Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 146)

இரண்டாம் ப்ரகரணம்

நிலா முற்றம் ப்ரஜ்ஞா ப்ராஸாதமென்னு மெல்லை நிலம்.

– அதாவது, “நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்” என்கிற நிலாமுற்றமாகிறது, “ப்ரஜ்ஞா ப்ராஸாதமாருஹ்ய அசோச்யச்சோசகாந் ஜநாந், பூமிஸ்த்தாநிவ சைலஸ்த்தோ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ: ப்ரபச்யதி” என்கிறபடியே உத்துங்கமாக நின்று ஸர்வத்தையும் தர்சிக்கைக்கு உறுப்பாகச் சொல்லப்படுவதாய், அதிலே நின்று தர்சித்தவளவில் “காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்” என்கையாலே ததீய விஷயமே பரம ப்ராப்யமென்று பிறர்க்கும் ப்ரகாசிக்கும்படி சரமாவதியான புருஷார்த்த ஜ்ஞாநமென்கை.

– (நிலாமுற்றம்) - பெரியதிருமொழி (8-2-2) – நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் - என்ற பாசுரத்தில் கூறப்பட்ட “நிலா முற்றம்” என்பது. (ப்ரஜ்ஞா ப்ராஸாதம் என்னும் எல்லை நிலம்) - மஹாபாரதம் சாந்திபர்வம் - ப்ரஜ்ஞா ப்ராஸாதமாருஹ்ய அசோச்யச்சோசகாந் ஜநாந், பூமிஸ்த்தாநிவ சைலஸ்த்தோ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ: ப்ரபச்யதி – திருமந்த்ரத்தின் உயர்ந்த ஞானம் என்பதான மலையில் ஏறி, தன்னைக் குறித்த எந்தவிதமான வருத்தமும் இல்லாத ஞானி ஒருவன், அறிவின்றி வருந்தும் இந்த உலகில் உள்ளவர்களை, மலையில் உள்ள ஒருவன் கீழே நோக்குவது போன்று, காண்கிறான் - என்பதற்கு ஏற்ப உயர்ந்த இடத்தில் நின்று அனைத்துப் பொருள்களையும் காணும்போது, பெரியதிருமொழி (8-2-2) - காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள் - என்பதற்கு ஏற்ப அவன் தொடர்புடைய பொருள்களை அடைவதே மிகவும் உயர்ந்த பேறாகும் என்று அனைவருக்கும் விளக்கும்படியான எல்லை நிலமாக உள்ள பேற்றினைக் குறித்த ஞானம் ஆகும்.