Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 159)

மூன்றாம் ப்ரகரணம்

வன்பெருவானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி வடிவுடைக் கடலிடங் கட்கிலீயென்னு மவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸௌஹார்த்த ப்ரதாநம்.

இப்படி அர்ச்சாவதாரத்திலே எல்லாம் பூர்ணமாகில் எல்லாத் திருப்பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க ப்ரகாசிக்குமோவென்னு மாகாங்க்ஷையிலே, பரத்வாதிகளுக்கு அஸாதாரணமாயும் ஸாதாரணமாயுமிருக்கும் குணங்களில் ஓரோ குணம் ஓரோ திருப்பதியிலே ப்ராதாந்யேந ப்ரகாசிக்கும்படியை இவ்வாழ்வா ரநுஸந்தித்த திருப்பதிகள்தோறும் தர்சிப்பிக்கிறார் மேல். அதில் ப்ரதமத்திலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணம் ப்ராதாந்யேந ப்ரகாசிக்கிற திருப்பதிகளை யருளிச்செய்யக் கோலி, அதில் திவ்யதேச ப்ரதானமான கோயிலில் ப்ரகாசிக்கிற குணத்தை ஆதியிலே யருளிச்செய்கிறார் (வன்பெருவானகம்) என்று தொடங்கி.

– இவ்விதமாக அர்ச்சாவதாரத்தில் அனைத்துவிதமான திருக்கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக உள்ளது என்றாலும், அனைத்து திவ்யதேசங்களிலும் இந்த அனைத்து குணங்களும் ஒரே போன்று வெளிப்படுமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு விடை அளிக்கிறார். பரத்வம் போன்ற நிலைகளில், ஒவ்வொரு நிலைக்கு மட்டுமே உரியதாகவும், அந்த அனைத்திற்கும் பொதுவானதாகவும் உள்ள குணங்களில் ஒவ்வொரு குணமும் ஒவ்வொரு திவ்யதேசத்தில் முதன்மையாக வெளிப்படும் விதத்தை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள் கொண்டு விளக்குகிறார். முதலில் பரத்வம் போன்ற நிலையில், அந்தந்த நிலைகளுக்கே உரிய ஒவ்வொரு குணமும் முதன்மையாக வெளிப்படும் திவ்யதேசங்களை உரைக்கத் திருவுள்ளம் கொண்டார். ஆகவே அனைத்து திவ்யதேசங்களிலும் முதன்மையான திருவரங்கம் பெரியகோயிலில் வெளிப்படும் குணத்தைத் தொடக்கத்தில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, (வன்பெருவானகமுதலுய்ய) “வன்பெரு வானகமுய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய” என்று முதலில் ப்ரஹ்மலோகத்திலே யெழுந்தருளிப் பின்பு பூலோகத்தில் எழுந்தருளின கட்டளையில் நைமித்திக ப்ரளயத்துக்கு இளையாத ப்ரஹ்மலோகம் முதலான இவ்வருகுண்டான உபரிதந லோகங்களும் அங்குள்ள ப்ரஹ்மாதிகளும், பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும்படியாக. (இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி) “திருவாள னினிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம்” என்றும், “திருவாளன் திருப்பதி” என்றும் சொல்லுகிறபடியே திருவுள்ளமுகந்து கண்வளர்ந்தருளுகிற ஸ்ரீய:பதியுடைய திருப்பதியான கோயிலானது; (வடிவுடைய கடலிடம் கட்கிலீ யென்னுமவற்றில்) “வடிவுடை வானோர் தலைவனே” என்றும், “கடலிடங் கொண்ட கடல்வண்ணா” என்றும், “கட்கிலீ” என்றும், “காகுத்தா” என்றும் சொல்லும்படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக்கொண்டு (இவள் திறத்து என்கொலோவென்பிக்கிற வ்யூஹ ஸௌஹார்த ப்ரதாநம்) “இவள் திறத்தென் சிந்தித்தாய்” என்றும், “என்கொலோ முடிகின்றதிவட்கே” என்றும், ‘இவளிடையாட்டத்தில் தேவர் சிந்தித்ததென்? இவள் காரியம் என்னாய் முடியக்கடவது?’ என்று சொல்லும்படி பண்ணுகிற “பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்”யும் வ்யூஹகுணமான ஸௌஹார்த்தத்தை ப்ரதானமாக வுடைத்தாயிருக்கு மென்கை. இஸ்தலத்திலே வ்யூஹ ஸௌஹார்தம் ப்ராதாந்யேந ப்ரகாசிக்குமென்றபடி.

– (வன்பெருவானகமுதலுய்ய) – பெருமாள் திருமொழி (1-10) – வன்பெரு வானகமுய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய – என்பதற்கு ஏற்ப முதலில் ப்ரஹ்மலோகத்தில் எழுந்தருளி, அதன் பின்னர் பூலோகத்தில் எழுந்தருளிய விதத்தில், நைமித்திக ப்ரளயத்தால் பாதிக்கப்படாத ப்ரஹ்மலோகம் முதலான மற்ற லோகங்களும், அங்குள்ள நான்முகன் உள்ளிட்டவர்களும், இந்த உலகில் உள்ள மனிதர்களும் பிழைத்துக் கரையேறும்விதமாக. (இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி) - பெரியாழ்வார் (4-9-10) - திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம் – என்றும், பெரியாழ்வார் (4-8-10) - திருவாளன் திருப்பதி – என்றும் கூறுவதற்கு ஏற்ப தனது திருவுள்ளம் மகிழ்ந்து திருக்கண்கள் வளர்கின்ற மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸர்வேச்வரனுடைய இருப்பிடமான திருவரங்கம் பெரியகோயில் என்பதானது, (வடிவுடைய கடலிடம் கட்கிலீ யென்னுமவற்றில்) – திருவாய்மொழி (7-2-10) – வடிவுடை வானோர் தலைவனே -என்றும், (7-2-7) - கடலிடம் கொண்ட கடல்வண்ணா – என்றும், (7-2-3) – கட்கிலீ - என்றும், (7-2-3) - காகுத்தா – என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான பரத்வம் போன்ற பல்வேறு நிலைகளிலும் இருந்தபடி. (இவள் திறத்து என்கொலோவென்பிக்கிற வ்யூஹ ஸௌஹார்த ப்ரதாநம்) - திருவாய்மொழி (7-2-4) – இவள் திறத்தென் சிந்தித்தாய் - என்றும், (7-2-2) – என்கொலோ முடிகின்றதிவட்கே - என்றும் கூறுவதற்கு ஏற்ப, “இவள் விஷயத்தில் நீ என்ன நினைத்துள்ளாய்? இவளுடைய வாழ்க்கை எவ்விதம் செல்லப்போகிறது?” என்று புலம்பும்படியாகக் செய்கிற. (வ்யூஹ ஸௌஹார்த்த ப்ரதாநம்) – திருவாய்மொழி (2-6-5) - பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த - என்பதற்கு ஏற்ப யோக நித்திரையில் சிந்தனை செய்தபடி, வ்யூஹகுணமான “உலகில் உள்லவர்களைக் காப்பாற்றுதல் எப்படி” என்ற எண்ணத்தையே முதன்மையாகக் கொண்டிருப்பதாக உள்ளது. ஆக திருவரங்கத்தில், “அனைத்தையும் காப்பது எப்படி” என்று சிந்தித்தபடி உள்ளதான ஸௌஹார்தம் என்ற குணமே முதன்மையாக வெளிப்படுகிறது.