Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 167)

மூன்றாம் ப்ரகரணம்

விளம்ப விரோதமழிக்கும் விருத்த கடநா ஸாமர்த்த்யம் நன்னகரிலே விஸ்தீர்ணம்.

(விளம்ப விரோதம்) இத்யாதி. அதாவது க்ரம ப்ராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கீடாகக் கடுக வந்து முகம் காட்டாமல் விளம்பித்து வருகையாலே “போகு நம்பீ”, “கழகமேறேல் நம்பீ” என்னும்படி ப்ரணய ரோஷத்தால் பிறந்த விரோதத்தை “அழித்தாயுன் திருவடியால்” என்று அழித்துப் போகட்ட - விருத்தங்களை கடிப்பிக்கவல்ல ஸாமர்த்த்யம் “நல்குரவும் செல்வும்” என்று தொடங்கி தன்னில் சேராதவற்றைச் சேர்த்துகொண்டு நிற்கிற விருத்த விபூதி யோகத்தை ப்ரகாசிப்பித்த “திருவிண்ணகர் நன்னகரே” என்று நன்னகரான திருவிண்ணகரிலே “பல்வகையும் பரந்த” என்கிறபடியே பரந்திருக்கு மென்கை.

– (விளம்ப விரோதம்) - முறையாக நின்று அவனை அடைவோம் என்று காத்திருத்தலைப் பொறுக்காமல், தான் படுகிற வேகத்துக்கு ஈடாக அவன் விரைந்து வந்து திருமுகம் காண்பிக்காமல், காலம் தாழ்த்தி வருவதால், திருவாய்மொழி (6-2-1) – போகு நம்பீ - என்றும், திருவாய்மொழி (6-2-6) – கழகமேறேல் நம்பீ – என்றும் கூறுவதற்கு ஏற்ப ப்ரணய கோபம் காரணமாக ஏற்பட்ட விரோதத்தை. (அழிக்கும் விருத்த கடநா ஸாமர்த்யம்) - திருவாய்மொழி (6-2-9) – அழித்தாய் உன் திருவடியால் - என்பதற்கு ஏற்ப அழித்து விலக்கி, மாறுபாடுகளை உண்டாக்கவல்ல சாமர்த்யமானது. (நன்னகரிலே விஸ்தீர்ணம்) – திருவாய்மொழி (6-3-1) – நல்குரவும் செல்வும் - என்று தொடங்கி, தன்னில் சேராமல் உள்ள அனைத்தையும் சேர்ந்துக் கொண்டு நிற்கின்ற விபூதியோகத்தை வெளிப்படுத்துகின்ற, திருவாய்மொழி (6-3-2) – திருவிண்ணகர் நன்னகரே - என்பதற்கு ஏற்ப நன்னகரான திருவிண்ணகரில், திருவாய்மொழி (6-3-1) – பல்வகையும் பரந்த - என்பதற்கு ஏற்ப நன்னகரான திருவிண்ணகரில், பரந்து காணப்படும்.