Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 148)
இரண்டாம் ப்ரகரணம்
பட்டம் சூடகமாவன பராவர குருக்கள் பூட்டும் ஆத்மபூஷணங்கள்.
– அதாவது, “பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு” என்றும், “சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்” என்றும் சொல்லுகிற ஆபரணங்களாவன – “க்ருஷ்ணாங்க்ரி துளஸீமெளலி: பட்டம் க்ருஷ்ணாபி வந்தநம், குண்டலே க்ருஷ்ண சரித ச்ரவணம் கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவ்வாத்மாவை அங்கீகரித்த ஆசார்யனுண்டாக்கும் நாம ரூபங்களும், பகவத் வந்தநாதிகளும். பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தி, அவனுண்டாக்கும் சேஷத்வ ஜ்ஞாநாதிகளுமாகிற ஆத்மாலங்காரங்க ளென்கை.
– (பட்டம் சூடகம் ஆவன) – பெரியாழ்வார் திருமொழி (3-7-6) – பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு – என்றும், திருப்பாவை (27) - சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் – என்றும் கூறப்படும் ஆபரணங்கள் எவை என்றால், (பர அவர குருக்கள் பூட்டும் ஆத்மபூஷணங்கள்) - க்ருஷ்ணாங்க்ரி துளஸீமெளலி: பட்டம் க்ருஷ்ணாபி வந்தநம், குண்டலே க்ருஷ்ண சரித ச்ரவணம் கங்கணோஞ்ஜலி: - க்ருஷ்ணன் தனது திருவடிகளில் அணிந்த திருத்துழாய் என்பது க்ரீடம், அவனை வணங்குதல் என்பது பட்டாடை, அவன் சரீரங்களைக் கேட்பது என்பது குண்டலங்கள், அவனை வணங்குதல் என்பது கைகளுக்கு இடப்படும் வளையல்கள் - என்பதற்கு ஏற்ப, இந்த ஆத்மாவை ஏற்றுக்கொண்டு அதனை ஒரு பொருளாக்கிய ஆசார்யன் முதலில் ஏற்படுத்தித் தருகின்ற பெயர் மட்டும் ரூபங்கள் [அதாவது இராமாநுசதாசன் என்பதும், பன்னிரண்டு திருமண்காப்புகளும்] மற்றும் பகவானை வணங்குதலும் ஆகும். தொடர்ந்து அந்த ஆசார்யனுடைய வைபவங்களை உணர்த்தி ஆத்மாக்கள் அனைவரும் ஸர்வேச்வரனுடைய அடிமைகள் என்று ஆசார்யனால் அளிக்கப்பட்ட ஞானம் போன்றவைகளும் ஆத்மாக்களுக்கு அலங்காரங்கள் ஆகும்.