Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 149)
இரண்டாம் ப்ரகரணம்
பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூணகில் சிற்றில் தூதை முதலாவன – குணத்ரய விசித்ர கர்மஸூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும் பறிபட்டும் அற்பசாரமா மவையுமாய் மதீயமென்னில் விட்டகலவும் ததீயமென்னில் இகழ்வறவும் முனிவதுமிக்கால மீதோ வென்னப்படும் பொய்கைம்புலனில் போக்யாதி ஸமூஹம்.
இனி லோலோபகரணாதிகளாகச் சொல்லப்படுமவற்றுக்கு ஸ்வாபதேச மருளிச்செய்கிறார் (பந்து கழலென்று) தொடங்கி.
– பலவிதமான விளையாட்டுப் பொருள்களுக்கு மறைமுகமான அர்த்தம் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “பந்தும் கழலும் தந்து போகு நம்பீ”, “கன்ம மன்றெங்கள் கையில் பாவை பறிப்பதும்”, “குழகியெங்கள் குழமணன் கொண்டு”, “யாழ் நரம்பு”, “தைவந்த தண்தென்றல்”, “மேவுதண் மதியம்”, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி”, “சாந்தமும் பூணும்”, “சீருற்றவகில் புகை”, “எங்கள் சிற்றிலும்”, “வட்டவாய்ச் சிறுதூதை” இத்யாதிகளால் சொல்லுகிற லீலோபகரண போக்ய போகோபகரணாதிகளாவன – “லோஹித சுக்ல க்ருஷ்ணாம்” என்கிறபடியே செந்நூல் வெண்ணூல் கருநூலினுடைய ஸ்தாநேயான குண த்ரயத்தோடே “கர்மஸூத்ரோபபாதிதை:” என்கிறபடியே விசித்ரமான கர்மஸூத்ரத்தாலே கட்டி, “ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி:” என்கிறபடியே ஈச்வரன் தன்னுடைய லீலைக்கு உறுப்பாக “அஜ்ஞோ ஜந்துர நீசோயமத் மநஸ் ஸுகதுக்கயோ:, ஈச்வர ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம்வா ச்வப்ரமேவ வா” என்கிறபடியே அஜ்ஞனாய் அசக்தனான விவன் கர்மாநுகுணமாக உபரிதந லோகாதிகளிலே போவது மீளுவதாம்படி ஸ்வஸங்கல்பத்தாலே ப்ரேரிக்க, – “த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி:” என்கிறபடியே தாழ விழுந்தும் உயரவெழுந்தும், “ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே” என்கிறபடியே சக்ர ப்ரமம் போலே சுழன்றும், “யமாலய மஹாசூலே மாதுர் ஜடரதோல்பத:, யாதாயாத ஸஹஸ்ராணாம் முகே ஜீவஸ்ய ஸாதநம்” என்கிறபடியே ஒருகால் போனதிலே அநேக பர்யாயம் போவது வருவதாயுழன்றும் போருகிற ஆத்மாவோட்டை அந்வயத்தாலே விழுந்தெழுகை முதலான ஸ்வபாவ யுக்தமாய், “பந்துயறித்து” என்கிறபடியே ஈச்வரன் தன்னுடைய போகவிரோதியென்று வலிய விடுவிக்க விடுபட்டும், – “அற்ப சாரங்கள்” என்கிறபடியே பகவத்விஷயத்தில் நின்று அகற்றுமதொழிய தன்பக்கல் புஜிக்கலாவதொன்றில்லாதபடி அல்ப ரஸங்களாயிருக்கும் மவையுமாய், மதீயமென்று ஸ்வஸம்பந்தத்தையிட்டுப் பார்க்கும்போது “சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற” என்கிறபடியே த்யாஜ்யங்களாய், ததீயமென்று தத் ஸம்பந்தத்தை யிட்டுக் காணும்போது “இகழ்வி லிவ்வனைத்தும்” என்கிறபடியே கட்டங்க உபாதேயமா