Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 166)
மூன்றாம் ப்ரகரணம்
வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம்.
(வ்யவஸாயஜ்ஞர்) இத்யாதி. அதாவது, “ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப்போலே “ஏறுசேவகனார்க்கு என்னையு முளளென்மின்கள்” என்று ஆர்த்த ரக்ஷணத்தில் தன்னுடைய வ்யவஸாயத்தை யதாவாக அறிந்திருக்குமவர்களுடைய ரக்ஷணத்தில், “ந த்யஜேயம்”, “ஏதத் வ்ரதம் மம” என்கிறபடியே அநுகூலராலும் சலிப்பிக்கவொண்ணாதபடியிருக்கும் அவனுடைய ஸ்தைர்யகுணம், “தேறுநீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்” என்று பம்பையாகிற வாற்றுக்கு வடகரையான திருவண்வண்டூரில் நிலைபெற்று நிற்குமென்கை.
– [வ்யவஸாஜ்ஞர் என்றால் பகவானுடைய திருவுள்ளத்தை எப்போதும் உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் ஆவர்] (வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண) – ஸுந்தரகாண்டம் (16-4) - ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா – இராமனுடைய திருவுள்ளத்தை நன்றாக அறிந்த சீதை - என்பதற்குஏற்ப உள்ள சீதையைப் போன்று, திருவாய்மொழி (6-1-10) – ஏறுசேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்கள் – என்பதற்கு ஏற்ப துன்பம் அடைந்துள்ளவர்களைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள உறுதியை நன்றாக அறிந்தவர்களைக் காப்பதில், (ஸ்தைர்யம்) - யுத்தகாண்டம் (18-3) – ந த்யஜேயம் - இவனை நான் கைவிடமாட்டேன் - என்றும், யுத்தகாண்டம் (18-33) - ஏதத் வ்ரதம் மம - இது என்னுடைய வ்ரதம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும் அந்த எண்ணத்தை விட்டு அவனை அசைக்க இயலாதபடி உள்ளதான அவனுடைய குணமானது, (பம்போத்தர தேசஸ்தம்) – திருவாய்மொழி (6-11-10) - தேறுநீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர் - என்பதற்கு ஏற்ப பம்பை நதியின் வடக்குக்கரையில் அமைந்துள்ள திருவண்வண்டூரில் நிலையாக இருக்கும்.