Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 165)

மூன்றாம் ப்ரகரணம்

மெலிவிலும் சேமங்கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.

(மெலிவிலும்) இத்யாதி. அதாவது கீழ்ச்சொன்ன நிரதிசய போக்யமான விஷயத்தை சீக்ரமாகக் கிட்டியநுபவிக்கப் பெறாமையாலே “வைகலும் வினையேன் மெலிய” என்று நாள்தோறும் மெலியுமளவிலும், “அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” என்று அவனே ரக்ஷகனென்று அத்யவஸித்திருக்கும்படி பண்ணும் “பெருமானது தொல்லருளே” என்கிற க்ருபை; “திருவல்லவாழ் சேமங்கொள் தென்னகரிலே” தொன்மை பழமையாகையாலே, நித்யமாயிருக்கு மென்கை.

– (மெலிவிலும்) - கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான எல்லையற்ற இனிமை கொண்ட விஷயத்தை மிகவும் விரைவாக அடையப் பெற்று அனுபவிக்க இயலாத காரணத்தால் திருவாய்மொழி (5-9-1) - வைகலும் வினையேன் மெலிய - என்பதற்கு ஏற்ப அன்றாடம் மெலிந்தபடி உள்ளபோது. (சேமம் கொள்விக்கும்) - திருவாய்மொழி (5-9-11) - அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் – என்பதற்கு ஏற்ப அவனே நம்மைக் காக்கவல்லவன் ஆவான் என்று உறுதியுடன் இருக்கும்படியாகச் செய்கின்ற. (க்ருபை) – திருவாய்மொழி (5-9-9) - பெருமானது தொல்லருளே – என்ற அருளானது, (தென்னகரிலே நித்யம்) - திருவாய்மொழி (5-9-11) - திருவல்லவாழ் சேமங்கொள் தென்னகரிலே - என்பதற்கு ஏற்ப திருவல்லவாழ் திவ்யதேசத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும்.