மவையுமாய், “அன்னை முனிவது மன்றிலின் குரலீர்வதும்” இத்யாதிப்படியையும், “பனிப்பியல்வாக வுடைய தண்வாடை, இக்கால மிவ்வூர் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரி வீசும்” என்கிறபடியே அவனையொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாகவும், “அவ்வாடை யீதோ வந்து தண்ணென்றதே” என்று அவனோடே சேர்த்துக் கண்டபோது அநுகூலங்களாகவும் சொல்லப்படுமவையான “பொங்கைம்புலனும்” என்கிற பாட்டில் சொல்லப்பட்ட போக்ய போகோபகரண போகஸ்தாந ஸமூஹமென்றபடி. இதில் செந்நூல் வெண்ணூல் கருநூலாலே சமைக்கப்பட்ட பந்தாகச் சொல்லிற்று, போகஸ்தானமான தேஹத்தையென்னுமிடம் மேலிவர் வர்ணித்ததிலே தெரியும். கழலாவது – சிறுகி அஞ்சாயிருக்குமதாகையாலே போகோபகரணமான பஞ்சேந்த்ரியங்கள். பாவை குழமணங்களாவன – லீலோபகரண விசேஷங்கள். யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் ஆவன – போக்யங்களான சப்தாதி விஷயங்கள். இதில் பூண் அகில் என்கிறவை ரூப கந்தங்களில் பிதை. சிற்றிலாவது – கொட்டகமாகையாலே போகஸ்தானம். தேஹமும் வாஸ ஸ்தானமான க்ருஹாதிகளும் போகஸ்தாந விசேஷமிறே. தூதையாவது - சிறு சோறடுகைக்கு உபகரணமாகையாலே இந்த்ரிய வ்யதிரிக்தங்களான போகோபகரணங்களுக்கு உபலக்ஷணம். போகஸ்தானமாக தேஹத்தையும், போகோபகரணமான இந்த்ரியங்களையும் பந்து கழலித்யாதியாலே லீலோபகரணமாகச் சொல்லுகிறது, லீலையாவது தாதாத்விக ரஸமான வ்யாபாரமாகையாலே தாத்ருச வ்யாபாரத்துக்கு இவை உபகரணமாயிருக்கையாலே. ஆகையால் இவையனைத்தும் “பொங்கைம்புலனில்” போக்யாதி ஸமூஹம் என்னக் குறையில்லை.
– (பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூணகில் சிற்றில் தூதை முதலாவன) – திருவாய்மொழி (6-2-1) – பந்தும் கழலும் தந்து போகு நம்பீ, (6-2-7) – கன்ம மன்றெங்கள் கையில் பாவை பறிப்பதும் – என்றும், (6-2-6) – குழகியெங்கள் குழமணன் கொண்டு - என்றும், (9-9-7) – யாழ் நரம்பு - என்றும், (5-4-8) – தைவந்த தண்தென்றல் – என்றும், (9-9-4) – மேவுதண் மதியம் - என்றும், நாச்சியார் திருமொழி (5-5) - இன்னடிசிலொடு பாலமுதூட்டி – என்றும், பெரியதிருமொழி (2-7-3) - சாந்தமும் பூணும் - என்றும், திருவாய்மொழி (9-9-7) - சீருற்றவகில் புகை - என்றும், (6-2-9) – எங்கள் சிற்றிலும் - என்றும், நாச்சியார் திருமொழி (2-8) - வட்டவாய்ச் சிறுதூதை - என்றும் உள்ள பல பாசுரங்களில் கூறப்படுகின்ற விளையாட்டுப் பொருள்கள், இனிய பொருள்கள், இன்பம் அளிக்கும் பொருள்கள் ஆகியவை. (குணத்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி) – தைத்திரீயம் - லோஹித சுக்ல க்ருஷ்ணாம் - சிவந்தும் வெளுத்தும் கறுத்தும் உள்ளதான ப்ரக்ருதி - என்பதற்கு ஏற்ப சிவந்த நூல், வெண்மையான நூல் மற்றும் கறுத்த நூல் ஆகியவற்றிடம் மூன்று குணங்களுடன், ஸ்ரீவிஷ்ணுதர்மம் - “கர்மஸூத்ரோப