Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 156)
மூன்றாம் ப்ரகரணம்
தம்பிழையுஞ் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை யுணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வ த்வயார்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம்.
இனி இப்படி இவர் தூதுவிடும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவையும், தூது விடுகைக்குப் பற்றாசையும், அதுக்கு விஷயத்தையும் தூது நாலுக்கும் வகையிட்டருளிச்செய்கிறார் மேல் (தம்பிழையும்) என்று தொடங்கி.
– அடுத்து, இவர் இவ்விதம் தூது விடும்படியான நிலை ஏற்படும்விதத்தில் தனது முகத்தை அவன் காண்பிக்காத காரணத்தையும், தூதுவிடுதலுக்கான காரணத்தையும், அதற்கான விஷயத்தையும், நான்கு தூதுகளுக்கான வகையையும் இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது (தம்பிழை மறப்பித்த க்ஷமையை யுணர்த்தும் வ்யூஹம் முதல் தூதுக்கு விஷயம்) “அஞ்சிரைய மடநாரை”யில், “என் பிழையே நினைந்தருளி” என்று தன் மேன்மையாலே இத்தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான், கலக்கக்கொள்ள நம் தோஷ தர்சனத்தைப் பண்ணிப் பிரிந்து நம் அபராதத்தையே பார்த்துத் தன் க்ஷமையை மறக்கையாலே இத்தலையை நினையாதிருந்தானத்தனை; “அவன் தன்னுடைய அபராத ஸஹத்வத்தையறிவிக்க வரும்” என்று அறுதியிட்டு “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” என்று அபராத ஸஹத்வம் பற்றாசாக, “கடலாழி நீர் தோற்றி யதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி” என்று ஜகத் ஸ்ருஷ்ட்யர்த்தமாக ஏகார்ணவத்திலே கண்வளர்ந்தருளினவனுக்கு ஸ்ருஷ்டி ப்ரயோஜநம் “விசித்ரா தேஹஸம்பத்தி: ஈச்வராய நிவேதிதும்” என்கிறபடியே திருவடிகளிலே அடிமை கொள்ளுகையன்றோவென்று இத்தைச் சொல்லவேணுமென்று வ்யூஹத்திலே தூதுவிடுகையாலே தம்பிழை மறப்பித்த க்ஷமையை யுணர்த்திவிட்ட வ்யூஹம் ப்ரதம தூதுக்கு விஷயம். (சிறந்த செல்வம் மறப்பித்த தீக்ஷையை யுணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம்) “வைகல் பூங்கழிவாயி”ல், “சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூருறையும்” என்று ஆர்த்த ரக்ஷணம் பண்ணி வாரா நிற்கச்செய்தே திருவண்வண்டூரின் ஐச்வர்யத்தைக் கண்டு கால் தாழ்ந்து தன் ஆர்த்தரக்ஷண தீக்ஷையை மறக்கையாலே நம்மை நினையாதிருந்தானத்தனை; ஆர்த்த ரக்ஷணமொரு தலையானால் மற்றொன்றில் கால் தாழுமவனல்லாமையாலே அத்தை யறிவிக்க வருமென்று, “புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம் பெருமானைக் கண்டு” என்று ஆர்த்தரக்ஷண தீக்ஷிதத்வம் பற்றாசாக, “மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையுமுள ளென்மின்கள்” என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸபூமியான லங்கையில் அரணைத் துகளாக்கின ஏகவீரனான சக்ரவர்த்திதிருமகனுக்கு ரக்ஷ்யவர்க்கத்திலே நானுமொருத்தி யுண்டென்று சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகையாலே சிறந்த செல்வம் மறப்பித்த தீக்ஷயை யுணர்த்திவிட்ட விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம். (படைத்த பரப்பு மறப்பித்த ஸாரஸ்யத்தை யுணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்) “பொன்னுலகாளீ”ரில் “முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு” என்று ஸ்ருஷ்டமான ஜகத்தின் பரப்பை ரக்ஷிக்கிற பராக்காலே ஆச்ரிதரோடு தனக்குண்டான ஐகரஸ்யத்தை மறந்து, அது கொண்டு தம்மை நினையாதிருந்தானித்தனை, “தன் மன்னு நீள் கழல் மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான்” என்று ஆச்ரிதரோடு ஏகரஸனாகையாலே அத்தையறிவிக்க வருமென்று ஐகரஸ்யம் பற்றாசக “வானவர் கோனைக் கண்டு யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும்” என்று பரத்வத்திலும், “எங்குச் சென்றாகிலுங் கண்டிதுவோ தக்கவாறென்மின்” என்று அதீந்த்ரியதயா பரத்வ ஸத்ருசமான அந்தர்யாமித்வத்திலும் தூதுவிடுகையாலே, படைத்த பரப்பு மறப்பித்த ஸாரஸ்யத்தை யுணர்த்திவிட்ட பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம். (தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸௌந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்) “எங்கானலி”ல், “தமரோடங்குறைவார்க்கு” என்று தம்மையுகந்த பாகவதர்களோட்டைச் சேர்த்தியின் இனிமையாலே, பிரிந்தார்க்கு ப்ராணன் கொண்டிருக்க வொண்ணாதபடியான தன் ஸௌந்தர்யத்தை மறந்து அது கொண்டு பிரித்திட்டு வைத்துப்போய் நம்மை நினையாதிருந்தாரத்தனை, இவ்வடிவழகைப் பிரிந்தார் தரிப்பரோவென்று அவ்வழகை யறிவித்துவிட்டால் வாராதிராரென்று, “செக்கமலத்தலர்போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள்” என்றும், “பூந்துழாய் முடியார்க்கு” என்று தொடங்கி, “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று” என்று ஸௌந்தர்யம் பற்றாசாக “திருமூழிக்களத்தாருக்கு” என்று அர்ச்சவதாரத்திலே தூதுவிடுகையாலே தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸௌந்தர்யத்தை யுணர்த்திவிட்ட அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயமென்றபடி.
