Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 158)
மூன்றாம் ப்ரகரணம்
தமருகந்த அடியோமுக்கே யென்னும் பின்னானார் வணங்குமிடத்திலே யெல்லாம் பூர்ணம்.
ஆனால் ஐந்திலு மொத்திருக்கையன்றிக்கே அர்ச்சாவதாரத்திலே இவர் அண்டியிருப்பானென் னென்னுமாகங்க்ஷையிலே இதன் குணபூர்த்தியை அருளிச்செய்கிறார் (தமருகந்த) என்று தொடங்கி.
– ஆனால் பரத்வம் போன்ற ஐந்து நிலைகளும் ஒரே போன்று உள்ளபோது, நம்மாழ்வார் அர்சாவதாரத்தில் மட்டுமே அதிக ஈடுபாடு கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, அர்ச்சாவதாரத்தில் காணப்படும் குணங்களின் நிறைவை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “தமருகந்த தெவ்வுருவ மவ்வுருவந்தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர்” என்று ஆச்ரிதருகந்த த்ரவ்யங்களே தனக்குத் திருமேனியாகவும், அவர்களுகந்த திருநாமங்களே தனக்குத் திருநாமமாகவும் கொண்டிருக்குமென்றும். “அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீரிந்தளுரீரே” என்று தேச கால கரண விப்ரக்ருஷ்டதைகளாலே பரத்வாதிகளில் அணுகுகைக்கு ஆளன்றிக்கே அநந்யகதிகளா யிருக்கிற வெங்களுக்கு, ருசி பிறந்தபோதே நினைத்தவைகளெல்லா மநுபவிப்பிக்கைக்காகவன்றோ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறதென்றும் சொல்லப்பட்ட “பின்னானார் வணங்கும் சோதி” என்று அவதாரங்களுக்குப் பிற்பாடரானவர்களுக்கு அநுபாவ்யமான அர்ச்சாவதாரத்திலே, “ஸர்வம் பூர்ணம்ஸஹோம்” என்கையாலே பரத்வாதிகளி லநுபாவ்யமான குணங்களெல்லாம் பூர்ணமென்கை. ஆகவிப்படி ஆச்ரிதாதீந ஸ்வரூப ஸ்தித்யாதிகமாய் “அடியோமுக்கே” என்னும்படி கறை விழுந்தவிடமான அர்ச்சாவதாரத்தில் முற்பட்டவற்றிலுள்ளவையும் காணலாமாகையாலே “தேவ பிரானறியு” மென்னும்படி மண்டியிருப்பரென்று கருத்து.
– (தமர் உகந்த) – முதல்திருவந்தாதி (44) – தமர் உகந்த தெவ்வுருவ மவ்வுருவந்தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர் – என்பதற்கு ஏற்ப அடியார்கள் மிகவும் விரும்புகின்ற பொருள்களையே தனது திருமேனியாகவும், அவர்களுக்கு மிகவும் விருப்பமான திருநாமங்களையே தனது திருப்பெயராகவும் கொண்டிருப்பான் என்றும், (அடியோமுக்கே என்னும்) – பெரியதிருமொழி (4-9-5) - அடியோமுக்கே யெம்பெருமானல்லீரோ நீரிந்தளுரீரே - என்பதற்கு ஏற்ப இடம், காலம், உறுப்புகள் போன்ற அனைத்தாலும் எட்டாத தூரத்தில் உள்ளதால் பரத்வம் போன்ற நான்கு நிலைகளை அண்டுவதற்கு ஏற்றவர்கள் யாரும் இன்றி, வேறு கதி அற்றவர்களாக இருக்கின்ற எங்களுக்கு அவன் மீது ஈடுபாடு ஏற்பட்ட உடனேயே நாங்கள் நினைத்த விதங்களில் எல்லாம் எங்களை அனுபவிக்கும்படிச் செய்வதற்காக அல்லவோ திருவிந்தளூரில் வந்து நிற்கிறான் என்றும் கூறப்பட்டதாகிய. (பின்னானார் வணங்கும் இடத்திலே) - திருநெடுந்தாண்டகம் (10) – பின்னானார் வணங்கும் சோதி - என்பதற்கு ஏற்ப அவதாரங்களுக்கு பிற்பட்ட காலத்திலே பிறந்தவர்களும் அனுபவிப்பதற்கு ஏற்றபடியான உள்ள அர்ச்சாவதாரத்திலே. (எல்லாம் பூர்ணம்) - ஸர்வம் பூர்ணம்ஸஹோம் – அனைத்தும் பரிபூர்ணமாக உள்ளது என்பதற்கு ஏற்ப பரத்வம் போன்ற நிலைகளில் அனுபவிக்கத்தக்க அனைத்து குணங்களும், அர்ச்சாவதாரத்தில் முழுமையாக உள்ளன என்று கருத்து. இப்படியாக அடியார்களுக்கு வசப்பட்டுள்ள இயல்பையும், பொருந்தி இருத்தல் என்பதையும், பெரியதிருமொழி (4-9-5) – அடியோமுக்கே - என்பதற்கு ஏற்ப உள்ளதையும் கொண்டதான கறைபடிந்த நிலையாகிய அர்ச்சாவதாரத்தில், முன்புள்ள நான்கு நிலைகளின் குணங்களையும் காணலாம். எனவே திருவாய்மொழி (7-10-10) – தேவபிரான் அறியும் - என்பதற்கு ஏற்ப ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பார் என்று கருத்து.