Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 144)
இரண்டாம் ப்ரகரணம்
சிறுசீரார் சுளகுகள் உபய விவேக பரிகரம்.
– அதாவது, “சிறுசுளகு மணலுங் கொண்டு” என்றும், “சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா” என்றும் சொல்லுகிறவிடங்களில், சிறுசுளகாவது - பெருமணலையும் நுண்மணலையும் பிரிப்புதொன்றாகையாலே, தேஹாத்ம விவேகத்துக்குப் பரிகரமான ப்ரமாணம். சீரார்சுளகாவது - இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தார் ஆரென்று ஆராய்கிறவளவிலே, “சிலநெல் பிடித்தெறியா” என்று தொடங்கி “பேராயிரமுடையா னென்றாள்” என்று தேவதாந்தரங்களன்று; ஸர்வேச்வரனென்று விவேகிக்கிற போதைக்கு உபகரணமாகையாலே ஆத்ம பரமாத்மா விவேகத்துக்குப் பரிகரமான ப்ரமாணமென்கை. உபய விவேகமாவது - த்யாஜ்யோபாதேய ரூபோபய வஸ்து விவேகமாகையாலே, ப்ரகரணோசிதமாக இப்படி சொல்லத் தட்டில்லை.
– (சிறு சுளகு) – நாச்சியார் திருமொழி (2-8) - சிறுசுளகு மணலுங் கொண்டு – என்று கூறும் இடத்தில் உள்ள “சிறு சுளகு” என்பது, (உபய விவேக பரிகரம்) – பெருமணல் மற்றும் சிறுமணல் ஆகியவற்றைப் பிரித்தல் என்பதால், சரீரம் வேறு ஆத்மா வேறு என்று பகுத்தறிந்து உணர்வதற்கான ப்ரமாணம் ஆகும். (சீரார் சுளகு) – சிறியதிருமடல் (21) - சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா – என்பதில் கூறப்பட்ட “சீரார் சுளகு” என்பதன் பொருள் என்னவென்றால், இவளுக்கு இவ்விதம் தீர்க்க இயலாத காதல் நோயை ஏற்படுத்தியது யார் என்று ஆராயும்போது, சிறியதிருமடல் (21) - சிலநெல் பிடித்தெறியா - என்று தொடங்கி, சிறியதிருமடல் (22) – பேர் ஆயிரம் உடையான் என்றாள் – என்று, அவளைப் பிடித்துள்ள இந்த நோய்க்குக் காரணம் மற்ற தெய்வங்கள் அல்ல, ஸர்வேச்வரனே ஆவான் என்று அறிவதற்கு ஏற்றதாக உள்ளதால், ஆத்மாவையும் பரமாத்மாவையும் பிரித்து உணரும் விவேகத்தினை ஏற்படுத்தும் ப்ரமாணம் என்று கருத்து. உபய விவேகம், என்றால் தள்ளத்தக்கது எது, ஏற்கத்தக்கது எது என்று பிரித்து அறியக்கூடிய அறிவு என்பதால், இந்த இடத்திற்கு ஏற்றபடி இவ்விதம் பொருள் கொள்வதில் தவறில்லை.