Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 160)

மூன்றாம் ப்ரகரணம்

மண்ணோர் விண்ணோர் வைப்பில், போகின்ற ஏழுலக்குயிர் பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்ய முஜ்ஜ்வலம்.

– இனி, கோயிலுக்கனந்தரம் சொல்லப்படுவதான திருமலையில் ப்ரகாசிக்கிற குணத்தை யருளிச்செய்கிறார் (மண்ணோர்) என்று தொடங்கி.

திருவரங்கம் பெரியகோயிலுக்கு அடுத்து உரைக்கப்படுவதாகிய திருவேங்கடத் திருமலையில் வெளிப்படுகின்ற குணத்தை அருளிச்செய்கிறார்.

அதாவது (மண்ணோர் விண்ணோர் வைப்பில்) “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” என்றும், “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று உபயவிபூதியிலுள்ளார்க்கும் சேமித்து வைத்த நிதி போலே ப்ராப்யமாயிருக்கிற திருமலையில். (போகின்ற ஏழுலகுக்குயிர், பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்ய முஜ்ஜ்வலம்) “போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தையுயிராகின்ற” யென்றும், “கண்ணாயேழுலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வகாலமும் ஸர்வாத்மாக்களுக்கும் ஸர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஸர்வர்க்குமாத்மாவா யிருக்கிற அந்தர்யாமியுடைய குணமாயிருப்பதாய், “என்கண் பாசம் வைத்த”, “நிகரில் புகழாய்” என்று மிகவும் தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப் பண்ணினானென்றும் ஒப்பில்லாப் புகழை யுடையவனே யென்றும் சொல்லப்பட்ட வாத்ஸல்யம் “பரஞ்சுடர்ச்சோதி” என்று வடிவிலே தொடைகொள்ளலாம்படி உஜ்ஜ்வலமாயிருக்குமென்கை. (பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம்) என்கையாலே “ஒழிவில் காலம்”, “உலகமுண்ட பெருவாயன்” இரண்டையும் சேர்த்துப் பிடித்தருளிச் செய்தமை தோற்றுகிறது. கோயிலுக்கனந்தரம் திருமலையைச் சொல்லுகை தேட்டமாகில் இரண்டு திருமலையும் ஒவ்வாதோ? தெற்குத் திருமலை விஷயமான “கிளரொளியிளமை” கீழே கிடக்க, “ஒழிவில் கால”த்தில் சொன்ன வடக்குத் திருமலையை அருளிச்செய்வானென்னென்னில்; பரத்வாதிகளுக்கு அஸாதாரண குணப்ரகாசகமான ஸ்தலங்களை அருளிச்செய்கிற ப்ரகரணமாகையாலே, தெற்குத் திருமலையில் ப்ரகாசிக்கிற குணம் இதுக்குச் சேர்த்தியில்லாலது கொண்டு “கிளரொளி யிளமை”யைச் “செஞ்சொற் கவியோடு” சேர்த்தருளிச் செய்வதாக விட்டு வைத்து இது முதலாக அருளிச்செய்தாரித்தனை.

– (மண்ணோர் விண்ணோர் வைப்பில்) – திருவாய்மொழி (1-8-3) - கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு – என்றும், நான்முகன் திருவந்தாதி (45) – தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு - என்றும் கூறுவதற்கு ஏற்ப நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டிலும் உள்ளவர்களுக்கும் சேமித்து வைக்கப்பட்டுள்ள புதையல் போன்று அடையவேண்டிய இலக்காக உள்ள திருமலையில். (போகின்ற) - திருவாய்மொழி (2-6-10) - போகின்ற காலங்கள் போயகாலங்கள் போகுகாலங்கள் தாய்தந்தையுயிராகின்ற - என்றும், (ஏழுலகுக்கு உயிர்) - பெரியதிருமொழி (1-9-10) - கண்ணாயேழுலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து காலங்களிலும், அனைத்து ஆத்மாக்களுக்கும் அனைத்து உறவினனாகவும் இருப்பதால், அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ள அந்தர்யாமியின் குணம் உள்ளதாகிய (பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம்) – திருவாய்மொழி (3-3-4) – என்கண் பாசம் வைத்த - என்பதற்கு ஏற்ப மிகவும் தாழ்ந்தவனாக உள்ள என்னிடம் சேர்க்கையை ஏற்படுத்திக்கொண்டு நின்றான் என்றும், திருவாய்மொழி (6-10-10) – நிகரில் புகழாய் – என்று கூறுவதற்கு ஏற்ப ஈடில்லாத புகழ் கொண்டவனே என்றும் கூறப்படுகின்ற வாத்ஸல்யம், (உஜ்ஜ்வலம்) – திருவாய்மொழி (3-3-4) - பரஞ்சுடர்ச்சோதி – என்று கூறுவதற்கு ஏற்ப வடிவத்தில் தொடை கொள்வதற்கு ஏற்றபடி ப்ரகாசமாக இருக்கும். (பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம்) - இவ்விதமாகக் கூறுவதால் “ஒழிவில் காலம்” மற்றும் “உலகம் உண்ட பெருவாயா” ஆகிய இரண்டையும் சேர்த்து அருளிச்செய்தமை வெளிப்படுகிறது. திருவரங்கத்திற்கு பின்னர் திருமலையைக் குறித்து உரைப்பதில் விருப்பம் இருந்தது என்றால், திருவேங்கடம் மற்றும் திருமாலிருஞ்சோலை ஆகிய இரண்டும் ஒன்றாகவே உள்ளது அல்லவோ? மேலும் திருமாலிருஞ்சோலை திருமலை விஷயமாக “கிளரொளி இளமை” என்ற இரண்டாம் திருவாய்மொழி உள்ளபோது, அதனைக் கூறாமல் வரிசையில் மூன்றாவதாக உள்ள “ஒழிவில் காலம்” என்பதில் கூறப்பட்ட திருவேங்கட திருமலையை ஏன் முதலில் கூறவேண்டும் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். பரத்வம் போன்றதான ஐந்து நிலைகளில் ஒவ்வொரு நிலைக்கே உரியதான குணங்கள் வெளிப்படுகின்ற திவ்யதேசங்கள் குறித்து அருளிச்செய்யும் பகுதி என்பதால், திருமாலிருஞ்சோலையில் வெளிப்படும் குணம் என்பது திருவேங்கடத்தில் வெளிப்படும் குணத்தைக் காட்டிலும் வேறானதாக உள்ளதால், “கிளரொளி இளமை” என்ற திருவாய்மொழியை, “செஞ்சொல்” என்பதான திருவாய்மொழியுடன் சேர்த்து அருளிச்செய்ய எண்ணியவராக, இங்கு திருவேங்கடத்தை முதலில் அருளிச்செய்தார்.