Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 163)

மூன்றாம் ப்ரகரணம்

ருசிவிவசர்க்குப் பாதமே சரணாக்கு மௌதார்யம் வானமாமலையிலே கொழுந்து விடும்.

இப்படி பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான வோரோ குணங்கள் ப்ராதாந்யேந ப்ரகாசிக்கும் ஸதலங்களை அருளிச்செய்த வநந்தரம், மற்றுமுண்டான குணங்களிலோரொன்று ப்ராதாந்யேந ப்ரகாசிக்கும் ஸ்தலங்களை, சிரீவரமங்கை முதலாகத் திருப்பேரெல்லையாகத் திருவாய்மொழியடைவிலே யருளிச்செய்கிறார் மேல் (ருசிவிவசர்க்கு) இத்யாதி.

– இப்படியாகப் பரத்வம் போன்ற நிலைகளில் மட்டுமே காணப்படக் கூடிய குணங்கள், முதன்மையாக வெளிப்படுகின்ற விளங்குகின்ற திவ்யதேசங்களை அருளிச்செய்தார். அடுத்து மற்ற குணங்கள் முதன்மை பெற்று விளங்குவதான திவ்ய தேசங்களை சிரீவரமங்கை தொடக்கமாக, திருப்பேர் என்பது முடிய உள்ளவற்றை அடுத்து அருளிச்செய்கிறார்.

அதாவது கீழ்ச்சொன்ன லாவண்யத்தாலே ஒருவராலும் நிவர்த்திப்பிக்க வொண்ணாதாபடி பிறந்த ருசியாலே பரவசராய் அநந்யகதிகளானவர்களுக்கு, “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்னும்படி திருவடிகளே உபாயமாகக் கொடுக்கும் “கார்முகில்வண்ணன்” என்கிற ஔதார்யம்குணம் “சிரீவர மங்கலத்தவர் கைதொழவிறை வானமாமலை” என்று சிரீவரமங்கயிலெழுந்தருளியிருக்கிற வானமாமலைபக்கலிலே “வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர் கொழுந்தே” என்கிறபடியே தானே வந்து இடங்கொண்டு தன்னை யுபகரிக்கும்படி கொழுந்துவிட்டு வளருமென்கை.

– (ருசி இவர்க்கு) - மேலே கூறப்பட்ட லாவண்யம் போன்றவை காரணமாக யாராலும் தடுக்க இயலாதபடி பிறந்த ருசியின் விளைவாக, மிகுந்த பரவசம் அடைந்து, வேறு கதி அற்றவர்களுக்கு. (பாதமே பரண் ஆகும்) – திருவாய்மொழி (5-7-10) - ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – என்பதற்கு ஏற்ப தனது திருவடிகளையே உபாயமாகக் கொடுக்கின்ற, (ஔதார்யம்) – திருவாய்மொழி (5-7-3) – கார்முகில் வண்ணன் - என்பதான தாராளகுணம், (வானமாமலையிலே கொழுந்துவிடும்) - திருவாய்மொழி (5-7-6) - சிரீவர மங்கலத்தவர் கைதொழவிறை வானமாமலை – என்று கூறுவதற்கு ஏற்ப சிரீவரமங்கையில் எழுந்தருளியுள்ள வானமாமலையிடம், திருவாய்மொழி (5-7-7) - வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர் கொழுந்தே – என்பதற்கு ஏற்ப தானே வந்து நின்று, தன்னை அளிக்கும்படியாகக் கொழுந்துவிட்டு நிற்கும் என்று கருத்து.