Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 161)
மூன்றாம் ப்ரகரணம்
உபய ப்ரதாந ப்ரணவமான உறைகோயிலில் எத்தேவுமென்னும் பரேசத்வம் பொலியும்.
இனி, “ஒழிவில் கால”த்துக்குப் பின்பு திருப்பதி விஷயமான திருவாய்மொழி “ஒன்றுந்தேவா”கையாலே திருநகரியில் ப்ரகாசிக்கிற குணத்தை யருளிச்செய்கிறர் (உபயேத்யாதியால்).
“ஒழிவில் காலம்” திருவாய்மொழியைத் தொடர்ந்து திவ்யதேச ஸம்பந்தம் கொண்டதான திருவாய்மொழியாக “ஒன்றுந்தேவும்” என்பது உள்ளதால், அதில் கூறப்படுவதான ஆழ்வார்திருநகரியில் வெளிப்படும் குணத்தை அருளிச்செய்கிறார்.
அதாவது (உபயப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்) “ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்றும், “ஓங்காரோ பகவாந் விஷ்ணு:” என்றும் சொல்லுகிறபடியே சப்தார்த்தங்களினுடைய ப்ராதாந்யத்தாலே ஜீவேச்வரர்க ளிருவர்க்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடையவும் ப்ராதாந்யம் தோன்றுவிக்கிற ப்ரணவம் போலே ஆழ்வாருடையவும் பொலிந்து நின்ற பிரானுடையவும் ஆஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும் ப்ராதாந்யம் தோற்றும்படியிருப்பதாய், “அவன் மேவியுறை கோவில்” என்று பரமபதத்தில் ஸம்ஸாரிகளிழவை நினைத்து உள்வெதுப்போடே யிருக்குமா போலன்றிக்கே, அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுமையாலே உள்வெதுப்பற்று வர்த்திக்கிற ஸ்தலமான திருநகரியில், (எத்தேவுமென்னும் பரேசத்வம் பொலியும்) “எத்தேவுமெவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே திருக்குருகூரதனுள் குறிய மாணுருவாகிய நீள்குடக்கூத்தன்” என்று ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்டஜ் வஸ்துக்களும் ஸ்வாஸாதாரண விக்ரஹத்தோபாதி தனக்கு ப்ரகாரமாம்படியிருக்கிற ஐச்வர்யத்தோடே கூட, திருக்குருக்கூரிலே ஸுலபனாய் வந்து நின்றானென்று சொல்லப்பட்ட “திருக்குருகூரதனுள் பரன்”, “திருக்குருகூரதனுள் ஈசன்” என்று ஸுலபனான நிலையில் ப்ரகாசிக்கிற பரத்வ லக்ஷணமான ஈச்வரத்வம் “பொலிந்து நின்ற பிரான்” என்கையாலே அபிவ்ருத்தமாகா நிற்கும்மென்கை.
– (உபய ப்ரதாந ப்ரணவமான) - ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத - ஓம் என்று ஆதமாவை த்யானிப்பானாக – என்றும், ஓங்காரோ பகவாந் விஷ்ணு: - ஓம் என்பது பகவானாகிய விஷ்ணு - என்றும் கூறுவதற்கு ஏற்ப, இந்த இரண்டு வாக்கியங்களிலும் கூறப்பட்டவர்களாக, முதலில் உள்ள ப்ரமாணத்தின் சொல் காரணமாக ஜீவாத்மா, இரண்டாம் ப்ரமாணத்தின் பொருள் காரணமாகப் பரமாத்மா ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவருடைய முதன்மையை உணர்த்துவதாக உள்ள “ஓம்” என்ற ப்ரணவம் போன்று ஆழ்வார் மற்றும் “பொலிந்து நின்ற பிரான்” ஆகிய இருவருடைய ஆணைக்கு ஏற்றபடி உள்ள காரணத்தால், இவர்கள் இருவருடைய மேன்மை வெளிப்படும்படியும்; திருவாய்மொழி (4-10-2) – அவன் மேவியுறை கோவில் - என்பதற்கு ஏற்ப பரமபதத்தில் உள்ளபோது ஸம்ஸாரிகள் தன்னை இழந்து நிற்கிறார்களே என்று எண்ணிக் கலங்கியபடி உள்ள நிலை போன்று அல்லாமல், அவர்கள் மிகவும் அருகில் வந்து நிற்பதால் உள்ளக் கலக்கம் நீங்கப் பெற்று வசிப்பதாகவும் உள்ள திவ்யதேசமான ஆழ்வார்திருநகரியில். (எத்தேவு என்னும்) - திருவாய்மொழி (4-10-10) – எத்தேவுமெவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே திருக்குருகூரதனுள் குறிய மாணுருவாகிய நீள்குடக்கூத்தன் – என்று கூறுவதற்கு ஏற்ப, “தன்னைத் தவிர்த்து உள்ள மற்ற அனைத்து பொருள்களும் தனக்கு மட்டுமே உரிய திருமேனி போன்று தனக்காகவே உள்ள நிலையை வெளிப்படுத்தும்படியான ஐச்வர்யத்துடன் கூடியவனாக திருக்கூருகூரில் அனைவரும் வந்து அண்டும்படியாக நின்றான்”, என்று கூறப்பட்ட. (பர ஈசத்வம்) – திருவாய்மொழி (4-10-3) – திருக்குருகூரதனுள் பரன் - என்றும், திருவாய்மொழி (4-10-4) – திருக்குருகூரதனுள் ஈசன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப எளியவனாக நிற்கும்போதிலும் வெளிப்படுகின்ற பரத்வம் என்பதற்கு இலக்கணமாக உள்ள ஈச்வரத் தன்மையானது, (பொலியும்) – திருவாய்மொழி (4-10-5) – பொலிந்து நின்ற பிரான் - என்று கூறுவதால் வெளிப்பட்டபடி இருக்கும் என்று கருத்து.