Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 150)
மூன்றாம் ப்ரகரணம்
சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே பேசும்.
இனி பகவத் விஷயத்தில் தூதாகவிடுகிற பக்ஷிகளுக்கு ஸ்வாபதேசமேதென்னு மாகாங்க்ஷையிலே அத்தையருளிச்செய்கிறார் மேல் (சோர்ப்பாரை) என்று தொடங்கி.
– அடுத்து பகவானிடம் தூதாக விடப்படுகின்ற பறவைகள் என்பதற்கு மறைமுகமான பொருள் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது (சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி) பகவத் விஷயத்தில் கடகராமவர்களைப் பக்ஷிகளாக ப்ரதிபத்தி பண்ணி. (ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று) “வீசும் சிறகால் பறத்தீர்”, “அஞ்சிறைய மடநாராய்” இத்யாதிகளாலே “உபாப்யாமேவ பக்ஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே பகவத் விஷயத்தில் சீக்ர ப்ராப்திக்குறுப்பான அவர்களுடைய ஜ்ஞாந வ்ருத்தங்களைப் பக்ஷங்களென்று சொல்லி, (குரு ஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே பேசும்) “நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி”, “இது சொல்லியருள் ஆழிவரி வண்டே”, “வந்து மேயும் குருகினங்காள் – கைகள் கூப்பிச் சொல்லீர்”, “உடன் மேயும் மடவன்னங்காள் அடியேனுக்கும் போற்றுமினே”, “நன்னலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நானிரந்தேன்”, “என் முல்லைகள் மேல் தும்பிகாள் -யாமிதுவோ தக்கவாறென்ன வேண்டும் கண்டீர்”, “செங்கால் மடநாராய் - குடக்கூத்தற்கென் தூதாய் – நுமரோடே - நும்கால்களென் தலைமேல் கெழுமீரோ”, “கொக்கினங்காள் குருகினங்காள் தக்கிலமே கேளீர்கள்” இத்யாதிகளாலே குருக்களுடையவும் ஸப்ரஹ்மசாரிகளுடையவும், “இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே”, “நீயலையே சிறுபூவாய்”, “யான் வளர்த்த கிளிகாள்”, “தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே” இத்யாதிகளாலே புத்ரர்களுடையவும் சிஷ்யர்களுடையவும் ஸ்தாநே சொல்லுமென்கை.
– (சேர்ப்பாரைப் பக்ஷிகள் ஆக்கி) - பகவானிடம் கொண்டு சேர்ப்பவர்களைப் பறவைகளாக எண்ணி. (ஞான கர்மங்களைச் சிறகு என்று) - திருவிருத்தம் (54) - வீசும் சிறகால் பறத்தீர் - என்றும், திருவாய்மொழி (1-4-1) – அஞ்சிறைய மடநாராய் – என்றும் கூறுவதன் மூலம், உபாப்யாமேவ பக்ஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம: - பறவைகள் தங்கள் இரண்டு சிறகுகளால் ஆகாயத்தை அடைவது போன்று, ஞானம் மற்றும் கர்மம் ஆகிய இரண்டாலும் புருஷோத்தமனை அடைகிறான் - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனை விரைந்து அடைவதற்கு உதவியாக உள்ளதான ஞானம் மற்றும் கர்மம் ஆகியவற்றைச் சிறகுகள் என்று உரைத்து. (குரு ஸப்ரஹ்மசாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே பேசும்) - திருவாய்மொழி (1-4-1) – நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி - என்றும், திருவாய்மொழி (1-4-6) - இது சொல்லியருள் ஆழிவரி வண்டே - என்றும், திருவாய்மொழி (6-1-1) - வந்து மேயும் குருகினங்காள் – கைகள் கூப்பிச் சொல்லீர் – என்றும், திருவாய்மொழி (6-1-5) - உடன் மேயும் மடவன்னங்காள் அடியேனுக்கும் போற்றுமினே – என்றும், திருவாய்மொழி (6-8-1) - நன்னலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நானிரந்தேன் - என்றும், திருவாய்மொழி (6-8-4) – என் முல்லைகள் மேல் தும்பிகாள் -யாமிதுவோ தக்கவாறென்ன வேண்டும் கண்டீர் - என்றும், திருவாய்மொழி (9-7-1) – செங்கால் மடநாராய் - குடக்கூத்தற்கென் தூதாய் – நுமரோடே - நும்கால்களென் தலைமேல் கெழுமீரோ – என்றும், திருவாய்மொழி (9-7-3) - கொக்கினங்காள் குருகினங்காள் தக்கிலமே கேளீர்கள் - என்றும் உள்ள பாசுரங்களில் குருக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் கூறப்படுகின்றனர். திருவாய்மொழி (1-4-7) – இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே – என்றும், திருவாய்மொழி (1-4-8) - நீயலையே சிறுபூவாய் - என்றும், திருவாய்மொழி (6-8-5) - யான் வளர்த்த கிளிகாள் – என்றும், திருவாய்மொழி (6-8-6) – தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே - என்றும் உள்ள பாசுரங்களில் புத்திரர்களும், சிஷ்யர்களும் கூறப்படுகின்றனர்.