Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 145)
இரண்டாம் ப்ரகரணம்
மாலை கங்குல் காலை பகல் – ரஜஸ் தமஸ் ஸத்வ சுத்தஸத்வ ஜ்ஞாநங்கள்.
– அதாவது, “செங்களம் பற்றி நின்றெள்கு புன்மாலை”, “சொல்கதிர் மாலை” இத்யாதிகளிலே சொல்லுகிற மாலையாவது - ராகோத்தரமாய் பதார்த்தங்கள் விசதமாக ப்ரகாசியாமை கொண்டு அந்யதா ப்ரதிபத்திக்கு உறுப்பாயிருக்கும் ஸந்த்யா காலமாகையாலே பதார்த்தங்களில் அந்யதா ப்ரதிபத்திக்குறுப்பான ராஜஸ ஜ்ஞாநம். “சூழ்கின்ற கங்குல்”, “செல்கின்ற கங்குல்”, “கங்குல் நாழிகை” இத்யாதிகளால் சொல்லுகிற கங்குலாவது - பதார்த்தங்களொன்றும் தோற்றதபடியாய், ஏதேனும் தோற்றமதுமுண்டாகில் விபரீதமாகத் தோற்றும்படியிருக்கும் திமிரோபஹத ராத்ரி காலமாகையாலே ஜ்ஞாத வ்யார்த்த ப்ரகாசமுமின்றியே விபரீத ப்ரதிபத்திக்கு ஹேதுவுமாயிருக்கும் தாமஸ ஜ்ஞாநம். “காலை யெழுந்திருந்து”, “காலை நன்ஞானத்துறை படிந்து” இத்யாதிகளிற் சொல்லுகிற காலையாவது - ப்ராஹ்மமுஹூர்த்தமாகையாலே பதார்த்த யதா ப்ரதிபத்திக்குறுப்பாகா நிற்கும் ஸாத்விக ஜ்ஞாநம். “பகல் கண்டேன்” இத்யாதியிற் சொல்லும் பகலாவது – பதார்த்தங்களை ஸம்சய விபர்யயமற விசதமாக ப்ராகாசிப்பிக்கும் காலமாகையாலே, “நாரணனைக் கண்டேன்” என்கிறபடியே ஸமஸ்த குண விக்ரஹ விபூதி விசிஷ்டனான ஸர்வேச்வரனை ஸம்யக் ஸாக்ஷாத்கரிக்கிற சுத்தஸத்வ ஜ்ஞாநமென்கை. இத்தால் அந்யதா ஜ்ஞாநம், விபரீத ஜ்ஞாநம், யதா ஜ்ஞாநம், தத்பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாந மென்கிறவற்றைச் சொன்னபடி.
– (மாலை) – திருவிருத்தம் (77) - செங்களம் பற்றி நின்றெள்கு புன்மாலை – என்றும், திருவாய்மொழி (9-9-1) - சொல்கதிர் மாலை - என்றும் உள்ள பாசுரங்களில் கூறப்படும் “மாலை” என்பது. (ரஜஸ் ஜ்ஞாநம்) – ஆசையை மேன்மேலும் வளர்ப்பதும், காணும் பொருள்கள் இன்னது என்று தெளிவாக உணர இயலாத காரணத்தால் வேறுவிதமாக எண்ணுவதற்குக் காரணமாய் உள்ள ஸந்த்யாகாலமாக இருப்பதால், பொருள்களைச் சரிவர அறியாமல் வேறுவிதமாக அறிவதற்குக் காரணமாக உள்ளதும் ஆகிய ராஜஸ ஞானம் ஆகும். (கங்குல்) – திருவிருத்தம் (72) - சூழ்கின்ற கங்குல் – என்றும், திருவாய்மொழி (5-4-10) - செல்கின்ற கங்குல் – என்றும், பெரியதிருமொழி (9-5-3) - கங்குல் நாழிகை – என்றும் உள்ள பாசுரங்களில் காணப்படும் “கங்குல்” என்பது. (தமஸ் ஜ்ஞாநம்) - எந்தவிதமான பொருள்களையும் அறிய இயலாதபடியும், ஏதேனும் தென்பட்டாலும் அதனைத் தவறாக உணரும்படியும் இருள் சூழ்ந்து கிடக்கும் இரவுப்பொழுது என்பதால், அறியத்தகுந்தபடி உள்ள பொருள்களைச் சரிவர உணர்த்தாமல் வேறு பொருள் என்னும் தவறான அறிவு ஏற்படக் காரணமாக உள்ள தாமஸ ஞானம் ஆகும். (காலை) – நாச்சியார் திருமொழி (9-8) - காலை யெழுந்திருந்து - என்றும், திருவிருத்தம் (93) - காலை நன்ஞானத்துறை படிந்து – என்றும் உள்ள பாசுரங்களில் காணப்படும் “காலை” என்பது. (ஸத்வ ஜ்ஞாநம்) – ப்ரஹ்மமுகூர்த்த நேரம் என்பதால் ஸத்வகுணத்தை வளர்ப்பதாகவும், இருளை விலக்கியபடி வருகின்ற காலைப்பொழுது என்பதால் பொருள்களை உள்ளது உள்ளபடி உணர்த்தக் காரணமாக உள்ளதும் ஆகிய ஸத்வ ஞானம் ஆகும். (பகல்) – இரண்டாம் திருவந்தாது (81) – பகல் கண்டேன் – என்பது போன்ற பாசுரங்களில் கூறப்படும் “பகல்” என்பது. (சுத்தஸத்வ ஜ்ஞாநம்) - பொருள்களை எந்தவிதமான சந்தேகமும் இன்றி மிகவும் தெளிவாக உணர்த்துகின்ற பகல்பொழுது என்பதால், இரண்டாம் திருவந்தாதி (81) – நாராணனைக் கண்டேன் - என்பதற்கு ஏற்ப அனைத்துவிதமான கல்யாணகுணங்கள் நிறைந்தவனும், எழிலான திருமேனி உள்ளவனும், அனைத்து விபூதிகளையும் கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரனை, எந்தவிதமான ஐயமும் இன்றி தெளிவாக உணர்த்துகின்ற சுத்தஸத்வ ஞானம் ஆகும். ஆக இதன் மூலம் பொருளைத் தெளிவின்றி அறிதல், மாற்றி அறிதல், உள்ளது உள்ளபடி அறிதல், இறுதியாகக் கூறப்பட்டதான பலனாகிய தெளிவான அறிவு ஆகியவற்றைக் கூறினார்.