Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 175)
மூன்றாம் ப்ரகரணம்
ஸாத்ய ஹ்ருதிஸ்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே.
– அதாவது, ஸாத்யம் கைப்பட்டால் ஸாதநத்திலிழிவாரின்றிக்கே யிருக்கே “திருக்கடித்தானமு மென்னுடைச் சிந்தையு மொருக்கடுத்துள்ளே யுறையும் பிரான்” என்று ஸாத்யமான ஆழ்வார் திருவுள்ளத்தில் வாஸம் லபித்திருக்கச் செய்தேயும், இத்தைப் பெற்றது அத்தேசத்தில் நிலையாலேயன்றோவென்று ஸாதநமான திருக்கடித்தானத்தையும், அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான க்ருதஜ்ஞதா பரிமளம்; “திருக்கடித்தான நகரும் தன தாயப்பதி” என்று தனக்கு தாயப்ராப்தமான ஸதாநமாக நினைத்திருக்கும் திருக்கடித்தானத்திலே யென்கை. (க்ருதஜ்ஞதா கந்தம்) என்றது “கடித்தானம்” என்று மணத்தையுடைத்தான ஸ்தாநமென்கையாலே.
– (ஸாத்ய ஹ்ருதிஸ்தனாயும்) - பலன் கிட்டியவுடன் அந்தப் பலன் கிட்டுவதற்கான வழியில் அதன் பின்னர் ஈடுபடாமல் இருப்பார்கள். இது போன்று அல்லாமல், திருவாய்மொழி (8-6-2) – திருக்கடித்தானமு மென்னுடைச் சிந்தையு மொருக்கடுத்துள்ளே யுறையும் பிரான் – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்போதும் உறைதல் என்ற பலன் கிடைத்த பின்னரும், (ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம்) – இத்தகைய பலனை ஸர்வேச்வரனாகிய தான் அடைந்தது இந்த திவ்யதேசத்தின் வாசத்தால் அல்லவோ என்று அந்தப் பலன் ஏற்பட்ட வழியாகிய திருக்கடித்தானத்தையும் சேர்த்துப் பிடித்து அங்கேயும் வசிக்கும்படியான செய்ந்நன்றி அறிதல் என்ற நறுமணமானது. (தாயப்பதியிலே) – திருவாய்மொழி (8-6-8) – திருக்கடித்தான நகரும் தன தாயப்பதி – என்பதற்கு ஏற்ப தனக்கு தாயமாக அடையத்தக்கதான இடமாக எண்ணுகின்ற திருக்கடித்தானம் என்ற திவ்யதேசத்தில். (க்ருதஜ்ஞதாகந்தம்) - என்று கூறியது ஏன் என்றால், “கடித்தானம்” என்று நறுமணம் கொண்ட இடமாக உள்ளதால் ஆகும்.