Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 155)

மூன்றாம் ப்ரகரணம்

பூண்டநாள் சீர்க் கடலையுட் கொண்டு திருமேனி நன்னிற மொத்து உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக் கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான அன்பு கூருமடியவர் உறையிலிடாதவர் புயற்கை யருள்மாரி குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.

இனிமேல் இப் ப்ரகரணத்தில் மேகமாகச் சொல்லுகிறது ஆரையென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (பூண்டநாள்) என்று தொடங்கி.

– அடுத்து இந்தப் பகுதியில் மேகம் என்று யாரைக் கூறுகிறார் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, (பூண்டநாள் சீர்க்கடலையுட் கொண்டு) வர்ஷிக்கைக்குடலான காலங்களில் கடலிலே புக்கு அதில் நீரைப் பருகிக் கொண்டிருக்கும் மேகம்போலே “நீண்ட தோள் மால்கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாளெல்லாம் புகும்” என்றும், “திருமால் சீர்க்கடலை யுட்பொதிந்த சிந்தனையேன்” என்றும் சொல்லுகிறபடியே விடிந்த நாளெல்லாம் அவன் காணவளர்ந்தருளுகிற கடலிலே புகுந்து ச்ரிய:பதியான அவனுடைய கல்யாண குண ஸாகரத்தை “மனவுட்கொண்டு” என்கிறபடியே உள்ளே யடக்கிக்கொண்டு, (திருமேனி நன்னிறமொத்து) “திருமால் திருமேனியொக்கும்” என்றும், “கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்” என்றும் சொல்லுகிறபடியே மேகமானது அவன் திருமேனியோடொத்த நிறத்தை உடைத்தா யிருக்குமாபோலே விக்ரஹ வர்ணத்தால் அவனோடு ஸாம்யாபந்நராய். (உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து) “உயிரளிப்பான் மாகங்களெல்லாம் திரிந்து” என்று மேகமானது வர்ஷமுகேந ப்ராணி ரக்ஷணம் பண்ணுகைக்காக விஸ்த்ருதமான ஆகாசப் பரப்பெங்கும் ஸஞ்சரிக்குமாபோலே ஸம்ஸாரிகளான ஆத்மாக்களை ரக்ஷிக்கைக்காக “தீர்த்தகரராமின் திரிந்து” என்றும், “தீதில் நன்னெறி காட்டியெங்கும் திரிந்து” என்றும் சொல்லுகிறபடியே லோகபாவநராய் உஜ்ஜீவநமார்க்க ப்ரதர்சகராய்க் கொண்டு ஸர்வத்ர ஸஞ்சாரம் பண்ணி. (ஜ்ஞாந ஹ்ரதத்தைப் பூரித்து) மேகம் வர்ஷத்தாலே தடாகாதிகளை நிறைக்குமாபோலே “ஜ்ஞாநஹ்ரதே த்யாந ஜலே ராக த்வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம்” என்று மாநஸ தீர்த்த வர்ணனத்தில் சொன்ன ஜ்ஞாநமாகிற ஹ்ரதத்தைத் தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து, (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்றும், “வாழவுலகினில் பெய்திடாய்” என்றும், “மாமுத்த நிதி சொரியும்” என்றும் சொல்லுகிறபடியே அநர்த்தகந்தமின்றிக்கே அகிலருமுஜ்ஜீவிக்கும்படி பகவத் குணரத்னங்களை வர்ஷித்து. (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து) ஔதார்யாதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே “இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோம்! நாம் செய்தது போருமோ?” என்று லஜ்ஜித்து. (வெளுத்தொளித்து) உபகரிக்கப் பெறாதபோது உடம்பு வெளுத்து ஒளித்து. (கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான) உபகரிக்கும் தசையில் எதிர்த்தலையில் ஸம்ருத்தி கண்டுகந்து அந்த பரஸம்ருத்தியே தங்களுக்குப் பேறாக நினைத்திருக்கிற, (அன்புகூருமடியவர்) “ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்தன்பு கூறுமடியவரான” முதலாழ்வார்கள். (உறையிலிடாதவர்) உருவின வாள் உறையிலிடாதே ஆதிமத்யாந்தம் தேவதாந்தராவரத்வ ப்ரதிபாதந பூர்வகமாக பகவத் பரத்வத்தை யுபபாதிக்கும் திருமழிசைப்பிரான். (புயற்கையருள்மாரி) “காரார் புயற்கைக் கலிகன்றி” என்றும், “அருள்மாரி” என்றும் ஔதார்யத்தில் மேகஸத்ருசராய்க் கொண்டு க்ருபையை வர்ஷிக்கும் திருமங்கையாழ்வார். (குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்) “குணந்திகழ் கொண்டல்” என்று குணோஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப்பட்ட எம்பெருமானார் போல்வாரை இந்த குணஸாம்யத்தையிட்டு மேகமென்று சொல்லுமென்றபடி. பேற்றுக்கு அடி இவர்களாகையாலே ப்ராப்யத்தில் த்வரை தோன்றப் பலகாலும் தூதுவிடுவர்.

