Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 179)

மூன்றாம் ப்ரகரணம்

மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.

– அதாவது, “தமரோடங்குறைவார்க்கு” என்று தம் பரிஜனங்களோடே அங்கே நித்யவாஸம் பண்ணுகிறவர்க்கென்னும்படி, “ஸக்ருத் த்வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதாநுத்தமபுக்தி முக்திபி: மஹாத்மபிர் மாமவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத் விரஹோதிதுஸ்” என்கிறபடியே தம்முடைய விக்ரஹத்தை யொருகால் காணவேணுமென்னு மாசையாலே அநுத்தமமான போக மோக்ஷங்களையும் த்ருணீகரித்திருக்கும் மஹாத்மாக்களோட்டை விரஹம் ஸஹியாமையாகிற மார்த்தவம்; “மூழிக்களத் துவளத்தினை” என்று ஆச்ரிதர்க்கு ஸம்பத்தாயிருக்கும் ஸ்வபாவ னானவன் திருமூழிக்களத்திளே கூடுகட்டி நிற்குமென்கை. கூடுபூரிக்குமென்றது களமென்கிற ஸமாதியாலே.

– (மஹாத்மாக்கள்) – திருவாய்மொழி (9-7-2) - தமரோடங்குறைவார்க்கு - என்பதற்கு ஏறப தனது உறவினர்களுடன் அங்கு எப்போதும் வசிப்பவர்க்கு என்று கூறுவதற்கு ஏற்ப, ஸ்தோத்ரரத்னம் (5) - ஸக்ருத் த்வதாகார விலோக நாசயா த்ருணீ க்ருதாநுத்தமபுக்தி முக்திபி: மஹாத்மபிர் மாமவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத் விரஹோதிதுஸ் - ஒருமுறையாவது உனது திருமேனியை நான் காணவேண்டும் என்ற ஆசை காரணமாக மிகவும் உயர்ந்த நான்முகன் முதலனாவர்களுடைய லோகங்களுடைய இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றைக் கூட ஒரு துரும்பு போன்று எண்ணும் மஹாத்மாக்களாகிய பாகவதர்களால் நான் கடாக்ஷிக்கப்படும் விதத்தில் நீ என்னைக் கடாக்ஷிக்க வேண்டும் - என்பதற்கு ஏற்ப தனது திருமேனியை ஒருமுறையாவது காணவேண்டும் என்ற ஆசையால் மிகவும் உயர்ந்த நான்முகன் முதலான தேவர்களுடைய லோகங்களையும் மோக்ஷத்தையும் ஒரு அற்பமான புல்லாக எண்ணுகின்ற மஹாத்மாக்களுடைய. (விரஹம் ஸஹியாத மார்தவம்) - பிரிவைப் பொறுத்துக் கொள்ள இயலாதபடியான மென்மையான திருவுள்ளம் கொண்ட குணம். (வளத்தின் களத்தே) – பெரியதிருமடல் (129) - மூழிக்களத் துவளத்தினை - என்பதற்கு ஏற்ப அடியார்களுக்குச் செல்வமாக உள்ள தன்மை கொண்டவனுடைய திருமூழிக்களத்தில். (கூடு பூரிக்கும்) - கூடுகட்டி நிற்கிறது. “களம்” என்பதற்கு ஏற்ப “கூடு கட்டி” என்றார்.