Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 170)
மூன்றாம் ப்ரகரணம்
சென்று சேர்வார்க்கு உசாத்துணை யறுக்கும் ஸௌந்தர்யம் மாநகரிலே கோஷிக்கும்.
(சென்று சேர்வார்க்கு) இத்யாதி. அதாவது, “தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே” என்று க்ரமப்ராப்தி பற்றாத ப்ரேமாதிசயத்தாலே ஹிதபரர் வார்த்தை கேளாதே சென்று ப்ரவேசிப்பதென்னும்படியானவர்களுக்கு, “என்னெஞ்சினாரு மங்கே யொழிந்தார் உழந்தினி யாரைக்கொண்டென்னுசாகோ” என்னும்படி உசாத் துணையாணா நெஞ்சை யபஹரிக்கும் “செங்கனிவாயின் திறத்ததாயும்” இத்யாதியால் சொன்னவனுடைய ஸௌந்தர்யம்; “தென்திருப்பேரெயில் மாநகர்” என்று மஹாநகரமான தென்திருப்பேரெயிலே, “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” என்கிறபடியே அவ்விஷயத்தை யநுபவித்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தால் அங்குள்ளார் பாடுகிற ஸாம கோஷத்திலே தெரியுமென்றபடி.
– (சென்று சேர்வார்க்கு) – திருவாய்மொழி (7-3-8) - தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே - என்பதற்கு ஏற்ப முறையாகச் சென்று அடையும்வரை பொறுக்க இயலாத ப்ரேமையின் மிகுதி காரணமாக, தனக்கு நன்மை செய்பவர்களுடைய சொற்களைக் கேட்காமல் சென்று சேர்வது என்று முடிவு செய்தவர்களுக்கு. (உசாத்துணை அறுக்கும்) - திருவாய்மொழி (7-3-4) – என்னெஞ்சினாரு மங்கே யொழிந்தார் உழந்தினி யாரைக்கொண்டென்னுசாகோ - என்பதற்கு ஏற்ப உசாத்துணையான நெஞ்சத்தை அபகரிக்கும் விதத்தில் உள்ள. (ஸௌந்தர்யம்) - திருவாய்மொழி (7-3-3) - செங்கனிவாயின் திறத்ததாயும் - என்பது போன்றவற்றால் கூறப்பட்டவனுடைய அழகு. (மாநகரிலே கோஷிக்கும்) – திருவாய்மொழி (7-3-9) – தென்திருப்பேரெயில் மாநகர் - என்பதற்கு ஏற்ப உள்ளதான பெரிய நகரமாகிய தென் திருப்பேரையில், திருவாய்மொழி (7-3-4) – எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு – என்பதற்கு ஏற்ப அவனை அனுபவித்த மகிழ்ச்சிப் பெருக்கு காரணமாக அங்கு உள்ளவர்கள் பாடுகிற ஸாமவேத கானத்தில் விளங்கும்.