Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 152)

மூன்றாம் ப்ரகரணம்

என் பெறுதியென்ன ப்ரமியாது உள்ளத்துளூறிய மதுவ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்துத் தேதெனவென்று ஆளம் வைத்துச் சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக்கொள்ளப்பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டொத்திருண்ட குழலிலே சங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமேயூதி வண்டே கரியான தெய்வவண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதன் முனிவாஹநர் தம்பிரான்மார் போல்வரை வண்டு தும்பி யென்னும்.

வண்டு தும்பிகளென்றது ஆரையென்ன அருளிச்செய்கிறார் மேல் (என் பெறுதி) என்று தொடங்கி.

– வண்டு, தும்பி போன்றவை யாரைக் குறிக்கின்றன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, (என் பெறுதியென்ன ப்ரமியாது) “ஏரார் மலரெல்லாமூதி நீயென் பெறுதி” என்று நிவர்த்திப்பிக்க வேண்டும்படி அப்ராப்த விஷயங்களை போக்யமென்று ப்ரமியாதே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்) “உளம் கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்து ளூறிய தேனை” என்று தன்னுடைய ஸௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹ்ருதயம் பக்வமாயிருக்கும் சேஷபூதருடைய ஹ்ருதயத்திலே “ஊறிய தேன்” என்கிற பகவத் விஷயமாகிற மதுவை விரும்பி, “த்வாம்ருதஸ்யந்திதி பாதபங்கஜே நிவேசிதாத்மா கதமந்யதிச்சதி, ஸ்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே” என்கிறபடி மற்றொன்றைப் புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாகவுடையராய், (தூமது வாய்கள் கொண்டு) “சூடிய தண்டுளபமுண்ட தூமது வாய்கள் கொண்டு” என்று பகவத் போக்யதாநுபவத்தாலே பரிசுத்தமாய் இனிதான வாய்க் கொண்டு, (குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்து) “என் குழல் மேல் ஒளி மாமல ரூதீரோ” என்கிறபடியே “நாட்கமழ் மகிழ்மாலை மார்ப”ராகையாலே வகுளதரரான ஆழ்வாருடைய “வைகுந்தமன்னாள் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும்வியலிடத்தே” என்று ப்ரத்வாதிகள் போக்யதையும் பரிச்சிந்நமென்னும்படியான திருக்குழலில் வைத்த ஒளிமா மலரான வகுளத்தின் ஸாரத்தை க்ரஹித்து அவ்வழியாலே இத்தலையில் போக்யதையை யநுபவித்து. (தேதெனவென்று ஆளம்வைத்து) “வரிவண்டு தேதெனவென்றிசை பாடும்”, “யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்” என்கிறபடியே இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அநுபவித்த செருக்குக்குப் போக்குவீடாக ஆளத்தி வைத்து. (சிறுகால் எல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக்கொள்ளப்பாடி) “அறுகால் வரிவண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும்”, “எல்லியம்போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம்பாடி”, “வண்டு குறிஞ்சி மருளிசை பாடும்”, “வண்டினங்கள் காமரங்களிசை பாடும்”, “கந்தாரமந் தேனிசை பாட” என்கிறபடியே காலோசிதமான பண்களை, “பண்கள் தலைக் கொள்ளப்பாடி” என்கிறபடியே தலைமை பெறும்படி பாடி, (துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப்புக்கு) “பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்த்ரனும் துன்னிட்டுப் புகலரிய” என்றும், “சுந்தரர் நெருக்க” என்றும் சொல்லுகிறபடியே திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து