Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 147)
இரண்டாம் ப்ரகரணம்
கலை வளை அஹம் மம க்ருதிகள்.
– அதாவது, “கைவளையும் மேகலையும் காணேன்”, “கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா” இத்யாதிகளில் சொல்லுகிற கலையும் வளையுமான – பகவதநுபவ விரோதியான அஹங்க்ருதியும் மமக்ருதியுமென்கை. அஹங்கார மமகாரங்க ளிரண்டும் பகவதநுபவ விரோதியாகையாலேயிறே மத்யம பதத்தாலே இவையிரண்டையும் கழித்துக் கொண்டு த்ருதீய பதத்திலே பகவதநுபவம் சொல்லிற்று. “கழல்வளை பூரிப்ப யாங்கண்டு கைதொழக் கூடுங்கொலோ”, “ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்”, “தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையும்” என்கிறவிடங்களில் த்யாஜ்யமான அஹம் மம க்ருதிகளன்றிக்கே “சேஷோஹம்”, “என்னுடைய திருவரங்கர்” என்றாப்போலே யிருந்துள்ள அஹம் மமதைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலா மாகையாலே, அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாகக் குறையில்லை.
– (கலை) திருநெடுந்தாண்டகம் (22) - கைவளையும் மேகலையும் காணேன் - என்றும், பெரியதிருமொழி (5-5-2) – கலையாளாவகல் அல்குல் கனவளையும் கையாளா - என்றும் உள்ள பாசுரங்களில் காணப்படும் “கலை, வளை” போன்ற சொற்கள். (அஹம் மம க்ருதிகள்) - ஸர்வேச்வரனை அனுபவிக்கத் தடையாக உள்ள அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகியவை ஆகும். அஹங்காரம், மமகாரம் என்ற இரண்டும் பகவத் அனுபவத்திற்கு விரோதிகளாக உள்ளதால், “ஓம் நமோ நாராயணாய” என்பதில் உள்ள நடுப்பதமான “நம:” என்பதன் மூலம் இவை இரண்டையும் நீக்கிய பின்னர் ஏற்படும் பகவத் அனுபவத்தை மூன்றாவது பதமான “நாராயண” என்பது கூறுகிறது. திருவாய்மொழி (5-9-9) - கழல்வளை பூரிப்ப யாங்கண்டு கைதொழக் கூடுங்கொலோ - என்றும், திருவாய்மொழி (8-2-2) – ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான் – என்றும், திருவாய்மொழி (9-7-6) - தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையும் - என்றும் கூறுகின்ற இடங்களில் கைவிடவேண்டியதான அஹங்காரம், மமகாரம் என்ற பொருளில் வராமல், சேஷோஹம் – நான் அடிமை – என்றும், என்னுடைய திருவரங்கன் – என்ற இடங்களில் உள்ளது போன்று காணப்படும் பொருளில் அஹங்காரம், மமகாரங்களைக் கூறுவதாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகவே அங்கும் இது போன்றே மறைமுகமான பொருள் என்பதில் தோஷம் இல்லை