Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 174)

மூன்றாம் ப்ரகரணம்

மஹாமதிகள் அச்சங் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்.

– அதாவது, “ஸம்ஸ்ப்ருசந்நாஸநம் சௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:” என்கிறபடியே ஸௌகுமார்யாநுஸந்தாநத்தாலே அவனுக்கெங்கே யென்ன தீங்கு வருகிறதோவென்று அஸ்தாநே பயசங்கை பண்ணும் மஹாமதிகள், “எங்கள் செல்சார்வு” என்று தங்களுக்கு நிர்ப்பய ஸ்தாநமான புகலாக நினைத்து பயங்கெட்டு “திருச்சிற்றாற்றங்கரையானை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேன்” என்று ப்ரஹ்மருத்ரர்களுடைய ஸத்தாதிகள் ஸ்வாதீனமாம்படி இவர்களை ப்ரகாரமாகவுடைய பெருமையை யுடையனாய் வைத்து ஸுலபனாய் வந்து நிற்கிறவனை, “அவனுக்கென் வருகிறதோ” என்று பட்டமறுகுதல் தீர்ந்து கிட்டி யநுபவிக்கப் பெற்றெனென்று ஹ்ருஷ்டராம்படியான “வார்கடாவருவி” இத்யாதியால் சொன்ன குவலயாபீட சாணூர முஷ்டிக கம்ஸாதி நிரஸந ப்ரகடித சௌர்யாதிகள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறென்கிற திருப்பதியிலே, ஆற்றுக்குள்ளில் மணிமுக்தாதிகள் கரையிலே கொழித்துத் தோற்றுமாபோலே ப்ரகாசிக்குமென்கை, (சௌர்யாதிகள்) என்கிறவிடத்தில் ஆதி சப்தத்தாலே வீர்ய பராக்ரமங்களைச் சொல்லுகிறது. ஆறென்கிற ஸமாதியாலே கொழிக்குமென்றது.

– (மஹாமதிகள்) – ஸம்ஸ்ப்ருசந்நாஸநம் சௌரே: விதுரஸ்ஸ மஹாமதி: - க்ருஷ்ணன் சயனிக்க வேண்டிய படுக்கையை விதுரர் நன்றாகத் தடவி ஆராய்ந்தார் - என்பதற்கு ஏற்ப அவனுடைய திருமேனியின் மென்மையை எப்போதும் என்ணியபடி உள்ளதால், அவனுக்கு எந்த இடத்தில் எதன் மூலம் என்ன தீங்கு ஏற்படுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையற்ற இடத்தில் கூட அச்சம் கொள்கின்ற உயர்ந்த புத்தி கொண்டவர்கள். (அச்சம் கெட்டு) - திருவாய்மொழி (8-4-1) – எங்கள் செல்சார்வு - என்று தங்களுக்கு எந்தவிதமான பயமும் இல்லாத இடமாக, தாங்கள் புகலிடம் தேடுவதற்கு ஏற்றதாக எண்ணி, தங்கள் பயத்தைக் கைவிட்டு. (அமரும்) - திருவாய்மொழி (8-1-10) - திருச்சிற்றாற்றங்கரையானை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேன் – என்பதற்கு ஏற்ப நான்முகன், ருத்ரன் போன்றவர்களுடைய இருப்பு என்பதும் தனது வசப்பட்டவனாகவும், அவர்களைத் தனது சரீரமாகக் கொண்டவனாகவும் உள்ள பெருமை நிறைந்தவன் என்றாலும், மிகவும் எளியவனக வந்து நிற்பவனை; “அவனுக்கு என்ன தீங்கு நேரிடுமோ!”, என்று அடைந்த கலக்கம் நீங்கப் பெற்று, அவனை அண்டி நின்று அனுபவிக்கப் பெற்றேன் என்று மகிழ்ந்தபடி இருப்பதற்கு ஏற்றபடியான. (சௌர்யாதிகள்) - திருவாய்மொழி ( 8-4-1) – வார்கடா வருவி - என்பதற்கு ஏற்ப குவலயாபீடம், சாணூரன், முஷ்டிகன், கம்சன் போன்ற பலரையும் வதைத்து வெளிப்படுத்திய சூரத்தன்மை போன்ற பலவும். (சிற்றாற்றிலே கொழிக்கும்) - திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு என்னும் திவ்யதேசத்தில், ஆற்றில் உள்ள மணி, முத்து போன்றவை கரையில் ஒதுங்கி வெளிப்படுவது போன்று வெளிப்படும். (சௌர்யாதிகள்) - இதில் உள்ள “ஆதி” என்பது வீர்யம், பராக்ரமம் போன்ற பலவற்றையும் கூறுகிறது. “ஆறு” என்பதால் அதற்கு ஏற்றபடி “கொழிக்கும்” என்றார்.