தலை நுழைக்க வொண்ணாதபடியே நெருக்க, “நேச நிலைக் கதவம் நீக்கு” என்று திருவாசல் காப்பானைத் திருக்கதவு திறக்கவேணுமென்று அபேக்ஷித்து, “பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு” என்கிறபடியே த்ருஷ்டி சித்தாபஹாரம் பண்ணும் திருவாசலி லழகிலே துவக்குண்ணாதே அத்தைக் கடந்து புகவேண்டுகையாகிற தகைவு அற, பாடுவாரான அந்தரங்கதையாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப்புக்கு. (வண்டொத்திருண்ட குழலிலே சங்கையற மருவி) “வண்டொத்திருண்ட குழல்” என்கிறபடியே ஸ்வஸமாந விஷயமுள்ளவிடத்திலே சேர்ந்து “நீமருவியஞ்சாதே நின்று” என்கிபடியே நிச்சங்கமாக அவனுக்கு ஸமீபவர்த்திகளாய். (அருளாத யாமென்று ஓடி வந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” என்றும், “யாமிதுவோ தக்கவாறு” என்றும் இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து, “ஓடி வந்து என் குழல் மேல் ஒளிமாமலரூதீரோ” என்று அவனோடே கூடி வரவிராதே முந்துறவே ஓடிவரவேணுமென்று அபேக்ஷித்து விட்டபடியே இத்தலையிலார்த்திக்கீடாக அவன் வரவையறிவிக்க விரைந்து வந்து, தங்கள் வரவாலே இத்தலையில் பிறந்த செவ்வியை அநுபவித்து, “பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்” என்கிறபடியே அத்தலையில் தாங்களநுபவித்த போக்யதையைத் தங்கள் வரவாலே இத்தலைக்கு ப்ரகாசிப்பியா நின்று கொண்டு ஆச்வஸிப்பித்து. (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும் மித்யாதி) “கொங்குண் வண்டே கரியாக வந்தான்” என்கிறபடியே சாகாக்ர ஸாரக்ராஹியாய் ஷட்பத நிஷ்டராய் பக்ஷத்வய யோகத்தாலே அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய், “தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு” என்று வேதாந்த வேத்யனென்று தோற்றும்படி கருடவாஹநனாய் ஸாரக்ராஹியாயிருக்கிற ஸர்வேச்வரனோடே சேர்விக்கும், – “சேமமுடை நாரதன்” என்று ப்ரஹ்ம பாவநைக நிஷ்டதையாகிற ரக்ஷையையுடையனாய், பகவத் குணாநுபவ ஹர்ஷப்ரகர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கும் ஸ்ரீநாரத ப்ரஹ்மர்ஷி, லோகஸாரங்க மஹாமுநிகளாலே வஹிக்கப்படுகையாலே முநிவாஹந ரென்று நிரூபிதரான திருப்பாணாழ்வார், திருவாய்மொழியிசையே தங்களுக்கு போக்யமாயிருக்கிற தம்பிரான்மார் போல்வாரை இக்குண ஸாம்யத்தாலே வண்டென்றும் தும்பியென்றும் சொல்லுமென்கை. தும்பியாவது ப்ருங்க ஜாதியிலே ஓர் அவாந்தரபேதம்; ஆகையிறே “வண்டினங்காள் தும்பிகாள்” என்று ஏகஸ்தலத்திலே இரண்டையும் பிரிய வருளிச்செய்தது.

– (என் பெறுதி என்ன ப்ரமியாது) – பெரியதிருமொழி (8-4-5) - ஏரார் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – என்று தள்ளவேண்டியதாக உள்ளதும் பெறுவதற்குத் தகுதி அற்றதும் ஆகிய விஷயங்களை இன்பம் என்று எண்ணி மயங்காமல், (உள்ளுத்துள் ஊறிய மது வ்ரதமாய்) - பெரியதிருமொழி (4-3-9) – உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகிய தனது திருமேனி அழகு, சீலம் முதலானவற்றை எண்ணியபடி உள்ளதால் தங்களுடைய இதயமானது “ஊறிய தேன்” என்பதான பகவத் விஷயம் என்னும் தேனை மிகவும் விரும்பி, ஸ்தோத்ரரத்னம் (27) – த்வாம்ருதஸ்யந்திதி பாதபங்கஜே நிவேசிதாத்மா கதமந்யதிச்சதி, ஸ்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே - தேனை மட்டுமே தனக்கு உணவாகக் கொண்டபடி உள்ளபோது அதனை விடுத்து, கிடைப்பதற்கு மிகவும் அரிதாக உள்ளதான முள்ளிப்பூவைப் பாராமல் உள்ளது