Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 178)

மூன்றாம் ப்ரகரணம்

போகத்தில் தட்டுமாறூஞ் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்.

– அதாவது, இப்படி போக்யபூதரான ஆழ்வாருடனே கலந்து பரிமாறுமிடத்தில் “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்றும், “ஆருயிர் பட்ட தெனதுயிர்பட்டது” என்றும் பேசும்படி அத்தலை யித்தலையாக சேஷசேஷிபாவம் மாறாடிப் பரிமாறும் சீலகுணம்; “திருக்காட்கரை மருவிய மாயன்றன் மாயம் நினைதொறு” என்று வித்தராய்ப் பேசின திருக்காட்கரையிலே கரையழியப் பெருகுமென்கை. (கரையழிக்கும்) என்றது காட்கரையென்கிற ஸமாதியாலே.

– (போகத்தில் தட்டுமாறும் சீலம்) - இவ்விதம் தனக்கு மிகவும் இனியவராக உள்ள நம்மாழ்வாருடன் சேர்ந்து மகிழ்ந்தபடி உள்ளபோது திருவாய்மொழி (9-6-7) - ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன் - என்றும், திருவாய்மொழி (9-6-9) – ஆருயிர் பட்ட தெனதுயிர்பட்டது - என்றும் உரைக்கும்படியாக அத்தலை இத்தலையாக மாறி, அடிமை - எஜமானன் என்ற தன்மை மாறி நிற்கும்படியான சீலகுணமானது, (காட்கரையிலே) – திருவாய்மொழி (9-6-1) – திருக்காட்கரை மருவிய மாயன்றன் மாயம் நினைதொறு - என்று மிகுந்த ஈடுபாடு நிறைந்தவராக உரைத்த திருக்காட்கரையில். (கரை அழிக்கும்) - கரை அழிக்கும்படியாகப் பெருகி நிற்கும். (கரை அழிக்கும்) - காட்கரை என்ற பெயருக்கு ஏற்ப உரைத்தார்.