Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 171)

மூன்றாம் ப்ரகரணம்

ப்ரவணசித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீணகரிலே.

(ப்ரவண சித்தம்) இத்யாதி. அதாவது “தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளிவிசும்பேறலுற்றால் திருவாறன்விளை யதனை மேவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னுமென் சிந்தனை” என்று அவித்யாதிகள் ப்ரத்யக் வஸ்துவான வாத்மாவில் பற்றறப் போய்த் தெளிவை விளைப்பதான பரமபதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும், என்னெஞ்சானது, திருவாறன்விளையாகிற அத்தேசத்தைக் கிட்டி அநுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக்கூடுமோவென்னா நிற்கும் என்று தன்பக்கல் ப்ரவணரானவர்கள் சித்தத்தை, “சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை” என்று பரமபதத்தின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாம்படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் “இன்பம் பயக்க வெழில் மலர் மாதரும் தானு மிக்கேழுலகை யின்பம் பயக்க வினிதுடன் வீற்றிருந்து” என்கிற ஆநந்த வ்ருத்தி, “திருவாறன்வளையென்னும் நீணகரமதுவே” என்று நீணகரான திருவாறன்விளையில் வ்யக்தமென்றபடி.

– (ப்ரவண சித்தம்) திருவாய்மொழி (7-10-9) - தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளிவிசும்பேறலுற்றால் திருவாறன்விளை யதனை மேவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னுமென் சிந்தனை – என்பதற்கு ஏற்ப அவித்யை முதலான பலவும் தனக்குத்தானே ப்ரகாசிக்கவல்ல ஆத்மவஸ்துவிலிருந்து தங்கள் பற்றுகள் அனைத்தையும் அறுத்துக்கொண்டு சென்றதால், தெளிவை ஏற்படுத்துவதான பரமபதத்தை அடைதல் என்பது என்னை வந்து சேர்ந்தாலும், எனது மனமானது திருவாறன்விளை என்பதான அந்த திவ்யதேசத்தை அடைந்து நின்று, அவனுக்கு ஏற்ற செயல்கள் செய்தபடி நின்று, கைகளைக் குவித்து அவனைத் தொழுதபடி நிற்க இயலுமோ என்று எண்ணியபடியே சிலர் இருப்பர். இப்படியாக தன்னிடம் ப்ரேமை கொண்டவர்களுடைய சித்தத்தை. (பரத்வ விமுகம் ஆக்கும்) – திருவாய்மொழி (7-10-10) – சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை - என்பதற்கு ஏற்ப “பரமபதம்” என்று உச்சரிப்பதையும் எண்ணாதபடி, அந்த பரத்வத்தில் விருப்பம் இல்லாத நிலையை உண்டாக்குகின்ற, (ஆநந்தவ்ருத்தி) – திருவாய்மொழி (7-10-1) - இன்பம் பயக்க வெழில் மலர் மாதரும் தானு மிக்கேழுலகை யின்பம் பயக்க வினிதுடன் வீற்றிருந்து - என்பதற்கு ஏற்ப உள்ளதான ஆனந்தத்தில் வளர்ச்சி என்பது, (நீள் நகரிலே) – திருவாய்மொழி (7-10-6) – திருவாறன்விளை என்னும் நீணகரமதுவே - என்பதற்கு ஏற்ப உள்ளதான நீண்நகரமான திருவாறன்விளையில் வெளிப்படும்.