Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 169)
மூன்றாம் ப்ரகரணம்
கைம்முதலிழந்தாருண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்.
(கைம்முதலிழந்தார்) இத்யாதி. அதாவது “ஏலக்குழலியிழந்தது சங்கே” என்று தொடங்கி “கற்புடையாட்டி யிழந்தது கட்டே” என்று ப்ராப்யாலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே ப்ராப்ய ப்ராபகாபாஸங்களெல்லாம் தன்னடையே விட்டுக்கழிகையாலே கைம்முதலற்றவர்கள், “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” என்று தாரக போஷக போக்யங்களெல்லாம் தானேயாக புஜிக்கும் “வைத்தமாநிதி” என்று ஆபத்ரக்ஷகமாகச் சேமித்து வைத்த மஹாநிதி போலே யிருக்கிறவனுடைய ஆபத்ஸகத்வம்; “திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே” என்று ப்ராப்ய ருசி பிறந்தார்க்கு ப்ரவேஷ்டவ்யமா யிருக்கும் திருக்கோளூரிலே, “செல்வம் மல்கியவன் கிடந்த” என்று ரக்ஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணமே தனக்கு நிரதிசய ஸம்பத்தாக நினைத்து வந்து கிடக்கையாலே ஸம்ருத்த மென்கை.
– (கைம்முதல் இழந்தார்) – திருவாய்மொழி (6-6-1) - ஏலக்குழலியிழந்தது சங்கே – என்று தொடங்கி, திருவாய்மொழி (6-6-10) - கற்புடையாட்டி யிழந்தது கட்டே – என்பது முடிய கூறுவதற்கு ஏற்ப, அடைய வேண்டிய தலைவனை அடைய இயலாமல் போனதன் காரணமாக எழுந்த துன்பத்தால் உண்டாகிய “அவனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல்” எனபதால் தகாத பேறுகளும் அவற்றுக்கான வழிகளும் தாங்களே அகன்றுவிடுவதால், வேறு உபாயம் அற்றவர்கள். (உண்ணும்) - திருவாய்மொழி (5-7-11) – வைத்தமாநிதி - என்பதற்கு ஏற்ப ஆபத்துக்காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைத்த நிதி போன்று உள்ளவனுடைய, ஆபத்துக்காலத்தில் உதவுகின்ற குணமானது. (புகும் ஊரிலே) – திருவாய்மொழி (6-7-1) - திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே – என்பதற்கு ஏற்ப அடையவேண்டிய பேற்றில் ஏற்பட்டவர்கள் சென்று சேர்வதற்கு ஏற்றபடி உள்ளதான திருக்கோளூரில். (ஸம்ருத்தம்) – திருவாய்மொழி (6-7-4) - செல்வம் மல்கியவன் கிடந்த - என்பதற்கு ஏற்ப காப்பாற்றப்பட வேண்டியதான பொருள்களைக் காப்பாற்றுதல் என்பதே தனக்கு எல்லையற்ற ஸம்பத்தாகும் என்று எண்ணி வந்து கிடப்பதால், நிறைந்திருக்கும் என்று கருத்து.