Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 153)
மூன்றாம் ப்ரகரணம்
கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார் கையிருந்து தயிர் நெய்யமர் பாலமுதுண்டு ஒரு மிடறாய்ப் போற்றியொரு வண்ணந் திருந்த நுவலாததுக்கு என் பிழைக்கும் நீயலையே நல்வளத்துரப்பனென்னுமவற்றுக்கு முகந்து, சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம் கை கூப்பி வணங்கப் பாடி ஆலியாவழையா பராபிமாநத்திலே யொதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார் போல்வாரைக் கிளி பூவை குயில் மயிலென்னும்.
– கிளி பூவை முதலானவையாகச் சொல்லுவது ஆரையென்னு மபேக்ஷையிலே அருளிச்செய்கிறார் (கண்வலை) என்று தொடங்கி.
கிளி, பூவை என்று யாரைக் கூறுகிறார் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது (கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) “மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டு” என்று ஸ்த்ரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே; “தாமரைத்தடங்கண் வழிகளின் அகவலைப்படுப்பான்” என்கிறபடியே தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் ஸர்வேச்வரனுடைய தாமரை போன்ற திருக்கண்களின் நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு, (வளர்த்து, எடுப்பார் கையிருந்து) “வளர்த்ததாலே பயன் பெற்றேன்” என்றும், “எடுத்தவென் கோலக்கிளியை” என்றும், “மங்கைமார் முன்பு என் கையிருந்து” என்றும் சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய், உபலாலித்து நோக்கிக்கொண்டு இட்டமாக வளர்த்தெடுத்துப் போருமவர்கள் கைவசமாய். (தயிர் நெய்யமர் பாலமுதுண்டு) “தயிர்ப்பழம் சோற்றோடு பாலடிசிலும் தந்து” என்றும், “நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ”, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” என்றும் சொல்லுகிறபடியே அவர்கள் காலோசிதமாகவும் பாகாநுகுணமாகவும், “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்” என்கிறபடியே உபதேசமுகேந தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை யநுபவிப்பிக்க அநுபவித்து. (ஒருமிடறாய்) ஆசார்யர்களோடு ஏக கண்டராய். (போற்றி ஒருவண்ணம் திருந்த) “போற்றியானிரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்” என்றும், “ஒருவண்ணம் சென்று புக்கெனக்கொன்றுரை யொண்கிளியே” என்றும், “திருந்தக்கண்டெனக் கொன்றுரையாய் ஒண் சிறு பூவாய்” என்றும் கடகபுத்தி பண்ணி ஆதரித்த தசையிலும். (நுவலாததுக்கு என்பிழைக்கும் நீயலையே நல்வளம்) “நோயெனது நுவல்” என்று என்னார்த்தியை சீக்ரமாகப்போய் அவனுக்கு அறிவியென்னச் செய்தே செய்யாததுக்கு “என் பிழைக்கு மிளங்கிளியே யான் வளர்த்த நீயலையே”, “நீயலையே சிறுபூவாய் நூவலாதே யிருந்தொழிந்தாய்” என்றும்; ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிறவளவிலே அருகேயிருந்து திருநாமத்தைச் சொன்னது பொறாமல் “சொல் பயிற்றுய நல்வள மூட்டினீர் பண்புடையீரே” என்றும் இன்னாதான