– (தம்பிழை மறப்பித்த க்ஷமையை யுணர்த்தும் வ்யூஹம் முதல் தூதுக்கு விஷயம்) – திருவாய்மொழி (1-4) – அஞ்சிறைய மடநாராய் – என்ற திருவாய்மொழியில் உள்ள திருவாய்மொழி (1-4-7) – என் பிழையே நினைந்தருளி – என்பதற்கு ஏற்ப தனது மேன்மை காரணமாக வந்து கலப்பவர்களுடைய தாழ்வை ஆராயாமல் வந்து கலந்தான். அவ்விதம் கலந்து நம்முடைய தோஷங்களைப் பார்த்துப் பிரிந்து, நம்முடைய குற்றங்களையே பார்த்து, தனது பொறுமையை அவன் மறப்பதாலே இவரை அவன் நினைக்காமல் இருந்தான். ஆனால் அவன் தன்னுடைய “குற்றங்களைக் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை” என்பதை உணர்த்துவதற்காக வருவான் என்ற நம்பிக்கையுடன், திருவாய்மொழி (1-4-7) - என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு - என்பதற்கு ஏற்ப அவனுடைய பொறுமை என்பதையே காரணமாகக் கொண்டு, திருவாய்மொழி (1-4-10) – கடலாழி நீர் தோற்றி யதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி – என்று இந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் நோக்கத்தைக் கொண்டவனாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தபடி உள்ளவனுக்கு ஸ்ருஷ்டியின் மூலம் கிடைப்பதன் பயன், ஸ்ரீவிஷ்ணுதர்மம் - விசித்ரா தேஹஸம்பத்தி: ஈச்வராய நிவேதிதும் - ஸர்வேச்வரனை வணங்குவதற்காகவே கைகால்களுடன் கூடிய இந்த விசித்ரமான சரீரம் முன்பு உண்டாக்கப்பட்டது - என்று கூறுவதற்கு ஏற்ப அவனுடைய திருவடிகளில் நம்முடைய கைங்கர்யத்தை ஏற்பதே ஆகும் அல்லவோ என்று அவனுக்கு உணர்த்த விரும்பி, வ்யூஹத்திற்கு தூதுவிடப்பட்டது. ஆகவே நம்முடைய பிழைகளானவை, அவனுடைய பொறுமை என்ற குணத்தை அவன் மறக்கும்படிச் செய்தன; இதனை மீண்டும் நினைவு கூறும்வகையில் செய்ததே முதல் தூதிற்கான விஷயம் ஆகும். – (சிறந்த செல்வம் மறப்பித்த தீக்ஷையை யுணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம்) – திருவாய்மொழி (6-1) – வைகல் பூங்கழிவாய் - என்ற திருவாய்மொழியில் உள்ள திருவாய்மொழி (6-1-3) - சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூருறையும் – என்பதற்கு ஏற்ப துன்பம் அடைந்தவர்களைப் பாதுகாத்தபடி வந்தான். அப்போது திருவண்வண்டூரில் உள்ள ஐச்வர்யத்தைக் கண்டு அங்கேயே நின்றான். இதனால் துன்பம் அடைந்தவர்களைக் காத்தல் என்ற தனது கொள்கையை மறந்து, நம்மை எண்ணாமல் இருந்தான். துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்றுதல் என்பது ஒரு நிலை என்றால், மற்றொன்றில் நிலைப்பவன் என்பது அல்லாமையால், அதனை உணர்த்துவதற்காக இவன் வருவான் என்று நம்பியபடி, திருவாய்மொழி (6-1-5) – புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம் பெருமானைக் கண்டு – என்பதற்கு ஏற்ப துன்பம் அடைந்தவர்களைப் பாதுகாத்தல் என்பதான அவனுடைய விரதத்தையே காரணமாகக் கொண்டு, திருவாய்மொழி (6-1-10) - மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையுமுள ளென்மின்கள் – என்று கூறவதற்கு ஏற்ப சீதை காரணமாக இராவணன் வசித்து