– (பூண்டநாள் சீர்க்கடலையுட் கொண்டு) - மழையைப்பொழியும் காலங்களில் கடலில் புகுந்து அதில் உள்ள நீரைப் பருகியபடி உள்ள மேகம் போன்று, மூன்றாம் திருவந்தாதி (69) நீண்ட தோள் மால்கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாளெல்லாம் புகும் – என்றும், பெரிய திருவந்தாதி (69) - திருமால் சீர்க்க்டலை யுட்பொதிந்த சிந்தனையேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப விடிந்த நாள் முழுவதும் அவன் கண் வளர்ந்தருளுகிற திருப்பாற்கடலில் புகுந்து மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய அவனுடைய திருக்கல்யாணகுணங்கள் என்னும் ஸமுத்திரத்தை, பெரியதிருமொழி (7-3-1) – மனவுட் கொண்டு - என்பதற்கு ஏற்ப உள்ளே அடக்கிக்கொண்டு. (திருமேனி நல்நிறம் ஒத்து) - திருவிருத்தம்(32) - திருமால் திருமேனியொக்கும் – என்றும், பெரிய திருவந்தாதி (85) – கண்ணன்பால் நன்னிறங்கொள் கார் - என்றும் கூறுவதற்கு ஏற்ப மேகமானது அவனுடைய திருமேனியின் நிறத்தைக் கொண்டதாக இருப்பது போன்று, தங்களுடைய செயல்கள் போன்ற பலவற்றாலும் அவனுடன் ஒத்த நிறம் கொண்டவர்களாகவும். (உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து) - திருவிருத்தம் (32) - உயிரளிப்பான் மாகங்களெல்லாம் திரிந்து - என்பதற்கு ஏற்ப மேகமானது மழை மூலமாக அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் விதமாகப் பரந்து விரிந்துளள ஆகாயம் முழுவதும் ஸஞ்சரிப்பது போன்று ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டாம் திருவந்தாதி (14) - தீர்த்தகரராமின் திரிந்து – என்றும், பெருமாள்திருமொழி (2-6) – தீதில் நன்னெறி காட்டியெங்கும் திரிந்து – என்றும் கூறுவதற்கு ஏற்ப உலகத்தைத் தூய்மையாக்குபவர்களாகவும், கரையேறும் வழியைக் காண்பிப்பவர்களாகவும் இருந்து அனைத்து இடத்திலும் ஸஞ்சரித்தபடி. (ஜ்ஞாந ஹ்ரதத்தைப் பூரித்து) - மேகமானது மழையைப் பொழிந்து தடாகத்தை நிரம்புவது போன்று, ஜ்ஞாநஹ்ரதே த்யாந ஜலே ராக த்வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் – ஞானம் என்ற மடுவைக்கொண்டதும் த்யானம் என்ற நீரைக் கொண்டதும் ஆசை மற்றும் கோபம் போன்ற களங்கங்ளை விலக்குவதும் ஆகிய மனத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் உயர்ந்த கதியை அடைகிறான் - என்று மனதில் உள்ள தீர்த்தத்தைக் குறித்துக் கூறப்பட்ட இடத்தில் கூறப்பட்டதான ஞானம் என்ற மடுவைத் தாங்கள் பொழிகின்ற பகவத்குணங்கள் என்ற நீரால் நிரப்பி. (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) – திருப்பாவை (3) - தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து - என்றும், திருப்பாவை (3) - வாழவுலகினில் பெய்திடாய் - என்றும், நாச்சியார் திருமொழி (8-2) – மாமுத்த நிதி சொரியும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப எந்தவிதமான தாழ்வும் இன்றி அனைவரும் பிழைக்கும் விதமாக பகவத் குணங்கள் என்னும் இரத்தினங்களைப் பொழிந்து. – (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து) - தங்களுடைய தாராள மனம் காரணமாக உதவி செய்ததை எண்ணாமல், “இவர்களுக்கு இன்னமும் அளித்திருக்கலாம், நாம் அளித்தது போதுமானதாக இருந்ததோ?” என்று வெட்கம் அடைந்து. (வெளுத்து ஒளித்து) - மழையைப் பொழியாதபோது மேகங்கள் வெளுப்பது போன்று தாங்கள் உதவி செய்யாதபோது உடல் வெளுத்து யார் கண்களிலும் படாமல் மறைந்து. (கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான) - உதவி செய்யும்போது மற்றவர்களுடைய நிறைவு என்பதைக் கண்டு மகிழ்ந்து, இவ்விதம் அவர்கள் நிறைவுடன் உள்ளதே தங்களுடைய பேறு என்று எண்ணியபடி உள்ள. (அன்புகூருமடியவர்) - பெரியதிருமொழி (2-10-4) – ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்தன்பு கூறுமடியவர் - என்பதற்கு ஏற்ப உள்ள முதலாழ்வார்கள். (உறையில் இடாதவர்) – உருவிய வாளை உறையில் இடாமல் உள்ளது போன்று தொடக்கம், நடு, இறுதி ஆகியவற்றில் மற்ற தேவதைகளின் தாழ்வை உரைத்து ஸர்வேச்வரனுடைய மேன்மையை உரைக்கின்ற திருமழிசையாழ்வார். (புயற்கையருள்மாரி) – பெரியதிருமொழி (3-2-10) - காரார் புயற்கைக் கலிகன்றி – என்றும், பெரியதிருமொழி (3-4-10) - அருள்மாரி - என்றும் கூறுவதற்கு ஏற்ப தாராளமாக உள்ள தன்மையில் மேகம் போன்று இருந்து கருணையைப் பொழிகின்ற திருமங்கையாழ்வார். (குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்) – இராமாநுச நூற்றந்தாதி (60) – குணம் திகழ் கொண்டல் – என்பதற்கு ஏற்ப ஒளிர்ந்தபடி உள்ள மேகமாகக் கூறப்பட்ட எம்பெருமானார். (போல்வாரை) – முதலானவர்களை. (மேகம் என்னும்) - அவர்களுடைய குணத்தின் ஒற்றுமை காரணமாக மேகம் என்று கூறுவார். பேற்றுக்கான காரணம் இவர்களாக உள்ளதால் பேற்றினை விரைவாக அடையவேண்டும் என்ற பதற்றத்தால் பலமுறை தூதுவிடுவார்கள்.