தசையிலும், (துரப்பனென்னுமவற்றுக்கும் உகந்து) “இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்” என்று அநாதரித்த தசையிலும் சொன்ன இன்சொற்களும் வெஞ்சொற்களுமாகிற வவற்றுக்கும் “வகுத்த விஷயத்தில் நிக்ரஹாநுக்ரஹங்க ளிரண்டும் அங்குத்தை விநியோக ப்ரகாரம்” என்னும் நினைவாலே உகந்து; (சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம் கைகூப்பி வணங்கப்பாடி) “சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லேயென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே” என்று திருநாமத்தைச் சொல்ல உபக்ரமித்து பலஹாநியாலே ஒரு சொல் சொல்லும்போது மலை யெடுக்குமாபோலேயாய் அதுவும் மாட்டாதே பரவச காத்ரரானவாறே, “கன்மிங்களென்றும்மையான் கற்பியா வைத்த மாற்றம்” என்கிறபடியே முன்பே கற்பித்து வைத்த சொல்லான திருநாமத்தைச் சொல் என்ன, “திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததானால் பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினாளே” என்று கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருதி பண்ணி யநுவர்த்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ச் சொல்லி, (ஆலியாவழையா) “ஆலியாவழையா வரங்காவென்று” என்கிறபடியே ஆநந்தத்தோடே திருநாமத்தைக் கொண்டு போது போக்குமவர்களாய், (பராபிமாநத்திலே ஒதுங்கின) “தேவுமற்றறியேன்” என்கிபடியே ஆசார்யாபிமாநமாதல் பாகவதாபிமாநமாதலாகிற பராபிமாநத்திலே ஒதுங்கினவர்களான, (நம்பிக்கன்பர், தலைமீதடிப் பொடி, உடையவருடையார் போல்வாரை) “தென்குருகூர்நகர் நம்பிக்கன்பன்” என்று ஆசார்யரான ஆழ்வார் விஷயத்தில் ப்ரேமமே நிரூபகமாம்படியிருக்கும் ஸ்ரீமதுரகவிகள். “நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே” என்று திருநாமத்தையண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே அடியிடும்படி செறுக்கையுடையராய் பாகவதர்களுக்குப் பாததூளி போலே பரதந்த்ரராய் இதுவே நிரூபகமான தொண்டரடிப்பொடியாழ்வார், “இராமாநுச னுடையார்” என்றே நிரூபகமாம்படி உடையவர்க்குப் பரதந்த்ரரான ஆழ்வான் ஆண்டான் எம்பார் அருளாளப்பெருமாளெம்பெருமானார் முதலானவர்கள் போல்வாரை, (கிளி, பூவை குயில் மயிலென்னும்) குணஸாம்ய நிபந்தனமாகக் கிளியென்றும் பூவையென்றும் குயிலென்றும் மயிலென்றும் சொல்லுமென்றபடி. பூவையாவது நாகணவாய்ப்புள். மயிலைத் தூதுவிட்டமையன்றிக்கே யிருக்க அத்தை ஸஹபடித்தது, “யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்” என்று ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசமென்று அறிவிக்கைக்காக.
(கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) திருமாலை (16) - மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டு - என்று கூறுவதற்கு ஏற்ப பெண்களுடைய பார்வை [அல்லது கண்கள்] என்னும் வலையில் அகப்பட்டு கேட்டினை அடைந்த விடாமல், திருவாய்மொழி (6-2-9) – தாமரைத்தடங்கண் வழிகளின் அகவலைப்படுப்பான் - என்பதற்கு ஏற்ப நாம் தப்பிவிடாமல் அகப்படுத்திக் கொள்ளும்படியாக உள்ள ஸர்வேச்வரனுடைய தாமரை போன்ற திருக்கண்களின் பார்வை என்ற வலையில் அகப்பட்டு. (வளர்த்து எடுப்பார் கை