Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 184)
மூன்றாம் ப்ரகரணம்
மோக்ஷ தாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வலம் மிக்க நதியிலே கரைபுரளும்.
(மோக்ஷ தாநத்தில்) இத்யாதி. அதாவது “அருள்தருவானமைகின்றானது நமது விதிவகை” என்றும், “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” என்றுமிப்படி ஸர்வஸமனானவன் ஆச்ரிதர்க்கு மோக்ஷ ப்ரதாநம் பண்ணுமளவில் அவர்கள் விதித்தபடி செய்வானாய் நிற்கிற ஆச்ரித பாரதந்த்ர்யம்; “வளம் மிக்க வாட்டாற்றான்” என்று ரக்ஷ்யவர்க்கம் குறைவற்ற தேசமாகையாலே அவனுக்கு ஸம்பத்து மிக்கிருக்கிற திருவாட்டாற்றிலே அமர்யாத்மாக ப்ரவஹிக்குமென்கை. கரை புரளுமென்று ஆறு என்கிற ஸமாதியாலே.
– (மோக்ஷ தாநத்தில்) - மோக்ஷ தானத்தில் (ப்ரணத பாரதந்த்ர்யம்) - திருவாய்மொழி (10-6-1) – அருள்தருவானமைகின்றானது நமது விதிவகை – என்றும், திருவாய்மொழி (10-6-3) - விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்துவிதத்திலும் ஒரே போன்றுள்ள ஸர்வேச்வரன் தனது அடியார்களுக்கு மோக்ஷம் அளிக்கும்போது அவர்கள் கூறியபடி செய்பவனாக நிற்கின்ற அடியார்களுக்கு வசப்பட்டுள்ள தன்மை என்பது, (வளம் மிக்க நதியிலே) – திருவாய்மொழி (10-6-3) - வளம் மிக்க வாட்டாற்றான் - என்பதற்கு ஏற்ப பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்கள் சிறிதும் குறைவில்லாமல் உள்ள திவ்யதேசம் என்பதால் அவனுக்குச் செல்வம் மிகுதியாக உள்ளதான திருவாட்டாறு என்ற திவ்யதேசத்தில், (கரை புரளும்) – கரையைக் கடந்து புரண்டு ஓடும். “வாட்டாறு” என்பதில் உள்ள ஆறு என்பதன் காரணமாக “கரை புரளும்” என்கிறார்.