பாதிதை: - கர்மம் என்ற கயிற்றால் கட்டப்பட்ட - என்பதற்கு ஏற்ப விசித்ரமாக உள்ள கர்மம் என்ற கயிறு கொண்டு கட்டி. (லீலையாக ப்ரேரிக்க) – ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ஹரே விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஜந்துபி: - விளையாடுவதற்கு ஏற்றதான இந்த உயிர்களைக் கொண்டு நீ விளையாடுகிறாய் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் தனது லீலைக்கு ஏற்றபடி மஹாபாரதம் சாந்திபர்வம் (12-36) - அஜ்ஞோ ஜந்துர நீசோயமத் மநஸ் ஸுகதுக்கயோ:, ஈச்வர ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம்வா ச்வப்ரமேவ வா – ஜீவாத்மா அறிவற்றவனாகவும், தனது இன்பதுன்பங்களைக் குறித்துக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாதவனாகவும், ஸர்வேச்வரனால் தூண்டப்பட்டு மேலும் கீழும் சென்றபடி உள்ளான் - என்பதற்கு ஏற்ப, அறிவற்றவனாகவும், சக்தி அற்றவனாகவும் உள்ள ஜீவாத்மா, தான் செய்த கர்மங்களுக்கு ஏற்றபடி மேல்லோகம் செல்லுதல், அங்கிருந்து திரும்புதல் போன்றவற்றைத் தனது ஸங்கல்பம் மூலம் ஏவுகிறான். – (விழுந்தும் எழுந்தும்) - ஸ்ரீவிஷ்ணுதர்மம் – த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி: – நீ விழுகின்றவற்றாலும் எழுகின்றவற்றாலும் - என்பதற்கு ஏற்ப கீழே விழுந்தும் உயரத்தில் எழுந்தும். (சுழன்றும் உழன்றும்) அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே - ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் நிலைத்து தான் செய்த கர்மங்கள் காரணமாகச் சுழன்றபடி - என்பதற்கு ஏற்ப சக்கரத்தின் சுழற்சி போன்று சுழன்றபடி இருந்தும், யமாலய மஹாசூலே மாதுர் ஜடரதோல்பத:, யாதாயாத ஸஹஸ்ராணாம் முகே ஜீவஸ்ய ஸாதநம் – முனிவரே! இந்த உயிருக்கு யமனிடம் உள்ள மஹாசூலம் மற்றும் தாயின் கர்ப்பம் ஆகியவற்றில் பலமுறை செல்வதற்கும் வெளியே வருவதற்குமான ஸாதனம் – என்பதற்கு ஏற்ப ஒருமுறை சென்ற காரணத்தால் [அதாவது ஸம்ஸாரத்தில் புகுந்து காரணத்தால்] பலமுறை வருவதும் போவதுமாக உழன்றபடி உள்ளதான ஆத்மாவின் சேர்க்கை காரணமாக விழுதல், எழுதல் என்ற இயல்புகள் சேர்ந்ததாக என்று கருத்து. (பறிபட்டும்) – பெரியதிருமொழி (10-7-5) – பந்துயறித்து - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தனது இன்பத்திற்குத் தடை என்று எண்ணி தானாகவே வந்து விடுவிக்கும்போது இதிலிருந்து விடுபட்டும். – (அல்பசாரமா மவையுமாய்) - திருவாய்மொழி (3-2-6) – அற்ப சாரங்கள் - என்பதற்கு ஏற்ப பகவானிடமிருந்து அகற்றிவிடுதல் என்ற செயல் அல்லாமல் மற்றபடி தன்னிடம் உயர்ந்ததாக அனுபவிக்க ஏதும் இல்லாத படி தாழ்ந்த சுவை நிறைந்தவைகளாக இருப்பவையும். (மதீயம் என்னில் விட்டகலவும்) – “எனக்கு உடைமையானது” என்று தனது ஸம்பந்தத்தை முன்னிறுத்திக் காணும்போது, பெரியதிருமொழி (3-7-8) - சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற - என்பதற்கு ஏற்ப கைவிடத்தக்கவையாகும். (ததீயம் என்னில் இகழ்வு அறவும்) – “இது அவனுக்கு உடைமையானது” என்று அவன் ஸம்பந்தத்தை முன்னிறுத்திக் காணும்போது திருவாய்மொழி (3-4-1) – இகழ்வில் இவ்வனைத்தும் - என்பதற்கு ஏற்ப முற்றிலுமாக ஏற்கத்தக்கவையாகவும். (முனிவதும் இக்காலம்) - பெரியதிருமொழி (11-2-5) - அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் – என்றும், திருவிருத்தம் (5) – பனிப்பியல்வாக வுடைய தண்வாடை, இக்கால மிவ்வூர் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரி வீசும் – என்றும் உள்ள பாசுரங்களில் கூறப்பட்டபடி அவன் இன்றிக் காணும்போது பகையாக உள்ளவையாகவும். (ஈதோ) – திருவிருத்தம் (27) – அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே - என்பதற்கு ஏற்ப அவனுடன் சேர்ந்து காணும்போது இனிய பொருள்களாகவும். (என்னப்படும்) - என்று கூறப்படுபவையான. (பொங்கைம்புலனின் போக்யாதி ஸமூஹம்) – திருவாய்மொழி (10-7-10) - பொங்கைம்புலனும் - என்ற பாசுரத்தில் கூறப்பட்டதான பொருள்கள், இன்பத்தை அளிக்கவல்ல பொருள்கள், இன்பம் தருகின்ற இடம் போன்றவற்றின் கூட்டம் என்று கருத்து. – இந்தச் சூர்ணையில் சிவந்த நூல், வெண்மையான நூல் மற்றும் கறுப்பு நூல் ஆகியவை கொண்டு உண்டாக்கப்பட்ட பந்தாக உரைக்கப்பட்டது எதுவென்றால், இன்பத்திற்கு இடமாக உள்ள சரீரத்தையே ஆகும் என்பது மேலே இவர் உரைத்த வர்ணனை மூலம் தெளிவாகிறது. கழல் என்பது சிறியதாகவும், ஐந்தாகவும் உள்ளதால் இன்பத்திற்குக் கருவிகளாக உள்ள இந்த்ரியங்கள் ஆகும். பாவை, குழமணம் போன்றவை விளையாட்டுக் கருவிகளின் தன்மைகள். யாழ், தென்றல், மதியம், அடிசில், சாந்தம், பூண் அகில் போன்றவை இன்பம் அளிக்கவல்ல இனிய பொருள்களாகிய சுவை, ஒளி, உணர்தல், சப்தம், மணம் போன்றவை ஆகும். இவற்றில் பூண் மற்றும் அகில் என்பவை உருவம் மற்றும் மணம் ஆகியவற்றின் வேறுபாடு உணர்த்துவது ஆகும். சிற்றில் என்பது கொட்டகம் என்பதால், இன்பம் அளிக்கும் இடம்; சரீரம் மற்றும் வசிக்கும் வீடு ஆகியவை இன்பம் அளிக்கவல்ல இடங்கள் அல்லவோ? தூதை என்பது சிறு சோறு உண்டாக்க உதவுவது என்பதால் இந்த்ரியங்களைத் தவிர்த்து உள்ளதான இன்பம் அளிக்கவல்ல உபகரணங்கள் ஆகும். இன்பம் தரவல்ல சரீரம் மற்றும் இன்பம் அளிக்கவல்ல கருவிகளான இந்த்ரியங்கள் ஆகியவற்றை பந்து, கழல் மூலம் கூறி, அவை விளையாட்டுக் கருவிகளாக உள்ளதாகக் கூறுகிறார்; ஏனென்றால் விளையாட்டு என்பது அந்த நேரத்தில் ஏற்படுகின்ற இன்பமான செயல் என்பதால், அந்தச் செயலுக்கு ஏற்ற கருவிகளாக அவை உள்ளதால் ஆகும். ஆகவே இவை அனைத்தும் திருவாய்மொழி (10-7-10) – பொங்கைம்புலனில் - என்பதில் இன்பம் முதலானவையாகக் கூறப்பட்டவை என்று உரைப்பதில் தவறில்லை.