இருந்து) - திருநெடுந்தாண்டகம் (14) - வளர்த்ததாலே பயன் பெற்றேன் – என்றும், நாச்சியார் திருமொழி (5-5) – எடுத்தவென் கோலக்கிளியை - என்றும், திருவாய்மொழி (6-8-2) - மங்கைமார் முன்பு என் கையிருந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸ்வரூபத்தை வளர்ப்பவர்களாகவும், கொண்டாடியபடி நன்றாகப் பாதுகாத்துக்கொண்டு மிகவும் விருப்பத்துடன் வளர்த்தபடி உள்ளவர்களாகவும் இருக்கின்றவர்களுடைய கைவசமாக. (தயிர் நெய்யமர் பாலமுதுண்டு) – திருவாய்மொழி (9-5-8) – தயிர்ப்பழம் சோற்றோடு பாலடிசிலும் தந்து – என்றும், திருவாய்மொழி (6-8-2) – நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ - என்றும், நாச்ச்சியார் திருமொழி (5-5) – இன்னடிசிலொடு பாலமுதூட்டி - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவர்கள் காலத்திற்கு ஏற்ற விதத்திலும் அவரவர்களுடைய மனப்பக்குவத்திற்குச் சேரும் விதத்திலும், கீதை (4-34) - உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் – ஞானிகள் உனக்கு அந்த உயர்ந்த தத்வத்தை உபதேசிப்பார்கள் - என்பதற்கு ஏற்ப உபதேசம் மூலமாக உயிர் தரிக்கத் தேவையாக உள்ளதும் இன்பம் அளிக்கவல்லதும் ஆகிய பகவத் குணங்களை அனுபவிக்கும்படிச் செய்ய, அதன் மூலம் அவற்றை அனுபவித்து. (ஒரு மிடறாய்) - ஆசார்யர்களுடன் ஒரே சிந்தனை கொண்டவராக. (போற்றி ஒருவண்ணம் திருந்த) - திருவாய்மொழி (6-1-6) - போற்றியானிரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள் - என்றும், திருவாய்மொழி (6-1-7) - ஒருவண்ணம் சென்று புக்கெனக்கொன்றுரை யொண்கிளியே – என்றும், திருவாய்மொழி (6-1-8) - திருந்தக்கண்டெனக் கொன்றுரையாய் ஒண் சிறு பூவாய் – என்றும் அவனுடன் சேர்க்கவேண்டும் என்பதான ஆதரித்தபடி உள்ள நிலையிலும். (நுவலாததுக்கு என்பிழைக்கும் நீயலையே நல்வளம்) - திருவாய்மொழி (1-4-8) – நோயெனது நுவல் - என்பதற்கு ஏற்ப என்னுடைய துன்பத்தை நீ விரைவாகச் சென்று அவனுக்கு அறிவிப்பாயாக என்று கூறினால் அதனைச் செய்யாமல் இருந்தற்கு, திருவாய்மொழி (1-4-7) – என் பிழைக்கு மிளங்கிளியே யான் வளர்த்த நீயலையே - என்றும், திருவாய்மொழி (1-4-8) – நீயலையே சிறுபூவாய் நூவலாதே யிருந்தொழிந்தாய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அவனுடைய நினைவுகளை அதிகமாக ஏற்படுத்துகின்ற பொருள்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளபோது அருகில் அமர்ந்து அவனுடைய திருநாமங்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்ளாமல், திருவாய்மொழி (9-5-8) – சொல் பயிற்றுய நல்வள மூட்டினீர் பண்புடையீரே – என்று இயலாத நிலையிலும். (துரப்பன் என்னும் அதற்கும்) நாச்சியார் திருமொழி (5-10) – இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் - என்பதற்கு ஏற்ப ஆதரிக்காமல் உள்ள நிலையிலும் (உகந்து) - இப்படியாக உள்ள நிலைகளில் கூறப்பட்டதான இனிமையான சொற்கள் மற்றும் கடுமையான சொற்கள் ஆகியவற்றுக்கு “நமக்கு வேண்டியவர்களுடைய வெறுப்பு மற்றும் விருப்பம் ஆகிய இரண்டும் அவர்கள் ஏற்றுக்கொள்வதன் வகைகளே