Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 154)

மூன்றாம் ப்ரகரணம்

ஆசறு தூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதையற்றுத் தாய்வாயி லுண்ணும் பிள்ளைக் கிரைதேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டே னென்னுந் தனிப்பெரும் பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்.

நாரை கொக்கு குருகென்று சொல்லுகிறது ஆரையென்னு மபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் (ஆசறுதூவி) என்று தொடங்கி.

நாரை, கொக்கு, குருகு என்று யாரைக் கூறுகிறார் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது (ஆசறு தூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே) “ஆசறு தூவி வெள்ளைக்குருகே” என்று ‘பழிப்பற்ற சிறகையுடைத்தாய் உள்ளும் புறம்பு மொக்க நிர்மலமா யிருக்கும் குருகே!’ என்று சொல்லப்பட்ட “ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தரச் சுசி:” என்கிற பாஹ்யாப்யந்தர சுத்தியோடே கூடி, (திரையுகளும் வ்யஸந வ்யதையற்று) “வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்” என்று ஆமிக்ஷைகாக்ர சித்ததையாலே நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே தாவிப்போகா நிற்கிற கானலிலே சலியாமலிருக்குமாபோலே, “கிரயோ வர்ஷதாராபிர் ஹந்யமநா ந விவ்யது:, அபிபூயமாநா வ்யஸநைர் யதா தோக்ஷஜ சேதஸ:” என்கிறபடியே பகவத்தேகாக்ர சித்ததையாலே ஸம்ஸார ஸமுத்ர தரங்கங்களான தாபத்ரய ரூப வ்யஸநங்கள் அஹமஹமிகயா வந்து மேலிடா நின்றாலும் அதுக்கு இடையாதே, (தாய்வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரைதேடி) “தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும்” என்றும், “பழனக் கழனியதனுள் போய்ப் புள்ளுப்பிள்ளைக் கிரை தேடும்” என்றும் சொல்லுகிறபடியே கொக்கானது தன் வாயாலே எடுத்துக் கொடுக்க ஜீவித்திருக்கும் தன் பிள்ளைக்கு வாய்க்கடங்குமிரை தேடியிடுமாபோலே தங்கள் வாக்காலே உபகரிக்கும் பகவத் விஷயத்தை யுப ஜீவித்திருக்கும் குழைச் சரக்கான சிஷ்யர்களுக்கு பாகாநுகுணமாக ஸாத்ம்யமான பகவத் விஷயார்த்தங்களை சாஸ்த்ரங்களிலே ஆராய்ந்து உபகரித்து, (வைகலுடன் மேய்ந்து) “வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்” என்றும், “காதல்மென் பெடையோடுடன் மேயும் கருநாராய்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வகாலமும் போகஸ்தலங்களிலே தாங்களே சென்று தங்களைப் பிரியில் தரியாத ப்ரேமமுடைய சிஷ்யர்கள் உடனே கூட பகவத் குணாநுபவம் பண்ணி. (நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணி) “நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ” என்றும், “பைங்கான மீதெல்லா முனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்” என்றும் சொல்லுகிறபடியே தங்கள் பக்கலுப ஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே சிரஸாவஹிக்கையாகிற ப்ரஹ்மரதம் பண்ணி. (கொடுத்தவை கொண்டு) “சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” என்கிற க்ரமத்திலே ஸாதரமாக ஸமர்ப்பித்தவற்றை அங்கீகரித்து. (நல்ல பதத்தையும் வேண்டேனென்னு மித்யாதி) “நல்ல பதத்தால் மனை வாழ்வர்” என்று பாகவத கைங்கர்யத்துக்குறுப்பான கார்ஹஸ்த்யத்தையும் ஸம்ஸார வெக்காய மடியான பயத்தாலே “இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்” என்று உபேக்ஷிக்குமவர்களாயுள்ள “அங்கையாழி யரங்கனடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தரா”ன ஸ்ரீகுலசேகரப்பெருமாள், ஆசார்யபதஸ்தரான நம்முதலிகள் போல்வாரை குணஸாம்யத்தாலே நாரையென்றும் கொக்கென்றும் குருகென்றும் சொல்லுமென்கை. “நன்னீல மகன்றில்காள்” என்று மகன்றில்களையும் தூதுவிட்டமை ஒத்திருக்கச்செய்தே அதுக்கு ஸ்வாபதேசமருளிச் செய்யாதொழிந்தது அதில் இப்படி பரக்கச் சொல்லத்தக்கதில்லாமையலும் இந்த ந்யாயத்திலே தத்ஸமாந குணரைச் சொல்லிக் கொள்ளுமித்தனையன்றோ வென்னு மித்தைப் பற்றவும். மகன்றிலாவது அன்றிலிலே ஓரவாந்தரபேதம். ஆகவிப்படி தூத்ய ப்ரகரணத்திலே சொல்லுகிற பக்ஷ்யவாந்தரங்களுக்கு ஸ்வாபதேச மருளிச்செய்தாராய்த்து.

