Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 151)
மூன்றாம் ப்ரகரணம்
விவேகமுகராய் நூலுரைத்து அள்ளலில் ரதியின்றி அணங்கின் நடையைப் பின்சென்று குடை நீழலிலே கவரியசையச் சங்கமவை முரல வரிவண்டிசை பாட மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து விதியினா லிடரி லந்தரமின்றி யின்பம்படக் குடிச்சீர்மையிலேயாதல் பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னமென்னும்.
இனி இந்த பக்ஷிகளில் அவாந்தர பேதங்களுடைய ஸ்வாபதேச மருளிச்செய்வதாகத் திருவுள்ளம் பற்றி இதில் அன்னமாகச் சொல்லுகிறது ஆரையென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (விவேகமுகராய்) என்று தொடங்கி.
– அடுத்த அந்த ஒவ்வொரு பறவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை, அந்தந்த பறவைகளை ஏன் கூறவேண்டும் என்ற மறைமுகப்பொருளைக் கூறி விளக்கத் திருவுள்ளம் கொண்டார். இவற்றில் அன்னம் என்று யாரைக் கூறினார் என்பதை முதலில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, (விவேகமுகராய்) “ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்பு மிச்ரம்” என்கிறபடியே ஹம்ஸமானது நீர க்ஷீர விபாகம் பண்ணுமாபோலே, ஸாராஸார விவேகோந்முகராய். (நூலுரைத்து) “அன்னமதாயிருந்து அங்கு அறநூலுரைத்த” என்று ஹம்ஸ ரூபியாய் சாஸ்த்ர ப்ரதானம் பண்ணினாப்போலே ச்ரோதாக்களைக் குறித்து சாஸ்த்ரங்களை யுபதேசித்து, (அள்ளலில் ரதியின்றி) “நபத்நாதி ரதிம் ஹம்ஸக: கதாசித் கர்த்தமாம்பஸி” என்கிறபடியே ஹம்ஸமானது கர்தம ஜலத்தில் பொருந்தாதாப்போலே, “வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்” என்கிறபடியே ஸம்ஸார கர்தமத்தில் பொருத்தமுடையரன்றிக்கே (அணங்கின் நடையைப் பின்சென்று) “அன்னம் பெய்வளையார் தம் பின் சென்று” என்கிறபடி ஹம்ஸமானது ஸ்த்ரீகள் நடையழகைக் கண்டு தானும் அப்படி நடக்கைக்காகப் பின்செல்லுமாபோலே “அன்ன நடையவணங்கு” என்று ஹம்ஸகதியான பிராட்டியுடைய அநந்யார்ஹ சேஷத்வாதிகளும் புருஷகாரபாவமுமாகிற நடையை யநுகரித்து. (குடைநீழலிலே, கவரியசைய, சங்கமவை முரல, வரி வண்டிசை பாட, மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து) “அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்து அலைபுனலிலைக் குடை நீழல் வீற்றிருக்கும்” என்றும், “செந்நெலொண் கவரியசைய வீற்றிருக்கும்” என்றும், “சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி” என்றும், “வரி வண்டிசை பாட அன்னம் பெடையோடுடன் நாடும்” என்றும், “மன்னுமுது நீர் அரவிந்த மலர் மேல்” என்றும் சொல்லுகிறபடியே ஹம்ஸமானது, மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும், பக்வ பலமான செந்செலின் அசைவு கவரியாகவும், சங்குகளின் த்வநி ஜய கோஷமாகவும், வண்டுகளின் மிடற்றோசை பாட்டாகவும் பெற்று, மாநஸ ஸர: பத்மம் ஆஸநமாக இருக்குமாபோலே “அக்கமலத்திலை போலும் திருமேனியடிகள்” என்று பத்மபத்ர நிபச்யாமலமான திருமேனியை ஸம்ஸார துக்கார்க்க தாபம் வாராதபடி தங்களுக்கு ஒதுங்க நிழலாகவுடையராய், “அஹமந்நம்” என்னும்படி பரிபக்வ ஜ்ஞாநரானவர்கள் அநுகூலவ்ருத்தி செய்ய, சுத்தஸ்வபாவர் ஸ்துதிக்க, ஸாரக்ராஹிகள் ஸாமகாநம் பண்ண, “குரு பாதாம்புஜ த்யாயோத்” என்கிறபடியே ஆசார்ய சரணயுகளங்கள் அநவரதம் நெஞ்சுக்குள்ளே