ஆகும்” என்றுள்ள நினைவினால் மகிழ்ந்து. (சொல்லெடுத்து கோர்த்தவாறே) - திருநெடுந்தாண்டகம் (13) – சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லேயென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே – என்பதற்கு ஏறப் அவனுடைய திருநாமங்களை உரைக்கத் தொடங்கி, ஒரு சொல்லை உரைத்தவுடனேயே ஏற்பட்ட சோர்வு காரணமாக மலையை உயர்த்தியது போன்ற நிலையை அடைந்து, அந்த ஒரு சொல்லையும் கூற இயலாமல் தனது நிலையை இழந்து. (கற்பியா வைத்த மாற்றம்) - திருவாய்மொழி (6-8-6) – கன்மிங்க ளென்றும்மையான் கற்பியா வைத்த மாற்றம் - என்பதற்கு ஏற்ப முன்பே கற்பித்து வைக்கப்பட்ட சொல்லாகிய திருநாமத்தைக் கூறுவாயாக என்று உரைத்தால், (கைகூப்பி வணங்கப்பாடி) - திருநெடுந்தாண்டகம் (14) - திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததானால் பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினாளே - என்பதற்கு ஏற்ப கற்றுக் கொடுத்தவர்கள் தாங்கள் செய்த நன்றி பாராட்டி வணங்கும்படியாக ப்ரியத்தால் துண்டப்பட்டவர்களாக உரைத்து. (ஆலியா அழையா) – பெருமாள் திருமொழி (3-2) - ஆலியாவழையா வரங்காவென்று - என்பதற்கு ஏற்ப ஆனந்தத்துடன் அவன் திருநாமங்களை உச்சரித்தபடியே தங்களுடைய காலத்தை கழிப்பவர்களாக. (பராபிமாநத்திலே ஒதுங்கின) – கண்ணிநுண்சிறுத்தாம்பு (2) - தேவு மற்றறியேன் – என்பதற்கு ஏற்ப ஆசார்யர்களிடம் உள்ள பற்றுதல், பாகவதர்களிடம் உள்ள பற்றுதல் என்று மற்றவர்கள் குறித்த பற்றுதல்களில் நிலைநிற்பவர்களாக உள்ள. – (நம்பிக்கு அன்பர்) - கண்ணிநுண்சிறுத்தாம்பு (11) - தென்குருகூர்நகர் நம்பிக்கன்பன் - என்பதற்கு ஏற்ப ஆசார்யராக உள்ள நம்மாழ்வார் விஷயத்தில் கொண்டுள்ள ப்ரேமை மூலமாகவே தன்னை அடையாளம் காண்பிக்கவல்லவராக உள்ள ஸ்ரீமதுரகவிகள். (தலைமீது அடிப்பொடி) - திருமாலை (1) – நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே - என்பதற்கு ஏற்ப திருநாமத்தை அண்டி நின்ற பலம் காரணமாக யமன் முதலானவர்கள் தலையில் தங்களுடைய கால்களை வைக்கும்படியாக செருக்கு கொண்ட பாகவதர்களுக்குப் பாததூளி போன்று அவர்கள் வசப்பட்டவராகவும், அதனைக் கொண்டே தம்மை உணர்த்த வல்லவராகவும் உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார். ( உடையவர் உடையார்) – “இராமாநுசனை உடையார்” என்றே அடையாளம் காண்பிக்கவல்லவராகவும் உடையவருக்கு வசப்பட்டவர்களாகவும் உள்ள கூரத்தாழ்வான், திருமலையாண்டான், எம்பார், அருளாளப்பெருமாளெம்பெருமானார் போன்றவர்கள். (போல்வாரை) - இப்படிப்பட்டவர்களை. (கிளி பூவை குயில் மயில் என்னும்) - குணத்தின் ஒற்றுமை காரணமாக கிளி என்றும், பூவை என்றும், குயில் என்றும் மயில் என்றும் கூறுவார். பூவை என்றால் நாகணவாய்ப்புள் என்ற பறவை. மயிலைத் தூதுவிட்டதாகக் கூறவில்லை என்றாலும், அதனை உரைத்தது ஏன் என்றால், திருவாய்மொழி (8-2-8) - யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள் - என்று வேறு ஒர் இடத்தில் அருளிச்செய்த காரணத்தால், அங்கு உரைத்தற்கும் இதுவே மறைமுகமான பொருள் என்று உணர்த்தவே ஆகும்.