Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 138)

இரண்டாம் ப்ரகரணம்

சூழ்ச்சி அகற்றினீரென்னும் பழி, இணக்கி எங்ஙனேயென்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடைமெய்க்காட்டு, நீரென்னே யென்னு முடன்பாடு, இடையில்லை யென்னு முதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி.

ஆக, தோழி தாயென்னு மவஸ்தைகளிற் சொல்லும், பஹுவசனத்துக்கு விஷயங்களையும், தலைமகளான அவஸ்தையிற் சொல்லும் பருவங்களையும், அவயவ வர்ணனைகளையும் தர்சிப்பித்தாராய் நின்றார்கீழ். இவ்வவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தி விசேஷங்களை யெல்லாரு மறியும்படி ப்ரகாசிப்பிக்கிறார்மேல் (சூழ்ச்சியென்று தொடங்கி). – இவ்வவஸ்தா த்ரயத்தில், தாயென்றும் மகளென்றும் சொல்லுகிற அவஸ்தைகளில், ஸ்வஸ்வ சத்ருக்களும் பந்துக்களுமாகச் சொல்லுகிறது ஆரையென்னு மாகாங்க்ஷையிலே அவற்றை யருளிச்செய்கிறார் (தாயாரென்று தொடங்கி).

– தோழி, தாய் என்ற நிலைகளில் “தோழிமார், தாய்மார்” என்றுள்ளது போன்று பன்மைக்கு உள்ள விஷயங்கள், தலைமகள் என்ற நிலையில் கூறப்படும் பருவங்கள், அவயவங்களுடைய வர்ணனைகள் ஆகியவற்றை இதுவரை விரிவாக உரைத்தார். இந்த மூன்று நிலைகளுடைய [தோழி, தாய், தலைமகள்] செயல்களில் காணப்படும் வேறுபாடுகளை அனைவரும் அறியும்படியாக இனி விளக்குகிறார். – இந்த மூன்று நிலைகளில் உள்ளதான தாய் மற்றும் மகள் ஆகிய நிலைகளில், அவரவர்களுக்குப் பகைவர்கள், உறவினர்கள் என்று யாரைக் கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்” என்று தோழிமாரன்றோ இவளைக்கொடுபோய் அவ்விஷயத்திலே அகப்படுத்தி இப்படியாக்கினார்களென்று தாயானவள் தோழிமார்மேலே பழியிடுவது, “துலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென்மொழியாளை நீருமக்காசையின்றி யகற்றினீர்” என்று அவ்வூரிலே கொண்டுபுக்கு அவ்விஷயத்தைக் காட்டி நீங்களேயன்றோ இவளை இப்படிக் கைகழியப் பண்ணினிகோளென்று தோழியானாவள் தாய்மார்மேலே பழியிடுவதாகிறவிதுவும், – “இணக்கி யெம்மை யெம்தோழிமார் விளையாடப் போதுமினென்னப் போந்தோமை” என்று உன்னை வெறுக்கிறதென்? இணக்குப் பார்வையாய் நின்று உன்பக்கலிலே அகப்படுத்தின தோழிமாராலே வந்ததன்றோ விதென்பது, “எங்ஙனேயோ வன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்று எனக்கு அவ்விஷயத்தைக் காட்டி இப்ராவண்யத்தை விளைத்த தாய்மாரான நீங்கள் என்னைப் பொடிகிறபடி எங்ஙனேதா னென்பதாய் கீழ்ச்சொன்ன பழி இரண்டுக்கும் ஒக்குமென்றும் தலைமகள் மேலெழுத்திடுகையும்; – “முன்னின்றாயென்று தோழிமார்களு மன்னையரும் முனிதிர்” என்னும்படி இதுக்கு முன்பு ஒருவர் கண்படாமல் வளர்ந்து போந்த நீ இப்போதெல்லாரும் காணப்புறப்பட்டு முன்னே நின்றாயென்று, தோழி, தாய்மாரோடே கூடி நின்று தலைமகளைப் பொடிவது, “இவளை நீரினி யன்னைமீ ருமக்காசையில்லை விடுமினோ” என்று