வந்த இலங்கையின் அரணைத் துகள்கள் ஆக்கியவனும் மற்றொரு துணை வேண்டாதபடியான வீரனும் ஆகிய இராமனுக்கு, “உன்னால் காப்பாற்றப்பட வேண்டிய பொருள்களில் நானும் ஒருவன் ஆவேன்” என்று கூறுவீர்களாக என விபவ விஷயம் குறித்துத் தூது விட்டாள். இதனால் சிறந்த செல்வமானது, “துன்பம் உள்ளவர்களைப் பாதுகாத்தல்” என்ற விரதத்தை அவன் மறக்கும்படிச் செய்தபோது, அதனை நினைவுபடுத்த விடுத்த தூதானது இரண்டாவது ஆகும். (படைத்த பரப்பு மறப்பித்த ஸாரஸ்யத்தை யுணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்) - திருவாய்மொழி (6-8) – பொன்னுலகாளீர் – என்ற திருவாய்மொழியில் உள்ள திருவாய்மொழி (6-8-1) - முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு – என்பதற்கு ஏற்ப தன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட இந்த உலகத்தைக் காப்பாற்றுதல் என்ற துடிப்பு காரணமாக அடியார்களுடன் தனக்கு உண்டான இன்பத்தை மறந்து, அதன் காரணமாக நம்மை எண்ணாமல் இருந்தான். திருவாய்மொழி (6-8-6) - தன் மன்னு நீள் கழல் மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான் – என்பதற்கு ஏற்ப அடியார்களுடன் சேர்ந்த இன்பத்தை உடையவன் என்பதால், தான் இவ்விதம் பிரிந்ததைக் கூற வருவான் என்று நம்பி அந்த இன்பம் காரணமாகவே, திருவாய்மொழி (6-8-5) - வானவர் கோனைக் கண்டு யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் – என்று பரத்வம் குறித்தும், திருவாய்மொழி (6-8-5) - எங்குச் சென்றாகிலுங் கண்டிதுவோ தக்கவாறென்மின் - என்று காண இயலாதபடி உள்ள பரத்வத்திற்கு ஒப்பான அந்தர்யாமி நிலையைக் குறித்தும் தூதுவிடுவதால், தான் ஸ்ருஷ்டித்த இந்த உலகமானது மறக்க வைத்ததான அடியார்களுடன் சேரும் இன்பம் என்பதை நினைவுபடுத்த அனுப்பிய தூதானது மூன்றாவது ஆகும். – (தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸௌந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்) - திருவாய்மொழி (9-7) - எங்கானல் – என்ற திருவாய்மொழியில் உள்ள திருவாய்மொழி (9-7-2) – தமரோடங்குறைவார்க்கு - என்பதற்கு ஏற்ப தன்னை மிகவும் விரும்பியபடி உள்ள பாகவதர்களுடன் தான் கொண்ட சேர்த்தியால் ஏற்பட்ட இனிமையின் விளைவாக நம் அழகையும் மறந்து அதன் விளைவாக நம்மையும் மறந்து நின்றான். இப்படிப்பட்ட அழகைப் பிரிந்தவர்கள் உயிர்தாங்கமாட்டார்கள் என்று இந்த அழகினை உணர்த்தினால் அதன் பின்னர் வராமல் இருக்கமாட்டான் என்று எண்ணி, திருவாய்மொழி (9-7-2) - செக்கமலத்தலர்போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள் – என்றும், திருவாய்மொழி (9-7-9) – பூந்துழாய் முடியார்க்கு – என்று தொடங்கி, “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று” என்று அழகையே காரணமாகக் கொண்டு, “திருமூழிக்களத்தார்க்கு” என்று அர்ச்சாவதாரத்திற்குத் தூது விடப்பட்டது. இதனால் தனது அடியார்களுடன் சேர்ந்திருந்த காரணத்தால் மறக்கப்பட்ட தனது அழகை நினைவுபடுத்தும் விதமாக நான்காம் தூது அனுப்பப்பட்டது.