Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 173)
மூன்றாம் ப்ரகரணம்
ச்ரமமனஞ் சூழும் ஸௌகுமார்ய ப்ரகாசம் ஆய்ச்சேரியிலே.
– அதாவது, “பணியாவமரர்” இத்யாதிப்படியே பரம ப்ரேம யுக்தரான நித்யஸூரிகள் பரிசர்யை பண்ண பரமபதத்திலே யிருக்குமவன் நிரதிசய ஸுகுமாரமான திருமேனியோடே ஸம்ஸாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காகத் தன் வாசியறியாத விந்தலோகத்தில் வந்தவதரித்து, அடியாரல்லல் தவிர்ப்பது, படிதான் நீண்டு தாவுவதாகையால் வந்த ச்ரமத்தை யநுஸந்தித்த மநஸ்ஸானது வ்யாகுலிதமாய் ப்ரமிக்கும்படியான, “ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்” என்று பூவேந்தினாற்போலே யிருக்கும் திருவாழி திருச்சங்கை யேந்துகிறதும் மலை சுமந்தாற்போலே வன்பாரமாகத் தோற்றும்படி யிருக்கிறவவன் ஸௌகுமார்ய ப்ரகாசம்; உடைய நங்கையார் பிறந்தகமாகையாலே ஆழ்வாருக்கு ஆய்ச்சேரியா யிருப்பதாய், “உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடொருபா டுழல்வா னோரடியானு முளனென்று வண்பரிசாரத் திருந்தவென் திருவாழ் மார்வற் கென்திறஞ் சொல்லார்” என்ற திருப்பரிசாரத்திலே காணப்படு மென்கை.
– (ச்ரம) - திருவாய்மொழி (8-2-6) – பணியாவமரர் - என்பதற்கு ஏற்ப மிகுந்த ப்ரேமை நிறைந்தவர்களாகிய நித்யஸூரிகளால் உபசரிக்கப்பட்டு பரமபதத்தில் உள்ள அவன், மிகுந்த மென்மையான தனது திருமேனியுடன் இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுடைய துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்காக, தனது மேன்மை அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து, திருவாய்மொழி (8-3-5) – அடியார் அல்லல் தவிர்த்த - என்பதற்கு ஏற்ப அவர்கள் துன்பத்தை நீக்கி, திருவாய்மொழி (8-3-6) - இப்படி தான் நீண்டு தாவி - என்பதற்கு ஏற்ப உயர்ந்து வளர்ந்து அனைத்தையும் அளந்த காரணத்தால் வந்த சிரமத்தை. (மனம்) - எண்ணுகின்ற மனமானது. (சூழும்) – மிகுந்த துன்பத்தை அடைந்து மயங்கும்படியாக. (ஸௌகுமார்ய ப்ரகாசம்) - திருவாய்மொழி (8-3-3) - ஆழியும் சங்கும் சுமப்பார்தாம் - என்பதற்கு ஏற்ப மலரைத் திருக்கரத்தில் ஏந்தியது போன்றுள்ள சக்கரத்தையும் சங்கையும் ஏந்தியபடி நிற்பதையே மிகவும் கனமான மலையைச் சுமப்பது போன்று நிற்கின்ற அவனுடைய திருமேனியின் மென்மை வெளிப்படுவது. (ஆய்ச்சேரியிலே) - நம்மாழ்வாருடைய தாயார் பிறந்த இடம் என்பதால் நம்மாழ்வாருக்கு தாயின் இருப்பிடமாக உள்ளதாகிய, திருவாய்மொழி (8-3-7) – உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடொருபா டுழல்வா னோரடியானு முளனென்று வண்பரிசாரத் திருந்தவென் திருவாழ் மார்வற் கென்திறஞ் சொல்லா - என்பதான திருவண்பரிசாரம் என்ற திவ்யதேசத்தில் ஆகும்.