தாய்மார்க்குக் கார்யோபதேசம் பண்ணுவாரைப்போலே, தோழி, தலைமகளுக்குத் துணை செய்வதாய்க் கொண்டு இரண்டு தலைக்கும் ஓரொருபோதிலே ஸஹகரிக்கையாகிற இருபடைமெய்க்காட்டும், – “அன்னையரும் தோழியரும் நீரென்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்” என்று தாய்மாரும் தோழிமாரும் இத்தசையில் என்னை ஆச்வஸிப்பியாதே இரவு முழுக்க உறங்காநின்றாகளென்று தாய்மாரோடும் தோழிமாரோடும் தலைமகளுக்குண்டான உடன்பாடும், “அன்னைமீர்க ளென்னுடைத் தோழியர்கா ளென்செய்தேன்” என்றவளவில் அவர்கள் எங்களைக் கேட்கில் மீளவமையுமென்ன, “உங்களோ டெங்க ளிடையில்லை” என்று இவ்விஷயத்தில் நின்றும் மீட்க நினைக்கிற உங்களோடு எனக்கொரு ஸம்பந்தமில்லையென்று இரண்டு தலையையு முதறுகையும்; – “இருந்திருந் தரவிந்தலோசனனென்றென்றே நைந்திரங்கும்” என்று ஒருகால் அரவிந்தலோசன னென்னும்போது பலஹாநியாலே நடுவே பலகாலிளைத் திருந்திருந்து அவன் கண்ணழகுக்கு வாசகமான அத்திருநாமத்தை இப்படிப் பலகாலும் சொல்லிச் சிதிலை யழியாநின்றாளென்று இவளதிப்ராவண்யத்தைக் கண்டு தோழி கொண்டாடுவது. “திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள்” என்று அவன் வர்த்திக்கிற தேசத்தைக் குறித்துப் போனாளென்ன வமைந்திருக்க, பகவத் ப்ராவண்யாதிசயத்தைப் பற்ற பஹுமாநம் பண்ணி நடந்தாளென்று தாயார் கொண்டாடுவதாகிறவிதுவும், தோழி தாய் மகளென்கிற அவஸ்தா த்ரயத்தினுடையவும் வ்யாபாரமென்றபடி. இதில் பழி, மேலெழுத்து என்கிறவிரண்டாலும் “அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வாநுபபத்தி:” என்கிறபடியே சேஷவ்ருத்தி யந்வயமில்லாதபோது சேஷத்வ ஸித்தியில்லாமையாலே சேஷவ்ருத்தியிலே நோக்காயிருக்கும் ஸம்பந்த ஜ்ஞாநம் ப்ராப்ய ருசிக்கு ஹேதுவாகையாலும், விலக்ஷண குண விக்ரஹ விசிஷ்டமாய் உபேயமாயிருக்கிற வஸ்து தன்னையே தத் ப்ராப்த்யுபாயமாகப் பரிக்ரஹிக்கையாலே உபாயாத்யவஸாயம் உபாய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கையாலே உபேய ருசிக்கு ஹேதுவாகையாலும், இவற்றி லோரொன்றைப் பார்த்தால் இதுவே ப்ராப்ய த்வரா ஹேதுவென்னும்படி யிருக்கையும், ப்ராப்ய த்வரா வேஷந் தன்னை நிரூபித்தாலும் அவையிரண்டுமடியாக இது வந்ததென்று தோற்றும்படி யிருக்கையும் சொல்லுகிறது. இப்படி ஸம்பந்த ஜ்ஞாநமும் உபாயாத்யவஸாயமும் ப்ராப்ய த்வரைக்குக் காரணமா யிருக்கிறவிது ப்ரதமதசை. இருபடைமெய்க்காட்டு, உடன்பாடு என்கிறவிரண்டாலும் ஸம்பந்தஜ்ஞாநமானது - சேஷத்வம் ஸ்வரூபமான பின்பு, சேஷிதானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கையொழியத் தான் பதறுகை ஸ்வப்ரயோஜனத்திலே முதலிடுகையாலே ஸ்வரூப விருத்தமென்னுமாகாரத்தாலே, ஸ்வப்ரவ்ருத்தி நிவர்த்தகமான உபாயாத்யவஸாயத்துக்கு ஸஹகரித்தும், இவ்வதி ப்ராவண்யம் உபாயத்திலே முதலிடில் செய்வதென்னென்று இத்த்வரையை நிவர்த்திப்பிக்கப் பார்க்கிற வுபாயாத்யவஸாயத்தை, ப்ராப்த விஷயத்தில் ப்ராவண்யம் ஸ்வரூபாதிரேகி