மலையே” இத்யாதிப்படியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதிலேகதேசத்திலே பண்ணி, “மங்கவொட்டு” என்று கால்கட்டி விடுவிக்க வேண்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம் “மருள்கள் கடியும் மணிமலை” என்று ஸர்வருடையவு மஜ்ஞானத்தை ஸவஸநமாகப் போக்குமதாய், “மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை” என்று போக்யதா ப்ரகர்ஷத்தாலே போக்தாக்களைப் பிச்சேற்றவற்றான சோலையை யுடைய தெற்குத்திருமலையிலே ஸம்ருத்தமாய்ச் சொல்லுமென்கை. (பொழில்) என்கிற ஸமாதியாலேயாய்த்து (தழைக்கும்) என்றது.
– (த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்) - முழுக்ஷுக்களால் கைவிடத்தக்கதான சரீரத்தில் பிறவிகள் முடிகின்ற சரீரம் என்பதால், மனைவியின் எச்சிலை விரும்பும் அரசகுமாரன் போன்று, திருவாய்மொழி (10-7-1) – “வஞ்சக் கள்வனாய் நெஞ்சு முயிருமுள் கலந்து – என்றும், திருவாய்மொழி (10-7-3) – மாயவாக்கையிதனுட் புக்கு - என்றும் கூறுவதற்கு ஏற்ப இப்படிப்பட்ட சரீரத்தின் தாழ்வை நோக்காமல் இதன் உள்ளே புகுந்து திருவாய்மொழி (10-7-8) - திருமாலிருஞ்சோலை மலையே – என்பதற்கு ஏற்ப மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்கள் அனைத்திலும் கொண்டுள்ள விருப்பத்தை இந்தச் சரீரத்தில் வைத்து திருவாய்மொழி (10-7-10) – மங்கவொட்டு - என்பதற்கு ஏற்ப அவனைக் கால்கட்டி மட்டுமே விடுவிக்கவேண்டும்படியாக அவனுக்கு ஏற்பட்ட காதல்மயக்கம் என்பது : (மருள்கள் கடியும்) – திருவாய்மொழி (1-7-7) - மருள்கள் கடியும் மணிமலை – என்பதற்கு ஏற்ப அனைவருடைய அறியாமை என்பதை அடியுடன் நீக்குவதாகவும், (மயல்மிகு) - திருவாய்மொழி (2-10-3) - மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை - என்பதற்கு ஏற்ப இனிமையின் மிகுதி காரணமாகக் காண்பவர்களை மயங்கும்படிச் செய்வதாகவும் உள்ளதான (பொழிலிலே) - சோலைகள் நிறைந்த தெற்குத் திருமலையில் (தழைக்கும்) - நிறைவாக இருக்கும். “பொழில்” என்பதன் காரணமாக “தழைக்கும்” என்கிறார்.