கொண்டிருக்கும் சிஷ்யர்களுடைய பரமகுருவுக்கிருப்பிடமான “போதிற் கமல வன் நெஞ்சம்” என்கிற மாநஸ பத்மத்தை வஸ்தவ்யமாகவுடையராய். – (விதியினால், இடரில், அந்தரமின்றி, இன்பம் பட, குடிச்சீர்மையிலே யாதலித்யாதி) “விதியினால் பெடைமணக்கும்” என்றும், “இடரில் போகம் மூழ்கி” என்றும், “அந்தர மொன்றுமின்றி” என்றும், “மிகவின்பம் பட மேவும்” என்றும் சொல்லுகிறபடியே சாஸ்த்ரோத்தமான ப்ரகாரத்திலேம ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும் தட்டாதாபடியாகவும், ஒரு விச்சேதமும் வாராதபடியாகவும், மேன்மேலும் ஆநந்தம் அபிவ்ருத்தமாம்படியாகவும், “குடிச்சீர்மையி லன்னங்கள்” என்கிறபடியே பார்யா புத்ராதிகளோடேயிருந்து பகவதநுபவம் பண்ணுகிற “நளிர்ந்த சீலன் நயாசலன்” என்று சொல்லப்பட்ட செல்வநம்பி, “மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்” என்கிற பெரியாழ்வார் போல்வாரையும், “பற்றற்றார்கள்” என்றும், “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர் அற்ற பற்றர்” என்றும் சொல்லுகிறபடியே ஸாம்ஸாரிக ஸகல ஸங்கமுமற்று, உத்தமாச்ரமிகளாய்ப் பரமஹம்ஸ சப்த வாச்யரான நாதமுநிகள், யாமுநமுநிகள் போல்வாரையும் இந்த குண ஸாம்யத்தையிட்டு அன்னமென்று சொல்லுமென்கை.
– (விவேக முகராய்) - ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்பு மிச்ரம் - ஹம்ஸமானது நீருடன் கலந்துள்ள பாலில் உள்ள பாலை மட்டும் பிரிப்பது போன்று - என்பதற்கு ஏற்ப ஹம்ஸமானது நீரையும் பாலையும் பகுத்தறிந்து பிரிப்பது போன்று, சாரம் மற்றும் சாரம் அற்றவை என உணர்ந்து அவற்றைப் பிரிக்க முனைபவர்கள். (நூல் உரைத்து) – பெரியதிருமொழி (11-4-8) – அன்னமதாயிருந்து அங்கு அறநூலுரைத்த - என்பதற்கு ஏற்ப, ஹம்ஸ அவதாரம் எடுத்து வந்து சாஸ்த்ரங்களை உபதேசித்தது போன்று கேட்கும் ஆர்வம் கொண்டவர்களுக்குச் சாஸ்த்ரங்களை உபதேசம் செய்து. (அள்ளலில் ரதியின்றி) - ரதி என்றால் ஆசை. நபத்நாதி ரதிம் ஹம்ஸக: கதாசித் கர்த்தமாம்பஸி - ஹம்ஸம் சேற்று நீரில் ஆசை வைப்பதில்லை - என்பதற்கு ஏற்ப ஹம்ஸமானது சேற்று நீரில் பொருந்தாமல் உள்ளது போன்று, திருவிருத்தம் (100) - வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார் – என்பதற்கு ஏற்ப இந்த ஸம்ஸாரம் என்ற சேற்று நீரில் பொருத்தம் உடையவர் அல்லாமல். (அணங்கின் நடையைப் பின்சென்று) - பெரியதிருமொழி (6-5-5) – அன்னம் பெய்வளையார் தம் பின் சென்று – என்பதற்கு ஏற்ப அன்னமானது பெண்களுடைய நடையழகைக் கண்டு தானும் அதே போன்று நடப்பதற்காக அவர்கள் பின் செல்வது போன்று, பெரியதிருமடல் (7) - அன்ன நடையவணங்கு - என்பதற்கு ஏற்ப அன்னத்தின் நடையைக் கொண்ட பிராட்டியுடைய, மற்றவர்களுக்கு வசப்படாமல் பகவானுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் மற்றும் அவளுடைய புருஷகாரத்தன்மை போன்ற நடைகளைப் பின்பற்றியபடி. – (குடைநீழலிலே, கவரியசைய, சங்கமவை முரல, வரி வண்டிசை பாட) - பெரியதிருமொழி (9-1-5) – அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்து அலைபுனலிலைக் குடை நீழல் வீற்றிருக்கும் – என்றும், பெரியதிருமொழி (9-1-5) - செந்நெலொண் கவரியசைய வீற்றிருக்கும் – என்றும், பெரியதிருமொழி (7-8-2) – சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி - என்றும், பெரியதிருமொழி (7-5-9) - வரி வண்டிசை பாட அன்னம் பெடையோடுடன் நாடும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அன்னப்பறவையானது மேலே எழுந்து நிற்கும் தாமரை இலையைக் குடை போன்றும், நன்கு முதிர்ந்த செந்நெல் கதிர்களைக் கவரி போன்றும், சங்குகளின் நாதத்தை வெற்றி முழக்கமாகவும், வண்டுகளின் ஓசை என்பதைப் பாட்டாகவும் அமையப்பெற்று, (மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து) – மானச மடுவில் உதித்த தாமரைமலரைத் தனது ஆசனமாகக் கொண்டிருப்பது போன்று. திருவாய்மொழி (9-7-3) - அக்கமலத்திலை போலும் திருமேனியடிகள் - என்பதற்கு ஏற்ப தாமரையின் இலை போன்று ச்யாமள நிறம் கொண்டதான பகவானுடைய திருமேனியை, ஸம்ஸாரதுக்கம் என்பதன் மூலம் ஏற்படக்கூடிய பெருந்துயரம் என்பது வராதபடி தங்களுக்கு ஒதுங்கிக் கொள்ள ஏற்ற நிழலாகக் கொண்டவராகவும். தைத்திரீயம் – அஹம் அந்நம் – நான் அவனுக்கு இனியவன் – என்பதற்கு ஏற்ப முதிர்ந்த ஞானம் கொண்டவர்கள் கைங்கர்யம் செய்யும்படியாகவும், சுத்தமான இயல்புடையவர்கள் துதிக்கும்படியாகவும், சாரமாக உள்ளவற்றை மட்டுமே கைக்கொள்ள வல்லவர்கள் ஸாமகானம் செய்யும்படியாகவும், குரு பாதாம்புஜ த்யாயோத் - ஆசார்யன் திருவடிகளை த்யானிக்கவேண்டும் - என்பதற்கு ஏற்ப ஆசார்யனுடைய பொருந்திய திருவடிகளை எப்போதும் இடைவிடாமல் நெஞ்சத்தில் வைத்தபடி உள்ள சிஷ்யர்களுடையதான பிரமகுருவுக்கு இருப்பிடமான பெரியாழ்வார் திருமொழி (5-2-8) - போதிற் கமல வன் நெஞ்சம் – என்பதான, மனம் என்னும் தாமரையைத் தங்கள் வசிக்கும் இடமாகக் கொண்டவராகவும். – (விதியினால், இடரில், அந்தரமின்றி, இன்பம் பட) – திருவாய்மொழி (1-4-3) விதியினால் பெடைமணக்கும் - என்றும், திருவாய்மொழி (6-1-4) – இடரில் போகம் மூழ்கி – என்றும், திருவாய்மொழி ( 6-810) – அந்தர மொன்றுமின்றி - என்றும், திருவாய்மொழி ( 9-7-10) – மிகவின்பம் பட மேவும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட முறைகளில், ஸம்ஸாரத்தினால் ஏற்படும் அனைத்துவிதமான துன்பங்களும் நெருங்காதபடியும், எந்தவிதமான இடையூறும் உண்டாகாதபடியும், மேன்மேலும் ஆனந்தம் பெருகும்படியாகவும், (குடிச்சீர்மையிலே யாதல்) - திருவிருத்தம் (29) – குடிச்சீர்மையில் அன்னங்கள் - என்பதற்கு ஏற்ப மனைவி மற்றும் புத்திரர்களுடன் சேர்ந்து நின்று பகவத் அனுபவம் கிட்டியபடி உள்ள. (நயாசலன்) – பெரியாழ்வார் திருமொழி (4-4-8) - நளிர்ந்த சீலன் நயாசலன் - என்று கூறப்பட்ட செல்வநம்பி. பெரியாழ்வார் திருமொழி (4-9-11) - மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் - என்று கூறப்பட்ட பெரியாழ்வார் போன்றவர்களையும். (பற்றற்ற பரமஹம்ஸராதல் ஆன) – பெருமாள் திருமொழி (1-4) – பற்றற்றார்கள் – என்றும், திருச்சந்தவிருத்தம் (52) - சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர் அற்ற பற்றர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸம்ஸார உலகத்துடனான அனைத்துவிதமான ஸம்பந்தங்களையும் விலக்கி, மிகுந்த உத்தமமான ஸந்யாச ஆச்ரமத்தைப் பற்றிவர்களும், பரமஹம்ஸர்கள் என்று கூறலாம்படி உள்ளவர்களும் ஆகிய. (நாதயாமுநர் போல்வாரை) - நாதமுனிகள், யாமுநமுனிகள் போன்றவர்களையும். (அன்னம் என்னும்) - இதுவரை கூறப்பட்ட குணங்களுடைய ஒற்றுமை உள்ளதன் காரணமாக அன்னம் என்றார்.