Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 164)

மூன்றாம் ப்ரகரணம்

களைகணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.

(களைகணற்றாரை) இத்யாதி. அதாவது “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்” என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை “நீராயலைந்து கரைய வுருக்குகின்ற” என்று சிதிலராம்படி பண்ணுகிற ஆராவமுதான மாதுர்யம்; குடமூக்கு என்கிற கும்பகோணத்திலே மேன்மேலுமாராமல் புஜிக்கும்படி பெருகா நிற்குமென்கை.

(களைகணற்றாரை உருக்கும் மாதுர்யம்) - திருவாய்மொழி (5-8-8) – களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் - என்பதற்கு ஏற்ப நம்மைக் காக்கவல்லவர்கள் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் கொண்டவர்களை, திருவாய்மொழி (5-8-1) – நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற - என்பதற்கு ஏற்ப உருக்குலைந்து போகும்படியாகக் செய்கின்றதும், எத்தனை அனுபவித்தாலும் திகட்டாத அமுதமாக உள்ளதும் ஆகிய இனிமை, (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்) – இரண்டாம் திருவந்தாதி (97) - குடமூக்கு – என்பதற்கு ஏற்ப கும்பகோணத்தில் மேலும் மேலும் மனநிறைவு அடையாமல் அனுபவிக்கும்படியாக உள்ளது என்று கருத்து.