போன்று, உன்னுடைய தேன் பொருந்திய திருவடித்தாமரைகளின் இன்பத்தை அனுபவித்த நான் வேறு ஒரு அற்பமான இன்பத்தை இனி நாடுவேனோ - என்பதற்கு ஏற்ப மற்றொன்றினை பார்க்காமல் இதனை மட்டுமே உட்கொள்ளும் செயலையே விரதமாகக் கொண்டவராகவும். (தூமது வாய்கள் கொண்டு) – திருவாய்மொழி (6-8-3) – சூடிய தண் துளபம் உண்ட தூமது வாய்கள் கொண்டு – என்பதற்கு ஏற்ப பகவத் இன்பத்தை அனுபவிக்கின்ற தூய்மையான இனிய வாய் கொண்டு. (குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்து) - திருவாய்மொழி (6-8-3) - என் குழல் மேல் ஒளி மாமலல் ஊதீரோ - என்பதற்கு ஏற்ப, திருவாய்மொழி (4-10-11) - நாட்கமழ் மகிழ்மாலை மார்பர் - என்பவராக உள்ளதால் வகுளமாலையை அணிந்துள்ள நம்மாழ்வாருடைய, திருவிருத்தம் (55) - வைகுந்தமன்னாள் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும்வியலிடத்தே - என்பதற்கு ஏற்ப பரத்வத்தின் இனிமை கூட அளவுடன் கூடியது என்று கூறும்படியாக திருக்குழலில் வைக்கப்பட்ட ஒளி வீசும் மாமலராகிய வகுளமலரின் ஸாரத்தை எடுத்து அதன் மூலம் இவருடைய இனிமையை அனுபவித்து. – (தேதெனவென்று ஆளம் வைத்து) - பெரியதிருமொழி (4-1-1) – வரிவண்டு தேதெனவென்றிசை பாடும் - என்றும், பெரியாழ்வார் திருமொழி (4-86) - யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் – என்பதற்கு ஏற்ப பகவத் விஷயம் மற்றும் பாகவதர்கள் ஆகியோருடைய இனிமையை அனுபவித்த செருக்கு நீங்கும்படியாக ஆளத்தி வைத்து. (சிறுகால் எல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக்கொள்ளப்பாடி) – பெரியாழ்வார் திருமொழி (4-2-8) - அறுகால் வரிவண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (4-8-8) – எல்லியம்போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம்பாடி - என்றும், பெரியதிருமொழி (2-1-2) - வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் - என்றும், பெருமாள் திருமொழி (8-4) – வண்டினங்கள் காமரங்களிசை பாடும் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (3-8-1) - கந்தாரமந் தேனிசை பாட - என்றும் உள்ளதான அந்தக் காலத்திற்கு ஏற்றதான பண்களை, திருவாய்மொழி (3-5-2) – பண்கள் தலைக் கொள்ளப்பாடி – என்பதற்கு ஏற்ப முதன்மை பெறும் விதமாகப் பாடி. – (துன்னிட்டு நெருக்க) – பெருமாள் திருமொழி (4-3) – பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டுப் புகலரிய - என்றும், திருப்பள்ளியெழுச்சி (7) – சுந்தரர் நெருக்க - என்றும் கூறுவதற்கு ஏற்ப திருவாசல்களில் பகவானை வழிபட வந்தவர்கள் நிறைந்து நின்று தலையைக் கூட நுழைக்க இயலாதபடி நெருக்க. (நீக்கு என்று) - திருப்பாவை(16) - நேச நிலைக் கதவம் நீக்கு - என்பதற்கு ஏற்ப திருவாசலைக் காவல் காத்து நிற்பவனிடம், “திருக்கதவைத் திறப்பாயாக” என்றும் விருப்பத்துடன் விண்ணப்பம் செய்து. (புகும் தகைவு அறப்புக்கு) - பெரிய திருமடல் (73) - பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு – என்பதற்கு ஏற்ப கண்களையும் மனதையும் தனது அழகால் கவர்ந்து இழுக்கவல்லதான திருவாசலுடைய அழகில் தடுமாறி விழாமல் அதனைக் கடந்து செல்லவேண்டும் என்பதான தடுப்பு ஏதும் இன்றி, அவனைக் குறித்துப் பாடுவதால் உண்டாகின்ற அந்தரங்கமானவர்கள் என்பதாலும், ஒரே சிந்தனை கொண்டுள்ளதாலும் அங்கு சென்று. (வண்டொத்திருண்ட குழலிலே சங்கையற மருவி) – பெரியாழ்வார் திருமொழி (2-5-7) – வண்டொத்திருண்ட