Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 176)
மூன்றாம் ப்ரகரணம்
அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயகலக்ஷணம் வளம்புகழுமூரிலே குட்டமிடும்.
– அதாவது “அப்பன் திருவருள் மூழ்கினள்” என்று தன் ப்ரஸாதத்திலே மறுநனைய அவகாஹித்தாரை “அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்”, “திருப்புலியூர்ப் புகழன்றி மற்று பரவாளிவள் நின்றிராப்பகல்”, “திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாமிவள் நேர்பட்டது” என்னும்படி அநந்யார்ஹமாக்குமதாய் “கருமாணிக்க மலைமேல் மணிதடந்தாமரைக் காடுகள் போல்”, “துன்னுசூழ்சுடர் நாயிறுமன்றியும் பலசுடர்களும் போல்” இத்யாதிகளால் சொன்ன அவயவசோபை ஆபரணசோபை முதலான நாயக லக்ஷணம்; “திருப்புலியூர் வளம் புகழும்” என்று இவர் கொண்டாடும்படியான ஐச்வர்யத்தையுடைய திருப்புலியூரிலே பூர்ணமாயிருக்குமென்கை, (குட்டமிடும்) என்றது குட்டநாடென்னுமத்தை நினைத்து. அருள் மூழ்கினாரை யென்னாதே (அவகாஹித்தாரை) யென்றது, கலந்தவர்களை அநந்யார்ஹராக்கும்படி யிருக்கவேணும் நாயக லக்ஷணமென்று உத்தமநாயக லக்ஷணத்தை ஸாமாந்யேந தர்சிப்பித்து அந்த லக்ஷணமீச்வரனுக்குத் திருப்புலியூரிலே பூர்ணமாக ப்ரகாசிக்கு மென்றருளிச்செய்கிறவ ராகையாலே.
– (அவகாஹித்தாரை) – திருவாய்மொழி (8-9-5) – அப்பன் திருவருள் மூழ்கினள் - என்பதற்கு ஏற்ப தனது கருணையில் மூழ்கியபடி உள்ளவர்களை. (அநந்யார்ஹம் ஆக்கும்) - திருவாய்மொழி (8-9-1) - அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் – என்றும், திருவாய்மொழி (8-9-9) - திருப்புலியூர்ப் புகழன்றி மற்று பரவாளிவள் நின்றிராப்பகல் - என்றும், திருவாய்மொழி (8-9-10) - திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாமிவள் நேர்பட்டது - என்றும் கூறுவதற்கு ஏற்ப மற்ற யாருக்கும் வசப்படாதவராக, தனக்கு மட்டுமே வசப்படும்படியாகச் செய்யும், (நாயக லக்ஷணம்) - திருவாய்மொழி (8-9-1) - கருமாணிக்க மலைமேல் மணிதடந்தாமரைக் காடுகள் போல் – என்றும், திருவாய்மொழி (8-9-2) - துன்னுசூழ்சுடர் நாயிறுமன்றியும் பலசுடர்களும் போல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள திருமேனியின் அவயவங்கள் அமைந்துள்ள நேர்த்தி மற்றும் ஆபரணங்களுடைய அழகு முதலான நாயகனுக்கே உரிய லக்ஷணங்கள். (வளம் புகழும் ஊரிலே) - திருவாய்மொழி (8-9-3) – திருப்புலியூர் வளம் புகழும் - என்று நம்மாழ்வார் கொண்டாடும்படியான ஐச்வர்யம் நிறைந்த திருப்புலியூரில் பரிபூர்ணமாக இருக்கிறது என்று கருத்து. (குட்டமிடும்) - அதாவது குட்டநாடு என்ற பொருள்படும்படி. அருளில் “மூழ்கினார்” என்று கூறாமல் “அவகாஹித்தார்” என்று ஏன் கூறினார்? அதாவது “தன்னுடன் வந்து ஒன்றாகக் கலந்தவர்களை, மற்றவர்கள் வசப்படாமல் தனக்கு மட்டுமே உரியவர்கள் என்று செய்யும்படியான நாயக லக்ஷணம்” என்று உத்தமமான நாயக லக்ஷணத்தைப் பொதுவாக உரைத்து, இத்தகைய லக்ஷணமானது ஈச்வரனுக்கு திருப்புலியூரில் முழுமையாகக் காணப்படுகிறது என்று அருளிச்செய்வதால் ஆகும்.