Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 183)
மூன்றாம் ப்ரகரணம்
ஸஸைந்ய புத்ர சிஷ்ய ஸாத்ய ஸித்த பூஸுரார்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்தசயநத்திலே வ்யக்தம்.
(ஸஸைந்யேத்யாதி) அதாவது “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணி செய்வர் விண்ணோர்” என்கிற ஸேநா ஸஹிதரான ஸேனைமுதலியாராகிற “யத்ர பூர்வே ஸாத்யா:” என்கிற நித்யஸூரிகளில் தலைவரான ஸாத்யருடையவும், “அமரராய்த் திரிகின்றார்கட்காதி” என்கையாலே புத்ரர்களான ப்ரஹ்மாதிகளாகிற ஸித்தருடையவும், “படமுடையரவில் பள்ளிபயின்றவன் பாதம் காண நடமினோ நமர்களுள்ளீர்” என்று இவருபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூஸுரருடையவும் அர்ச்சநத்துக்கு, திருமுகமும் திருநாபியும் திருவடிகளுமாகிற விவற்றை திருவாசல் மூன்றாலும் தர்சிப்பிக்கிற, நித்யஸூரிகள் ஸம்ஸாரிகள் என்று விசேஷம் பாரத ஸாம்யகுணம் திருவநந்தபுரத்தில் கண்வளருகிற ப்ரகாரத்திலே வ்யக்தமாயிருக்கும் மென்கை.
– (ஸஸைந்ய ஸாத்ய) – திருவாய்மொழி (10-2-6) – அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணி செய்வர் விண்ணோர் - எனப்படும் சேனையுடன் சேர்ந்துள்ள ஸேனைமுதலியார் என்பவராகிற புருஷஸுக்தம் – யத்ர பூர்வே ஸாத்யா: – எல்லையற்ற காலமாக இருந்துவரும் நித்யஸூரிகள் எங்குள்ளார்களோ - என்பதற்கு ஏற்ப நித்யஸூரிகளுடைய தலைவராகிய ஸேனைமுதலியார் என்னும் ஸாத்யர். (புத்ர ஸித்த) - திருவாய்மொழி (10-2-4) – அமரராய்த் திரிகின்றார்கட்காதி - என்பதால் புத்ரர்களாக உள்ள நான்முகன் போன்ற ஸித்தர்கள். (சிஷ்ய பூஸுர) - திருவாய்மொழி (10-2-8) - படமுடையரவில் பள்ளிபயின்றவன் பாதம் காண நடமினோ நமர்களுள்ளீர் – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாரின் உபதேசத்தைக் கேட்ட சிஷ்யர்களான அந்தணர்கள். இப்படியாக உள்ள இந்த மூவருடைய. (அர்ச்சனத்துக்கு) – அர்ச்சனைக்கு. (முகம் நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும்) - திருமுகம், திருநாபி, திருவடிகள் ஆகியவற்றை மூன்று திருவாயில்கள் மூலம் காண்பிக்கின்ற. (ஸாம்யம்) - நித்யஸூரிகள், ஸம்ஸாரிகள் என்ற வேறுபாடு இன்றி ஒரே போன்று வெளிப்படும் குணம். (அநந்தசயநத்திலே வ்யக்தம்) - திருவனந்தபுரத்தில் கண்வளர்கின்ற விதத்தில் தெளிவாக வெளிப்படும் என்று கருத்து.