– (ஆசறு தூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே) - திருவாய்மொழி (6-8-8) – ஆசறு தூவி வெள்ளைக்குருகே – என்று கூறுவதற்கு ஏற்ப, “எந்தவிதமான பழிப்பும் அற்றதாக உள்ள சிறகைக் கொண்டதாகவும், உள்ளும் புறமும் ஒரே போன்று தோஷம் இன்றி உள்ள குருகே” என்று கூறப்பட்டதான, ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தரச் சுசி: - யார் ஒருவன் தாமரை போன்ற திருக்கண்கள் கொண்ட ஸர்வேச்வரனை த்யானிக்கிறானோ அவன் உள்ளிலும் புறத்திலும் தூயவன் ஆவான் - என்பதற்கு ஏற்றபடி உள்ளும் புறமும் தூய்மையுடன் கூடியபடி. (திரையுகளும் வ்யஸந வ்யதையற்று) - திருவாய்மொழி (2-1-1) - வாயுந்திரையுகளும் கானல்மடநாராய் – என்பதற்கு ஏற்ப தன்னுடைய உணவாகிய மீனைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் காரணமாக நாரையனது அலைகள் மேலே எழும்புவது போன்று வருகின்ற கானல்நீரிலும் சலிப்படையாமல் உள்ளது போன்று, ஸ்ரீமத்பாகவதம் (10-20-15) – கிரயோ வர்ஷதாராபிர் ஹந்யமநா ந விவ்யது:, அபிபூயமாநா வ்யஸநைர் யதா தோக்ஷஜ சேதஸ: - ஸர்வேச்வரனை மனதில் கொண்டவர்கள் துக்கத்தால் மூடப்பட்டாலும் வருந்தமாட்டார்கள், இதே போன்று மலைகளானவை மழையினால் அடிபட்டாலும் சலிப்பதில்லை - என்பதற்கு ஏற்ப பகவானிடம் மட்டுமே வைக்கப்பட்ட சிந்தனை கொண்டதன் காரணமாக, ஸம்ஸார ஸமுத்திரத்தின் அலைகளாக உள்ளதான மூன்று விதமான துன்பங்கள் இடைவிடாமல் வந்து தாக்கியபடி உள்ளபோதிலும், அதனால் சோர்ந்துவிடாமல். – (தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரைதேடி) – பெரியதிருமொழி (9-6-1) - தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும் - என்றும், பெரியதிருமொழி (5-1-2) - பழனக் கழனியதனுள் போய்ப் புள்ளுப்பிள்ளைக் கிரை தேடும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, கொக்கானது தன்னுடைய அலகுகள் மூலம் இரையை அளிக்க, அதனை மட்டுமே நம்பியுள்ள தனது குஞ்சுக்கு, அதனுடைய வாய்க்குள் அடங்கும்படியான இரையைத் தேடிக் கொடுப்பது போன்று, தங்களுடைய வாக்கிலிருந்து வருகின்ற பகவத் விஷயத்தை மட்டுமே அண்டியபடி வாழ்கின்ற சிஷ்யர்களுக்கு அவரவர்களுடைய புத்திக்கு எட்டும் விதமாக அறியக்கூடிய பகவத் விஷயங்களை சாஸ்த்ரங்களில் ஆராய்ந்து எடுத்து வந்து உபதேசித்து உதவி செய்த. (வைகல் உடன் மேய்ந்து) – திருவாய்மொழி (6-1-1) - வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்” – என்றும், திருவாய்மொழி (6-11-2) – காதல்மென் பெடையோடுடன் மேயும் கருநாராய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்து காலங்களிலும் பகவத்விஷயம் என்பதான இன்பத்தை அனுபவிக்கும் இடங்களில் தாங்கள் சென்று, தங்களை விட்டுப் பிரிய நேர்ந்தால் பொறுத்துக்கொள்ள இயலாதபடி உள்ள ப்ரேமை நிறைந்த சிஷ்யர்களுடன் சேர்ந்து நின்று பகவானுடைய குணங்களை நன்றாக அனுபவித்து. (நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணி) - திருவாய்மொழி (9-7-1) - நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ – என்றும், திருநெடுந்தாண்டகம் (27) – பைங்கான மீதெல்லா முனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தங்களிடம் உதவிகள் பெறுவதன் காரணமாக ஜீவிக்கின்ற சிஷ்யர்கள், அத்தகைய செய்நன்றி காரணமாகத் தலையால் தாங்குதல் என்னும் ப்ரஹ்மரதத்தைச் செய்து, (கொடுத்தவை கொண்டு) – சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் - தனது சரீரம், பொருள்கள், உயிர் ஆகியவற்றைத் தனது ஆசார்யனுக்காக அளிக்கவேண்டும் - என்பதற்கு ஏற்ப மிகுந்த ஈடுபாட்டுடன் சமர்ப்பித்தவற்றை ஏற்றுக் கொண்டு. – (நல்ல பதத்தையும் வேண்டேன்) – திருவாய்மொழி (8-10-11) - நல்ல பதத்தால் மனை வாழ்வர் – என்பதற்கு ஏற்ப பாகவத கைங்கர்யத்திற்கு ஏற்றபடியான இல்லறத்தையும் கூட, ஸம்ஸாரத் துன்பம் காரணமாக ஏற்படும் பயத்தால் பெருமாள் திருமொழி (4-5) - இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் – என்று வெறுப்பவர்களாக உள்ள, பெருமாள் திருமொழி (3-9) - அங்கையாழி யரங்கனடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தர் - என்பவராகிய ஸ்ரீகுலசேகரப்பெருமாள். (நம்முதலிகள் போல்வாரை) - ஆசார்ய இடத்தில் நின்றவர்களாகிய நம்முடைய பூர்வாசார்யார்களை. (நாரை கொக்கு குருகு என்னும்) - குணங்களுடைய ஒற்றுமை காரணமாக நாரை என்றும், கொக்கு என்றும், குருகு என்றும் கூறுவார். திருவாய்மொழி (1-4-4) – நன்னீல மகன்றில்காள் - என்று மகன்றிலையும் தூதாக அனுப்பியுள்ளபோது, அது யாரைக் குறிக்கிறது என்று அதற்கான மறைமுகமான பொருளை அருளிச்செய்யாமல் விட்டது ஏன் என்றால் - அதற்கு இவ்விதமாக விரிவாக உரைப்பதற்கு ஏதும் இல்லாத காரணத்தாலும், இந்த ந்யாயம் காரணமாக அது போன்ற குணம் கொண்டவர்களையும் கூறுவதற்கு யாரும் இல்லை என்ற காரணத்தாலும் ஆகும். மகன்றில் என்பது அன்றில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையே ஆகும். இப்படியாகத் தூது விடும் இடத்தில் வருகின்ற பலவிதமான பறவைகளுக்கான மறைமுகமான கருத்தை இவ்விதம் அருளிச்செய்தார்.