யல்லாமையால், இது நிவர்த்தநீயமுமன்று; நிவர்த்திப்பிக்கத்தானும் போகாதென்று நிவர்த்தநோத் யோகத்தைக் குலைத்து ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும், இப்படி யிரண்டுக்கு மநுகூலிக்கத்தக்கதா யிருக்கும்படியும், சேஷிக்கு அதிசயகரமான கைங்கயத்தி லந்வயிப்ப தெப்போதோ வென்னுமத்தாலும், ஸித்தோபாயத்தைப் பற்றினார்க்கு விளம்பஹேது வில்லாமையாலே சீக்ரமாக ப்ராப்யத்தைப் பெறவேணுமென்னுமத்தாலும் செல்லுகிற ப்ராப்ய த்வரைக்கு ஸம்பந்தஜ்ஞாநமும் உபாயாத்யவஸாயமும் அநுகூலமா யிருக்கும்படியையும் சொல்லுகிறது. இப்படி ஸம்பந்தஜ்ஞாநம் உபய ஸஹகாரியாவது ப்ராப்ய த்வரைக்கு நிரோதகங்களான ஸம்பந்தஜ்ஞாநோபாயாத்யவஸாயங்கள் முகபேதேந தத்ததநுகூலங்க ளாவதாகிறவிது மத்யமதசை. – உதறுதல், கொண்டாட்டம் என்கிறவிரண்டாலும் இப்படி அநுகூலமாய்த் தோற்றியிருக்கிற ஸம்பந்தஜ்ஞாநமும் உபாயாத்யவஸாயமும் க்ரமப்ராப்தியே அமையுமென்று த்வரைக்கு நிவர்த்தகமாமளவில் த்வரை யிரண்டையு மதிக்ரமித்துப் போம்படியையும், அப்படி அதிக்ரமித்த காலத்தில் அந்த த்வரை ஸம்பந்தஜ்ஞாநத்துக்கு முபாயாத்யவஸாயத்துக்கும் அவத்யமாய்த் தோற்றுகையன்றிக்கே ச்லாக்யமா யிருக்கும்படியையும் சொல்லுகிறது. இப்படி ப்ராப்ய த்வரை ஸம்பந்தஜ்ஞாநோபாயத் யவஸாயங்களை அதிக்ரமிக்கையும், அதுதான் ச்லாக்யமாகையுமாகிறவிது சரமதசை. ஆக ஸம்பந்தஜ்ஞாநம், உபாயாத்யவஸாயம், ப்ராப்ய த்வரையாகிற அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தி விசேஷங்களை ஸர்வருமறிந்து அநுஸந்திக்கும்படி ஸங்க்ரஹேண தர்சிப்பித்தாராய்த்து.

– (சூழ்ச்சி அகற்றினீரென்னும் பழி) – பெரியாழ்வார் திருமொழி (3-7-4) – தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன் - என்பதற்கு ஏற்ப, நாயகியான இவளை ஸர்வேச்வரனிடம் அழைத்துச் சென்று, அவன் விஷயத்தில் சிக்க வைத்து, இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் இவளுடைய தோழிமார்களே ஆவர் என்று தாயானவள் அவர்கள் மீது பழி கூறுவதும்; திருவாய்மொழி (6-5-2) - துலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென்மொழியாளை நீருமக்காசையின்றி யகற்றினீர் – என்பதற்கு ஏற்ப, “திருத்தொலைவில்லிமங்கலத்துக்கு இவளை அழைத்துச் சென்று, அந்த இடத்தில் உள்ள ஸர்வேச்வரனை இவளுக்குக் காண்பித்து, இவளை இவ்விதம் அனைவரும் பழித்துப் பேசும்படியாகச் செய்தவர்கள் நீங்கள் அல்லவோ?”, என்று தோழியானவள் தாய்மார் மீது பழி கூறுவதும் என்கிற இவையும். – (இணக்கி எங்ஙனேயென்னும் மேலெழுத்து) “திருவாய்மொழி (6-2-8) - இணக்கி யெம்மை யெம்தோழிமார் விளையாடப் போதுமினென்னப் போந்தோமை – என்பதற்கு ஏற்ப என்னுடன் சரிசமமாக நின்று என்னை உன்னிடம் ஈடுபடுத்தியது எனது தோழிமார்களுடைய செய்கையால் ஆகும். அவர்களால் அல்லவோ எனக்கு இந்த நிலை வந்தது. இப்படி உள்ளபோது உன்னை [ஸர்வேச்வரன்] நான் ஏன் வெறுக்கவேண்டும்?” என்றும்; “திருவாய்மொழி (5-5-1) - எங்ஙனேயோ வன்னைமீர்காள் என்னை முனிவது நீர் - என்பதற்கு ஏற்ப எனக்கு ஸர்வேச்வரனைக் காண்பித்து, இப்படிப்பட்ட தீராத காதலை என்னிடம் உண்டாக்கிய தாய்மாராகிய நீங்கள் என்னைப் பழிப்பது எப்படிப் பொருந்தும்?”, என்றும் கூறுவதற்கு ஏற்ப, மேலே கூறப்பட்ட பழிச்சொற்கள் தோழிமார், தாய்மார் ஆகிய இருவருக்குமே பொருந்தும் என்று தலைமகள் உரைப்பதும். – (முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடைமெய்க்காட்டு) திருவாய்மொழி (5-5-9) - முன்னின்றாயென்று தோழிமார்களு மன்னையரும் முனிதிர் -என்பதற்கு ஏற்ப, தோழியானவள் தாய்மாருடன் சேர்ந்து கொண்டு தலைமகளிடம், “இதற்கு முன்பு யாருடைய கண்களிலும் படாமல் வளர்ந்த நீ, இப்போது அனைவரும் காணும்படியாக அவனுடன் நிற்கிறாய்”, என்று உரைக்கிறாள். திருவாய்மொழி (6-5-1) - இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ – என்பதற்கு ஏற்ப தலைமகளுக்குத் துணை செய்யும் பொருட்டு தோழியானவள் தாய்மாருக்கு உபதேசம் செய்கிறாள். ஆக தோழியானவள் இரண்டு பேருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் உதவி செய்தல் என்பது இருபடைமெய்க்காட்டுதல் ஆகும். – (நீரென்னே என்னும் உடன்பாடு) - திருவாய்மொழி (5-4-5) - அன்னையரும் தோழியரும் நீரென்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால் – என்பதற்கு ஏற்ப, நான் உளள இந்த நிலையை உணர்ந்து என்னைத் தேற்றாமல், இரவு முழுவதும் தாங்கள் உறங்காமல் இருந்தனர் என்று தலைமகளுக்குத் தனது தோழிமாருடன் தாய்மாருடனும் உண்டான உடன்பாடு. (இடையில்லை யென்னு முதறுதல்) - திருவாய்மொழி (8-2-7) – அன்னைமீர்கள் என்னுடைத் தோழியர்காள் என்செய்தேன் – என்பதற்கு ஏற்ப இவள் புலம்பும் நேரத்தில் அவர்கள் இவளிடம், “நீ அவனை விட்டு வருதல் நலம்” என்று கூறும்போது, இவள் அவர்களிடம், “திருவாய்மொழி (8-2-7) – உங்களோடு எங்கள் இடையில்லை - என்பதற்கு ஏற்ப இந்த விஷயத்திலிருந்து என்னைத் தள்ள எண்ணுகின்ற உங்களுடன் எனக்கு இனி ஒரு தொடர்பும் இல்லை” என்று கூறி இருவரையும் உதறுதலும். – (இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்) - திருவாய்மொழி (6-5-8) – இருந்திருந்து அரவிந்தலோசனன் என்றென்றே நைந்து இரங்கும் - என்பதில், ஒருமுறை “அரவிந்தலோசநன்” என்று கூறினாலே தனது வலிமை குறைந்து பலமுறை இளைத்தபடி காணப்பட்டு, அவனுடைய திருக்கண்களின் அழகைக் கூறுவதான அந்தத் திருநாமத்தை இவ்விதம் பலமுறை உரைத்து, உருக்குலைந்து அழிகிறாள் என்று இவளுடைய அளவு கடந்த ப்ரேமத்தைக் கண்டு தோழி கொண்டாடுவது; திருவாய்மொழி (6-7-9) – திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் – என்ற பாசுரத்தில் அவன் எப்பொதும் வசித்தபடி உள்ளதான திவ்யதேசத்தை எண்ணியவளாகச் சென்றாள் என்று கூறியபோதிலும், ஸர்வேச்வரனிடம் கொண்ட