Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 162)

மூன்றாம் ப்ரகரணம்

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீலமேனியின் ருசி ஜநக விபவ லாவண்யம் பூர்ணம்.

– இதுக்குப் பின்பு திருப்பதி விஷயமான திருவாய்மொழி எங்ஙனேயோவாகையாலே திருக்குறுங்குடியில் ப்ரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச்செய்கிறார் (வைஷ்ணவ) இத்யாதியால்.

– ஆழ்வார்திருநகரியைத் தொடர்ந்து திவ்யதேசத்தைக் குறித்து உரைக்கும் திருவாய்மொழி “எங்ஙனேயோ” என்பதால், அதில் கூறப்படுவதான திருக்குறுங்குடியில் வெளிப்படுகின்ற குணத்தை அடுத்து அருளிச்செய்கிறார்.

திருக்குறுங்குடியில்லென்னாதே வைஷ்ணவ வாமநத்தில் என்றது ஸாபிப்ராயம். அதாவது வாமநாவதாரத்தில் தன்னுடைமை பெறுகைக்குத்தான் அர்த்தியானாப்போலே அர்த்தியாய் நின்று, பாஷ்யகாரர் பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்” என்கையாலே ஸ்ரீவைஷ்ணவநம்பி என்று திருநாமமாய் வாமநாவதாராம்சமாகப் புராண ஸித்தராயிருக்கிற நம்பியுடைய திருப்பதியென்கை. அன்றிக்கே “அறியக்கற்று வல்லார் வைட்டணவர்” என்று இத்தேச விஷயமான திருவாய்மொழியைக் கற்றவர்கள் வைஷ்ணவராவ ரென்கையாலே, வைஷ்ணவர்களுடையதாய் வாமந க்ஷேத்ரமாயிருக்கிற தேசத்திலென்னவுமாம். வாமநாவதார ப்ரஸங்கத்துக்கு ப்ரயோஜநம் (விபவ லாவண்யம் பூர்ணம்) என்கிறதுக்குடலாக விபவாந்வயத்தை யுணர்த்துகையும், “குறியவன்குடி குறுங்குடி” என்னுமர்த்தத்தைத் தெரிவிக்கையும், ஆகவிப்படி யிருந்துள்ள திருக்குறுங்குடியில், “நிறைந்த சோதிவெள்ளஞ் சூழ்ந்த நீண்ட பொன்மெனியோடும் நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான்” என்றும், “நீலமேனியும் நான்கு தோளும் என்னெஞ்சம் நிறைந்தனவே” என்றும் சொல்லுகிறபடியே இவர் திருவுள்ளத்திலே வேறொன்றுக் கிடமறும்படி ப்ரகாசிக்கிற காலமேக நிபச்யாமமான விக்ரஹத்தினுடைய “செல்கின்ற தென்னெஞ்சம்” என்னும்படி மேன்மேலு மநுபவ ருசி ஜநகமாய் “ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந்”, “ரூப ஸம்ஹந்நம் லக்ஷ்மீம்” என்று விபவத்தில் ப்ரகாசிக்குமதாகச் சொன்ன ஸமுதாய சோபையான லாவண்யம், “நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த” என்கையாலே பூர்ணமாயிருக்குமென்கை.

– (வைஷ்ணவ வாமநத்தில்) - திருக்குறுங்குடி என்று கூறாமல் “வைஷ்ணவ வாமநத்தில்” என்று ஏன் கூறினார் என்றால் ஒரே கருத்து கொண்டவை என்பதால் ஆகும். வாமனனாக வந்து தனக்குச் சேரவேண்டியதை பெறுவதற்காக இரந்தது போன்று, “நாமும் நம்முடைய இராமாநுசனை நமது உடைமையாகக் கொண்டுள்ளோம்” என்ற காரணத்தால் ஸ்ரீவைஷ்ணவநம்பி என்ற திருநாமம் கொண்டு வாமன அவதார அம்சமாகப் புராணங்களில் கூறப்பட்டவனாக உளள நம்பியைக் கொண்ட திவ்யதேசம் என்பதைக் கூறுவதற்காக ஆகும். அல்லது திருவாய்மொழி (5-5-11) – அறியக்கற்று வல்லார் வைட்டணவர் - என்பதற்கு ஏற்ப இந்தத் திவ்யதேசத்தைக் குறித்த இந்த திருவாய்மொழியைக் கற்பவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று கூறுவதால் ஸ்ரீவைஷ்ணவர்களுடையதாக உள்ள வாமன க்ஷேத்ரம் என்றுள்ள திவ்யதேசம் என்பதால் இவ்விதம் கூறினார் எனலாம். வாமன அவதாரம் குறித்து இங்கு கூறியதன் பலன் என்ன என்றால், (விபவ லாவண்யம் பூர்ணம்) என்பதற்கு ஏற்ப விபவத்தின் தொடர்பை உணர்த்துதல் மற்றும் வாமனனுடைய இடமானது குறுங்குடி என்று உணர்த்துதல் ஆகியவையே ஆகும். இப்படிப்பட்டதாக உள்ள திருக்குறுங்குடியில், (நிறைந்த நீலமேனியின்) – திருவாய்மொழி (5-5-7) - நிறைந்த சோதிவெள்ளஞ் சூழ்ந்த நீண்ட பொன்மெனியோடும் நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் - என்றும், திருவாய்மொழி (5-5-6) - நீலமேனியும் நான்கு தோளும் என்னெஞ்சம் நிறைந்தனவே – என்றும் கூறுவதற்கு ஏற்ப இவருடைய திருவுள்ளத்தில் வேறு எதற்கும் இடம் இல்லாதபடியாக ப்ரகாசிக்கின்ற மழைமேகம் போன்று நிறம் கொண்டதான திருமேனியினுடைய, (ருசி ஜநகம்) – திருவாய்மொழி (5-5-1) – செல்கின்றது என்னெஞ்சம் - என்பதற்கு ஏறப மேன்மேலும் அனுபவ ருசியை ஏற்படுத்துவதான, (விபவ லாவண்யம்) - இராமாயணம் ஸுந்தரகாண்டம் (34-30) - ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந் - அழகான ரூபம் கொண்டவன், ப்ரகாசம் பொருந்தியவன் என்றும், ஆரண்யகாண்டம் (1-13) - ரூப ஸம்ஹந்நம் லக்ஷ்மீம் - மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்த ரூபம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அவதாரங்களில் வெளிப்படுவதாகக் கூறப்படுகின்ற அழகுக்கூட்டம் என்பதான லாவண்யம், (பூர்ணம்) - திருவாய்மொழி (5-5-7) - நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த – என்பதால் பரிபூர்ணமாக உள்ளது என்று கருத்து.