Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 177)
மூன்றாம் ப்ரகரணம்
போக்யபாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்.
– அதாவது, பசி கனத்தவன் அன்னம் பக்வமாவதற்கு முன்னே பதற்றத்தாலே அதுக்கு அணித்தாக வந்து கிடப்பது இருப்பது நிற்தாமாபோலே, போக்ய பூதரான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம் பிறக்குமளவும் அவனுக்குண்டான த்வரை, “தெளிந்தவென் சிந்தை” என்கிற சந்தைக்கு முன் சொன்ன “புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” என்று கிடப்ப திருப்பது நிற்பதான திருப்புளிங்குடி, திருவரகுணமங்கை, திருவைகுந்தமாகிற திருப்பதி மூன்றிலும் தெரியு மென்கை.
– (போக்யபாக த்வரை) - மிகுந்த பசி எடுத்த ஒருவன் உணவு சமைப்பதற்கு முன்பே மிகுந்த பதற்றம் காரணமாக அந்த இடத்திலேயே மிகவும் அருகில் வந்து நிற்பது போன்று, இனியவராக உள்ள நம்மாழ்வாருக்குப் பரமபக்தி என்னும் பாகம் உண்டாகும்வரை ஸர்வேச்வரனிடம் உள்ள பதற்றம் என்பது. (தெளிந்த சந்தைக்கு) – திருவாய்மொழி (9-2-4) – தெளிந்த என் சிந்தை - என்ற திருப்பாசுரத்திற்கு. (முன்னில் மூன்றிலும்) - முன்பாக உரைக்கப்பட்ட, திருவாய்மொழி (9-2-4) - புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று - என்பதற்கு ஏற்ப கிடப்பது, இருப்பது, நிற்பது என்பதான திருப்புளிங்குடி, திருவரகுணமங்கை, திருவைகுந்தம் என்ற மூன்று திவ்யதேசத்திலும். (ப்ரகடம்) – வெளிப்படுவதைக் காணலாம்.