குழல் - என்பதற்கு ஏற்ப தனக்கு ஏற்றதான விஷயம் இருக்கின்ற இடத்தில் சேர்ந்து, திருநெடுந்தாண்டகம் (26) – நீமருவியஞ்சாதே நின்று – என்பதற்கு ஏற்ப எந்த விதமான அச்சமும் இல்லாமல் அவனுடைய அருகாமையில் உள்ளவர்களாகவும். – (அருளாத யாமென்று ஓடி வந்து வாசமேயூதி) – திருவாய்மொழி (1-4-6) – அருளாத நீரருளி - என்றும், திருவாய்மொழி (6-8-4) – யாமிதுவோ தக்கவாறு – என்றும் கூறுவதற்கு ஏற்ப இவர்கள் அடையும் துன்பத்தை அவனுக்குத் தெரியப்படுத்தி, (ஓடிவந்து) திருவாய்மொழி (6-8-3) - ஓடி வந்து என் குழல் மேல் ஒளிமாமலர் ஊதீரோ - என்பதற்கு ஏற்ப “அவன் எங்களிடம் வரும்போது அவனுடன் சேர்ந்து வரவேண்டும் என்று எண்ணாமல், அவனுக்கு முன்பாகவே இங்கு ஓடி வந்து விடவேண்டும்” என்று அவர்கள் விண்ணப்பித்தபடியே, இவர்களுடைய பிரிவுத் துன்பத்திற்கு ஏற்றபடியான மருந்தாக உள்ளதான அவனுடைய வரவு குறித்து அறிவிக்க வேண்டுமென்று எண்ணி விரைந்து வந்து, இவ்விதம் தாங்கள் விரைவாக வந்து காரணத்தால் இவர்களுக்கு மகிழ்ச்சியின் விளைவால் உண்டான அழகை அனுபவித்து. (வாசமே ஊதி) – பெரியதிருமொழி (11-1-9) – பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் - என்பதற்கு ஏற்ப அவனிடம் சென்றபோது தாங்கள் அனுபவித்த இனிமையைத் தங்களுடைய வருகையின் மூலமே இவர்களுக்கு விளக்கி, அதன் முலம் இவர்களுடைய உயிரானது நிலைக்கும்படிச் செய்து. (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்) – பெரியதிருமொழி (9-3-4) – கொங்குண் வண்டே கரியாக வந்தான் - என்பதற்கு ஏற்ப வேதசாகைகளில் உள்ள சாரத்தை மட்டுமே கிரஹிக்கும் திறன் கொண்டவர்களாகவும், ஆறுபதங்கள் கொண்டதான த்வய மந்த்ரத்தில் எப்போதும் நிலைநிற்பவர்களாகவும், ஞானம் மற்றும் கர்மம் ஆகிய இரண்டு சிறகுகளுடன் கூடியுள்ளதால் எந்தத் தடையும் இன்றி எங்கும் செல்லக் கூடியவர்களாகவும் உள்ள அவர்களை முன்னிட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்பவனாகவும், திருவாய்மொழி (9-9-4) - தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு – என்பதற்கு ஏற்ப வேதாந்தங்கள் மூலம் மட்டுமே அறியத்தக்கவன் என்பது வெளிப்படும்படியாக வேதமே ரூபம் எடுத்தது போன்ற கருடனைத் தனது வாகனமாகக் கொண்டவனாகவும் உள்ள ஸர்வேச்வரனுடன் சேர்த்து வைப்பவர்களாகிய. – (சேமமுடை நாரதன்) – பெரியாழ்வார் திருமொழி (4-9-5) – சேமமுடை நாரதன் - என்பதற்கு ஏற்ப ப்ரஹ்மபாவனை என்பதான நன்மையைக் கொண்டதால் அதனையே தனக்கு ரக்ஷகம் என்று உள்ளவரும், பகவத் குணங்களை எப்போதும் அனுபவித்தபடி உள்ளதால் ஏற்பட்ட மகிழ்ச்சி காரணமாக உண்டான ஆனந்தமான நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றுடன் கூடியுள்ளவரும் ஆகிய நாரத ப்ரஹ்மரிஷி. (முனிவாஹநர்) - லோகஸாரங்கன் என்ற மஹாமுனிவரால் தாங்கப்படுவதால் “முநிவாஹநர்” என்று அந்த முனிவரின் பெயராலேயே அறியப்படும் திருப்பணாழ்வார். (தம்பிரான்மார்) - திருவாய்மொழியின் இசை என்பதே தங்களுக்கு இனிமையானது என்று கொண்டுள்ள தம்பிரான்மார். (அரையர் போல்வாரை) - இப்படிப்பட்டவர்களை. (வண்டு தும்பி என்னும்) - மேலே கூறிய பல்வேறு தன்மைகள் ஒத்தபடி உள்ளதால் வண்டு என்றும், தும்பி என்றும் கூறுவார்கள். தும்பி என்பது வண்டு இனத்தினைச் சேர்ந்ததே ஆகும். இதனால் அல்லவோ திருவாய்மொழி (9-7-8) - வண்டினங்காள் தும்பிகாள் - என்று ஒரே இடத்தில் இரண்டையும் தனித்தனியாக உரைத்தார்.