Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 142)
இரண்டாம் ப்ரகரணம்
ஊரார் நாட்டாருலகர் கேவலைச்வர்ய காம ஸ்வதந்த்ரர்.
– அதாவது, “ஊராரிகழிலும்”, “ஊரவர் கவ்வை”, “நாட்டாரோடியல் வொழிந்து”, “எங்கள் கண்முகப்பே யுலகர்க ளெல்லாம்”, “இம்மடவுலகர்”, “ஊரும் நாடுமுலகமும்” என்கிற விடங்களில், ஊராரென்பது ஆத்ம ப்ராப்தி காமரான கேவலரை. நாட்டார் என்பது – புத்ர பச்வந்நாதிகளான இஹலோகைச்வர்ய காமரை. உலகர் என்பது ஸ்வர்க்காதி பரலோகைச்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையென்கை.
– (ஊரார் கேவலர்) - சிறிய திருமடல் (77) – ஊரார் இகழிலும் – என்றும், திருவாய்மொழி (5-3-4) – ஊரவர் கவ்வை – என்றும் உள்ளவற்றில் “ஊரார்” என்பதன் மூலம் கூறப்படுவது ஆத்ம அனுபவத்தை விரும்புகின்ற கேவலரை ஆகும். (நாட்டார் ஐச்வர்ய காமர்) - திருவாய்மொழி (10-6-2) – நாட்டாரோடு இயல்வொழிந்து – என்பதில் உள்ள “நாட்டார்” என்பதன் மூலம் புத்திரன், பசு, உணவு போன்றதான இந்த உலக இன்பங்களை மட்டுமே விரும்பியபடி உள்ளவர்கள் கூறப்பட்டனர். (உலகர் ஸ்வதந்த்ரர்) – திருவாய்மொழி (9-2-8) - எங்கள் கண்முகப்பே உலகர்கள் எல்லாம் - என்றும், திருவாய்மொழி (9-2-7) – இம்மட உலகர் - என்றும், திருவாய்மொழி (6-7-2) – ஊரும் நாடும் உலகமும் - என்றும் உள்ளவற்றில் “உலகர்” என்பதன் மூலம் ஸ்வர்க்கம் போன்றதான மறுமையில் உள்ள செல்வங்களை விரும்பும் ஸ்வதந்த்ரர்கள் கூறப்பட்டனர்.