Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 139)

இரண்டாம் ப்ரகரணம்

தாயார் ஏதலர் உற்றீர்களென்னும் ஸாத்ய ஸித்த ஸாதந நிஷ்டரை; மகள் நம்முடை யேதலர் யாமுடைத் துணையென்னும் ஸித்த ஸாதந ஸாத்ய பரரை.

– அதாவது, தாயாரான உபாயாத்யவஸாய தசையில், “ஏதலர் முன்னாவென் நினைந்திருந்தாய்” என்று சத்ருக்களாகவும், “உற்றீர்கட்கென் சொல்லிச் சொல்லுகேன் யான்” என்று பந்துக்களாகவும் சொல்லும் – ஸித்த ஸாதந நிஷ்டா ப்ரதிகூலரான ஸாத்ய ஸாதந நிஷ்டரையும், அநுகூலரான ஸாத்ய ஸாதநநிஷ்டரையும். மகளான ப்ராப்ய த்வாரா தசையில், “நம்முடை யேதலர் முன்பு நாணி” என்று அந்தரங்க சத்ருக்களாகவும், “யாமுடைத் துணையென்னும் தோழிமார்” என்று ஸ்வஸமாந ஸுகதுக்கரான பந்துக்களாகவும் சொல்லும் – பகவதேக பரராயிருக்கச் செய்தே ததுபாய பாவத்திலே ஊன்றி நின்று, இத் த்வரை பாரதந்த்ர்யத்துக்குச் சேராதென்று நிஷேதிக்கும் ஸித்த ஸாதந பரரையும், தன்னைப்போலே உபேயபாவத்திலே யூன்றி உடன்பாடராயிருக்கும் ஸாத்ய பரரையுமென்கை. கீழில் வாக்யத்திலே “சூழ்ச்சி” என்றும், இவ்வாக்யத்திலே “ஏதலர்” என்றும் மற்றையாழ்வார்கள் சந்தைகளையும் கூட்டி யெடுத்தது, ஆழ்வார்களெல்லாரும் ஏககண்டராகையாலே அருளிச்செயலுக்கெல்லாம் இந்த ஸ்வாபதேசம் ஒக்குமென்று தோற்றுகைக்காக.

– (தாயார் ஏதலர் என்னும் நிஷ்டரை) - தாயான உபாயத்தில் துணிவு என்ற நிலையில், பெரியதிருமொழி (2-7-5) - ஏதலர் முன்னாவென் நினைந்திருந்தாய் - என்று பகைவர்களாகக் கூறுவது யாரை என்றால் ஸித்த ஸாதந நிலைக்கு விரோதமாக உள்ள ஸாத்ய ஸாதந நிஷ்டர்களை ஆகும் [ஸித்த ஸாதந நிஷ்டர் - ஸர்வேச்வரனே உபாயம் என்பவர்கள், ஸாத்ய ஸாதந நிஷ்டர் - ஸர்வேச்வரனைப் பலனாகக் கொண்டு நிற்பவர்கள்]. (தாயார் உற்றீர்கள் என்னும் ஸித்த ஸாதந நிஷ்டரை) - திருவாய்மொழி (5-6-7) - உற்றீர்கட்கென் சொல்லிச் சொல்லுகேன் யான் - என்பதற்கு ஏற்ப அநுகூலமாக உள்ள ஸித்த ஸாதந நிஷ்டர்களை உறவினர்களாகக் கூறும். (மகள் நம்முடைய ஏதலர் என்னும் ஸித்த ஸாதந பரரை) - மகளான பேற்றில் பதற்றம் என்ற நிலையில், திருவாய்மொழி (8-2-1) - நம்முடை யேதலர் முன்பு நாணி - என்பதற்கு ஏற்ப அந்தரங்க சத்ருக்களாக உரைப்பது யாரை என்றால், ஸர்வேச்வரனை மட்டுமே பற்றியுள்ள போதிலும் அவனுடைய உபாயத்தன்மை என்பதில் நிலை நின்று, இத்தகைய பேற்றில் பதற்றம் அடைதலாவது, மற்றவர்களைப் பற்றி நிற்கும் தன்மைக்குப் பொருந்தாது என்று விலக்குபவர்களாகிய ஸித்தா ஸாதநத்தில் நிலைநிற்பவர்களை ஆகும். (மகள் யாமுடைத்துணை என்னும் ஸாத்ய பரரை) – திருவாய்மொழி (9-9-5) – யாமுடைத் துணையென்னும் தோழிமார் - என்பதற்கு ஏற்ப, தனது இன்பதுன்பங்களைத் தங்களுடையதாகவே கொள்ளும் உறவினர்களாக யாரைக் கூறுவாள் என்றால், தன்னைப் போன்றே அடையத்தக்கபொருளில் நிலைநின்று தனக்கு ஏற்புடைய விதத்தில் உள்ள ஸாத்ய நிஷ்டர்களை ஆகும். கடந்த சூர்ணையில் “சூழ்ச்சி” என்றும், இந்தச் சூர்ணையில் “ஏதலர்” என்றும் திருவாய்மொழி மட்டும் அல்லாமல், மற்ற ஆழ்வார்களுடைய பாசுரங்களையும் சேர்த்து எடுத்தது ஏன் என்றால், ஆழ்வார்கள் அனைவருமே ஒரே போன்ற சொற்களைக் கூறுபவர்கள் என்பதால், அவர்களுடைய அருளிச் செயல்களுக்கும் இந்த மறைமுகமான கருத்துக்கள் ஏற்புடையதாகவே இருக்கும் என்பதை உணர்த்தவே ஆகும்.