Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 157)

மூன்றாம் ப்ரகரணம்

பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்துக் காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி, ஆதுஞ் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம்.

இப்படி பலவிடங்களிலும் தூதுவிட்டால் ப்ராப்ய வஸ்த்வைக்யம் குலையாதோவென்கிற சங்கையிலே, பரத்வாதிகளில் ஸ்தல பேதமொழிய வஸ்து பேதமில்லை யென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் (பகலோலக்கம்) என்று தொடங்கி.

– இப்படியாகப் பலரையும் குறித்துத் தூது விட்டால், “அடையவேண்டிய இலக்கு ஒன்றே ஆகும்” என்னும் ஸித்தாந்தம் முரண்படாதோ என்ற கேள்விக்கு விடையாக, பரத்வம் போன்ற ஐந்து நிலைகளில் காணப்படுவது இடத்தின் வேறுபாடு மட்டுமே ஆகும் அல்லாமல், அடையப்படும் பொருளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதை உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.

– அதாவது, (பகலோலக்கமிருந்து) ஸகல பரிஜந ஸேவ்யனாய்க் கொண்டு தன் வீறு தோற்றப் பகலோலக்கமிருக்கையும், (கறுப்புடுத்துச் சோதித்து) ராஜ்யத்திலுள்ளார் தோஷகுணங்க ளறிகைக்காக ராத்ரியிலே பிறரறியாதபடி கறுப்புடுத்து நகரசோதநம் பண்ணுகையும், (கார்யம் மந்த்ரித்து) ராஜ்யத்தில் சிக்ஷை ரக்ஷைகளுக்காகக் கார்யவிசாரம் செய்கையும், (வேட்டையாடி) பின்பு துஷ்டஸ்த்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடுகையும், (ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி) அந்த ச்ரமம் தீர பூந்தோப்புக்களிலே அபிமதவிஷயங்களோடே விளையாடுகையுமாகிற ராஜ நீதியானது. (ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார்” என்றும், “அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்றும் சொல்லுகிறபடியே உபயவிபூதியிலும் ஏகதேசமும் சேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய், “பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்தோரரசே” என்று சொல்லப்பட்ட ஸௌலப்ய பரத்வ ப்ரணயித்வங்களாலே வந்த மூன்று முடிக்குரிய வானிளவரசான ஸர்வேச்வரனுக்கு. (விண்மீதென்கிற வைந்திலும் காணலாம்) “விண்மீதிருப்பாய்” என்று “வைகுண்டேது பரேலோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ:” என்கிறபடியே, “பகல் கண்டேன்” என்கிற ஒரு பகலான பரமபதத்திலே, “ஒண்டொடியாள் திருமகளும்” தானுமாய் நித்யமுக்தர் ஸேவிக்க ஓலக்கமிருக்கையும்; “இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்” என்று “யமாத்மா ந வேத” என்கிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அந்தர்யாமியாய், “உள்ளுருவாருள்ளிற்றெல்லாம்” அறிகையும்; “கடல் சேர்ப்பாய்” என்று பாற்கடல் யோகநித்திரை செய்து சேதந ரக்ஷோபாயங்களைச் சிந்திக்கையும்; அநந்தரம் “மண் மீதுழல்வாய்” என்று ரக்ஷணார்த்தமாக வந்தவதரித்து, “களிறும் புள்ளுமுடன் மடிய வேட்டையாடி வருவான்” என்கிறபடியே ஆச்ரித விரோதி துஷ்டஸ்த்வ நிரஸனமாகிற வேட்டையாடுகையும்; “மலைமேல் நிற்பாய்” என்று விரோதி நிரஸந ச்ரமமாற நிரதிசய போக்யங்களான “ஆராமம் சூழந்த” கோயில் திருமலை முதலான தேசங்களிலே ரஸோத்தரமாக வஸிக்கையுமாகிற இவையைந்திலும் காணலாமென்கை. இத்தால் பரத்வாதிகளில் ஸ்தல பேதமொழிய வஸ்து பேதமில்லாமை காட்டப்பட்டது.

