Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 180)
மூன்றாம் ப்ரகரணம்
பிரிந்த துன்பக்கடல் கடத்தும் விஷ்ணுபோதாந்ருசம்ஸ்யம் நாவாயிலே நிழலெழும்.
(பிரிந்த துன்பக்கடல்) இத்யாதி. அதாவது “அன்புடையாரைப் பிரிவுறு நோய்” என்றும், “துன்பக்கடல் புக்கு” என்றும் சொல்லுகிறபடியே “எமராலும் பழிப்புண்டு அணிமூழிக்களத்துறையும் தம்மாலிழிப் புண்டு இங்கென்”, “தாந்தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென் றுரையீர்”, “மிகமேனி மெலிவெய்தி மேகலையுமீடழிந் தென்னகமேனி யொழியாமே திருமூழிக்களத்தார்க்கு தகவன்றென் றுரையீர்” என்கிறபடியே மேன்மேலும் ஆள் விடவேண்டும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க ஸாகரத்தை நிஸ்தரிப்பிக்கும் “விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” என்கிற விஷ்ணு போதமான வவனுடைய, “ஆவாவடியா னிவனென் றருளாய்” என்று அபேக்ஷிக்கலாம்படி யிருக்கும் ஆச்ரித விஷய க்ருபையாகிற ஆந்ருசம்ஸ்யம் – “நாவாயுறைகின்ற” என்று அவன் நித்யவாஸம் பண்ணுகிற திருநாவாயிலே உள்ளு நிற்கிற வஸ்துவின் ஸ்வபாவமிதுவோ வென்றறியலாம்படி அவ்வூரின் பேராலே நிழலெழுமென்கை. நாவாய் போலே யிருக்கிறவவன் வர்த்திக்கின்ற தேசமாகையாலே நாவாய் என்று ஊருக்குப் பேராயிருக்கிறதென்று கருத்து. விஷ்ணுபோதத்வ மித்தாலே ப்ரகாசித்தால் அதுக்குடலான ஆந்ருசம்ஸ்யம் தன்னடையே தோன்றுமிறே. “காருண்யே நாந்ருசம்ஸ்யேந” என்று விபஜித்துச் சொல்லி, “ஸ்த்ரீ ப்ரநஷ்டேதி காருண்யம் ஆச்ரிதேத்யந்ருசம்ஸதா” என்கையாலே ஆந்ருசம்ஸ்யமாவது ஆச்ரித விஷய க்ருபை.
– (பிரிந்த துன்பங்கடல்) – நாச்சியார் திருமொழி (5-4) - அன்புடையாரைப் பிரிவுறு நோய் - என்றும், நாச்சியார் திருமொழி (5-4) – துன்பக்கடல் புக்கு – என்றும் கூறுவதற்கு ஏற்ப, திருவாய்மொழி (9-7-2) - எமராலும் பழிப்புண்டு அணிமூழிக்களத்துறையும் தம்மாலிழிப் புண்டு இங்கென் - என்றும், திருவாய்மொழி (9-7-9) – தாந்தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென் றுரையீர் - என்றும், திருவாய்மொழி (9-7-10) - மிகமேனி மெலிவெய்தி மேகலையுமீடழிந் தென்னகமேனி யொழியாமே திருமூழிக்களத்தார்க்கு தகவன்றென் றுரையீர் - என்றும் இவ்விதமாக மேன்மேலும் தூது விடும்படியாகத் தன்னைப் பிரிவதன் மூலம் ஏற்பட்ட துக்கம் என்ற ஸமுத்திரத்தை, (கடந்த விஷ்ணுபோதம்) ஸ்ரீவிஷ்ணுதர்மம் – விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் - விஷ்ணு என்ற ஓடம் இன்றி வேறு ஸாதனம் இல்லை - என்பதற்கு ஏற்றபடி தாண்டுவிக்கின்ற விஷ்ணுபோதமாக அவனுடைய (ஆந்ருசம்ஸ்யம்) - திருவாய்மொழி (9-8-7) - நாவாயுறைகின்ற - என்று விரும்புவதற்கு ஏற்றபடியாக உள்ள அடியார்கள் விஷயத்தில் வெளிப்படும் க்ருபையாகும் என்பது; (திருநாவாயிலே நிழல் எழும்) - திருவாய்மொழி (9-8-7) – நாவாய் - என்பதற்கு ஏற்ப அவன் எப்போதும் வசிப்பதான திருநாவாய் என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள ஸர்வேச்வரனுடைய தன்மை இத்தகையது என்று அறியும்விதத்தில் அந்த ஊருடைய பெயராலேயே வெளிப்படுகிறது (நாவாய் என்றால் ஓடம், படகு). அதாவது ஓடம் போன்றுள்ளவன் எப்போதும் அங்கு வசிப்பதால் “நாவாய்” என்று ஊருக்கும் பெயர் வந்தது. விஷ்ணுவின் ஓடமாக உள்ள தன்மை இதன் மூலம் வெளிப்படும்போது, அதற்குக் காரணமாக உள்ள அவனுடைய க்ருபை என்பதும் தானாகவே வெளிப்படுகிறது அல்லவோ? இராமாயணம் ஸுந்தரகாண்டம் (15-49) – காருண்யே நாந்ருசம்ஸ்யேந - கருணையாலும் தனது அடியார்களிடம் காண்பிக்கும் அருளாலும் - என்று தனித்தனியாக உரைத்து, ஸ்த்ரீ ப்ரநஷ்டேதி காருண்யம் ஆச்ரிதேத்யந்ருசம்ஸதா - பெண் காப்பாற்றப்படவில்லை என்ற கருணையாலும், நம்மைச் சேர்ந்தவர்களைக் காப்பார்றாமல் போனோமே என்ற அருளாலும் இராமன் வருந்தினான் - என்று கூறுவதால், ஆந்ருசம்ஸ்யம் என்பது அடியார்களிடம் காணபிக்கப்படும் க்ருபை என்றாகிறது.