Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 143)

இரண்டாம் ப்ரகரணம்

இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூர் ஒக்குமே.

கேவலரை ஓரூராகச் சொல்லுவானென் என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (இறுகலித்யாதி).

– ஆனால் கேவலர் என்பவர்களை ஓர் ஊராக ஏன் உரைக்கவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அபரிச்சிந்ந ஸ்வரூப ரூப குண விபூதிக பரப்ரஹ்மாநுபவம் போலன்றிக்கே அணுபூதாத்மாநுபவமாத்ர மாகையாலே, “இறுகலிறப்பு” என்கிற ஸங்கோசரூபமான மோக்ஷத்துக்கும், “ஜரா மரண மோக்ஷாய” என்கிறபடியே ஜரா மரணாதிகளில் அந்வயமற்றிருந்து அநுபவிக்கும்போது ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்குக் கர்மீபவிக்கும் ப்ரக்ருதி மண்டலத்துக்கு அவ்வருகான பரமாகாசத்திலே யிருந்து அநுபவிக்கவேண்டுகையாலே, “யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்” என்கையாலே, “இறந்தால் தங்குமூரண்டமே” என்கிறபடியே ப்ரக்ருதி ஸம்பந்தமற்றால் போய் வஸிக்கும் தேசமொக்கு மென்றபடி.

– (இறுகல் இறப்புக்கும்) - எல்லையற்ற ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கொண்டதான பரப்ரஹ்மத்தின் அனுபவம் போன்று அல்லாமல், அணு அளவே உள்ளதான ஆத்மாவை அனுபவித்தல் என்பதால் ஏற்பட்ட அனுபவம் என்பதால், திருவாய்மொழி (4-1-10) - இறுகல் இறப்பு – என்பதற்கு ஏற்ப சுருக்கமான ரூபமான மோக்ஷத்திற்கும், (இறந்தால் தங்கும் ஊர் ஒக்கும்) - கீதையில் (7-29) – ஜரா மரண மோக்ஷாய – வயோதிகம், மரணம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காக – என்பதற்கு ஏற்ப வயோதிகம் மற்றும் மரணம் ஆகியவற்றின் தொடர்பு நீங்கப் பெற்று அனுபவித்தபடி உள்ளபோது, ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரம் ஆகியவை ஏற்படும் இடமான ப்ரக்ருதி மண்டலத்திற்கும் அப்பால் உள்ளதான பரமாகாசத்தில் இருந்து அனுபவிக்கவேண்டும் என்பதால், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-6-38) - யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம் – ஜனகன் போன்ற யோகிகளுக்கு அமிர்தம் என்று கூறப்படும் இடம் எதுவோ அதுவே தனது ஆத்மாவை அனுபவிக்கவேண்டும் என்று எண்ணி அதற்கான உபாயங்களைக் கைக்கொள்ளும் இடம் - என்று கூறுவதற்கு ஏற்ப, பெரியதிருமொழி (10-2-10) - இறந்தால் தங்கும் ஊர் அண்டமே – என்னும்படி இந்தச் சரீரத்தின் தொடர்பு நீங்கப்பெற்றவுடன் சென்று வசிக்கும் தேசம் ஒப்புமையாகும் என்று கருத்து.