– (பகலோலக்கமிருந்து) - அனைவராலும் வணங்கப்படுபவனாக இருக்கின்ற காரணத்தால் தனது ஆளுமை வெளிப்படும்படியாகப் பகலில் அரசசபையில் வீற்றிருத்தல். (கறுப்புடுத்துச் சோதித்து) - தனது நாட்டில் உள்ளவர்களுடைய குற்றங்கள் மற்றும் குணங்கள் ஆகியவற்றை அறியும்விதமாக இரவில் யாரும் அறியாதவிதத்தில் மாறுவேடம் பூண்டு நகர சோதனை செய்தல். (கார்யம் மந்த்ரித்து) - நாட்டில் உள்ள நல்லவர்களுக்கு ஏற்ற நன்மையைச் செய்து, அவர்களைக் காப்பாற்றத் தேவையான செயல்கள் குறித்து ஆராய்தல். (வேட்டையாடி) – தீயவிலங்குகளை அழிப்பதற்காக வேட்டை ஆடுதல். (ஆராமங்களிலே விளையாடும்) - வேட்டையாடிய களைப்பு நீங்கும்விதமாக பூந்தோட்டங்களில் தனக்கு விருப்பமானவர்களுடன் சேர்ந்து விளையாடுதல் என்பதான. (ராஜநீதி) - அரசர்களுக்கே உரிய செயல்பாடுகளை, (ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற) – நாச்சியார் திருமொழி (11-3) – பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் - என்றும், திருவிருத்தம் (33) – அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப இரண்டு விபூதிகளிலும் ஒரு சிறிய அளவு கூட விடாதபடி தனது திவ்யமான ஆணையை நடத்துபவனாகவும். (பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) – திருவிருத்தம் (80) - பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்தோரரசே - என்று கூறப்பட்டதான எளிமை, உயர்த்தி, அன்பு போன்ற தன்மைகள் மூலம் ஏற்பட்டதான மூன்று முடிக்கு உரியவன் என்றுள்ள ஸர்வேச்வரனுக்கு. (விண்மீதென்கிற வைந்திலும் காணலாம்) – திருவாய்மொழி (6-9-5) – விண்மீது இருப்பாய் - என்றும், வைகுண்டேது பரேலோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ: - சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டதான ஸ்வரூபத்தை உடைய, உலகங்கள் அனைத்திற்கும் நாயகனாகிய மஹாவிஷ்ணு நித்யஸூரிகளுடனும் பிராட்டிமார்களுடனும் ஸ்ரீவைகுண்டம் என்ற உயர்ந்த இடத்தில் வீற்றுள்ளான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, இரண்டாம் திருவந்தாதி (81) – பகல் கண்டேன் – என்பதற்கு ஏற்ப பகலான பரமபதத்தில், திருவாய்மொழி (4-9-10) - ஒண்தொடியாள் திருமகளும் – என்பதற்கு ஏற்ப உள்ள பெரியபிராட்டியும், தானும் நித்யஸூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் ஆகியவர்கள் வணங்கி நிற்கும்படியாக ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்தும், திருவாய்மொழி (6-9-5) – இவற்றுள் எங்கும் - என்றும், உபநிஷத்தில் – யம் ஆத்மா ந வேத – எந்தப் பரம்பொருளை இந்த ஆத்மா அறியவில்லையோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தான் எந்தெந்த பொருள்களில் வ்யாபித்துள்ளானோ அவை ஏதும் தன்னை அறியாதபடி அந்தர்யாமியாகவும், திருமாலை (34) – உள்ளுருவாருள்ளிற்றெல்லாம் - என்பதற்கு ஏற்ப அனைவரின் உள்ளிருந்து அனைத்தையும் அறிதல்; திருவாய்மொழி (6-9-5) - கடல் சேர்ப்பாய் – என்று கூறுவதற்கு ஏற்ப திருப்பாற்கடலில் யோகநித்திரையில் இருந்து அனைத்து சேதநர்களையும் காப்பாற்றும் வழிகளை ஆலோசித்தபடி இருத்தல்; தொடர்ந்து திருவாய் (6-9-5) - மண் மீது உழல்வாய் – என்பதற்கு ஏற்ப அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு வநது அவதரித்தல்; நாச்சியார் திருமொழி (14-9) - களிறும் புள்ளுமுடன் மடிய வேட்டையாடி வருவான் - என்பதற்கு ஏற்ப தனது அடியார்களுக்கு விரோதிகளாக உள்ள தீயவர்களை அழிப்பது என்ற வேட்டை ஆடுதல்; திருவாய் (6-9-5) – மலை மேல் நிற்பாய் - என்று கூறுவதற்கு ஏற்ப விரோதிகளை அழித்த பின்னர் ஏற்பட்ட களைப்பு நீங்குவிதமாக எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதான, சிறிய திருமடல் (34) – ஆராமம் சூழ்ந்த - என்பதான திருவரங்க, திருமலை போன்ற திவ்யதேசங்களில் இன்பத்தை அளித்தபடி வசித்தல் போன்ற ஐந்திலும் காணலாம். இதன் மூலம், பரத்வம் போன்ற நிலைகள் அனைத்தும் இடவேற்றுமை மட்டுமே அல்லாமல் வஸ்து வேற்றுமை அல்ல என்பது உணர்த்தப்பட்டது.