Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 181)
மூன்றாம் ப்ரகரணம்
சரண்யமுகுந்தத்வம் உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்.
(சரண்ய முகுந்தத்வம்) இத்யாதி. அதாவது, “சரணமாகுந் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்று கீழ்ச் சொன்ன விசேஷணத்தாலே எல்லார்க்கும் சரணவரணார்ஹனா யிருக்குமவனுடைய மோக்ஷ ப்ரதத்வம் “உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம், சௌரிராஜமஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்” என்கிறபடியே திருக்கண்ணபுரத்தில் உத்பலாவதக மென்கிற பேரையுடைத்தான திவ்யவிமாநத்தில் நிற்கிற நிலையிலே எல்லாரு மறியலாம்படி ப்ரஸித்தமென்கை. முகுந்தத்வமாவது முக்திபூமி ப்ரதத்வம். “வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்கையாலே யாய்த்து இவரிப்படி யருளிச்செய்தது. பலமென்றும் மாம்ஸமாய் உத்பலரென்று மாம்ஸலதேஹரா யிருக்கையன்றிக்கே யிருக்கும் முமுக்ஷுக்களாய் “தேஷாம் மமாவதோ வாஸ முத்பலாவதகம் விது:” என்கிறபடியே அவர்களுக்கு ரக்ஷகனானவன் எழுந்தருளி நிற்கையாலே உத்பலாவதகமென்று அங்குத்தை திவ்யவிமாநத்துக்குப் பேராகையாலேயாய்த்து மோக்ஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே ப்ரஸித்தமென்கிறது.
(சரண்ய முகுந்தத்வம்) திருவாய்மொழி (9-10-5) - சரணமாகுந் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – என்று இதுவரை கூறப்பட்ட பலவிதமான சிறப்புகள் காரணமாக தங்களுடைய புகலிடம் என்று பற்றுவதற்கு ஏற்றபடி உள்ள ஸர்வேச்வரனுடைய மோக்ஷம் அளிக்கவல்ல தன்மை. (உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்) உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம், சௌரிராஜமஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸுந்தரம் உத்பலாவதகம் என்பதான திவ்ய விமானத்தில், தாமரை போன்ற கண்கள் கொண்டவனும், அனைத்து அவயவங்களும் நேர்த்தியாக அமையப்பெற்று சுந்தரமாக உள்ளவனும் ஆகிய ஸௌரிராஜனை வணங்குகிறேன் - என்பதற்கு ஏற்ப திருக்கண்ணபுரத்தில் உத்பலாவதகம் என்ற பெயர் கொண்ட திவ்யமான விமானம் நிற்கும் நிலை மூலம் அனைவரும் அறிவர். (முகுந்தத்வம்) - மோக்ஷத்தை அளிக்கும் தன்மை. திருவாய்மொழி (9-10-5) - வைகுந்தம் கொடுக்கும் பிரான் - என்ற திருப்பாசுரத்தை தனது திருவுள்ளத்தில் கொண்டதன் காரணமாகவே இவ்விதமாக அருளிச்செய்தார். உத்பலாவதகம் என்பதில் உள்ள பலம் என்பது மாமிஸம், உத்பலமர் என்பதால் மாமிஸ சரீரம் கொண்டவராக இல்லாமல், சரீரத்தை உலர்த்துவதன் காரணமாக விலக்கப்பட்ட மாமிஸத்தைக் கொண்டவராக, அத்தகைய சரீரத்தில் விருப்பம் இன்றி இருக்கின்ற முழுக்ஷுக்களைக் குறிப்பதாகும். தேஷாம் மமாவதோ வாஸ முத்பலாவதகம் விது: - முமுக்ஷுக்களைக் காப்பாற்றும் எனது இருப்பிடத்தை உத்பலாவதகம் என்பர் - என்பதற்கு ஏற்ப எழுந்தருளியுள்ளதால் அங்குள்ள திவ்யமான விமானமானது உத்பலாவதகம் என்று பெயர் பெற்றது. ஆகவே அந்த இடம் மோக்ஷம் அளிக்கும் இடம் என்று கருத்து.