அளவு கடந்த ஈடுபாடு காரணமாக உயர்வு வெளிப்படச் சென்றாள் என்று தாயார் கொண்டாடுவது; (அவஸ்தா த்ரய வ்ருத்தி) – இவை அனைத்தும் தோழி, தாய், மகள் ஆகிய மூன்று நிலைகளின் செயல்பாடுகள் என்று கருத்து. – மேலே கூறப்பட்டவற்றில் பழி மற்றும் மேலெழுத்து ஆகிய இரண்டின் மூலம் அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வாநுபபத்தி: - கைங்கர்யத்தில் தொடர்பு இல்லையென்றால் அடிமைத்தன்மையை அடையும் மார்க்கம் ஏதும் இல்லை என்பதால், கைங்கர்யத்தில் மட்டுமே குறிக்கோள் உடையதாக உள்ள ஸம்பந்தஞானம் என்பது, கைங்கர்யம் என்ற இலக்கை அடைவதில் உள்ள ஆசைக்குக் காரணமாக உள்ளதாலும்; மிகவும் உயர்ந்த குணங்கள் மற்றும் அழகான திருமேனி ஆகியவற்றுடன் கூடியதாக உள்ளதும், அடையப்பட வேண்டியதும் ஆகிய அந்தப் பரமாத்மாவை மட்டுமே அதனை அடைவதற்கான உபாயமாக பற்றுவதால் அத்தகைய உபாயத்தில் உள்ள துணிவு [அல்லது நம்பிக்கை] என்பது அடையப்படும் இலக்காக உள்ள பரமாத்மாவின் மேன்மைகளை முன்னிட்டபடி உள்ளதால், அடையத்தக்கதான அந்தப் பரமாத்மா மீது ஏற்படுகின்ற ஆசைக்குக் காரணமாக உள்ளதாலும்; இவற்றில் எதனை நோக்கினாலும் அதுவே பேற்றை அடைவதில் உள்ள பதற்றத்திற்குக் காரணம் என்று தோன்றுவதாக உள்ள தன்மையும், பேற்றினை அடைவதில் உள்ள பதற்றத்தின் தன்மை இத்தகையது என்று நிரூபித்தபோதிலும் இந்தத் தன்மையானது ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே வந்தது என்று தோன்றுவதாக உள்ள தன்மையும் கூறப்பட்டது [அதாவது பழி, மேலெழுத்து என்பதால் இவை இரண்டும் கூறப்பட்டது]. – இப்படியாக ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகிய இரண்டும் பேற்றினைப் பெறுவதில் உள்ள பதற்றத்திற்குக் காரணமாக உள்ள முதல் கட்டமாகும். இருபடைமெய்க்காட்டு மற்றும் உடன்பாடு ஆகிய இரண்டின் மூலம் ஸம்பந்தஞானம் என்பது – அடிமைத்தன்மை என்பது ஆத்மாவின் ஸ்வரூபம் என்றான பின்னர், ஸர்வேச்வரன் தானாகவே வந்து தன்னை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அல்லாமல், தான் பதற்றத்துடன் இருத்தல் என்பது தனது பயனுக்காகத் தான் முயல்வது போன்று உள்ளதால், இந்தத் தன்மை ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளது; ஆகவே தனது முயற்சியை விலக்கிவிடுவதான உபாயத்தில் துணிவு என்பதற்குத் துணை செய்கிறது. இந்த அளவு கடந்த ப்ரேமை என்பது, உபாயத்தில் புகுந்தால் என்ன செய்வது என்று எண்ணி, இந்தப் பதற்றத்தை விலக்க முயல்கின்ற உபாயத்தில் உள்ள துணிவை – நமக்கு இயல்பாகவே அடையத்தக்க இலக்காக உள்ள விஷயத்தின் மீது ஏற்படும் அளவு கடந்த ப்ரேமை என்பது, ஆத்ம ஸ்வரூபத்திற்கு முரணானது அல்ல என்பதால் இதனை விலக்க வேண்டியது இல்லை என்றும், விலக்கினாலும் மறையாது என்றும் உணர்த்தி, விலக்கும் முயற்சியைத் தடுத்து பேற்றினை அடைவதில் உள்ள பதற்றத்துக்குத் துணை செய்கிறது. இப்படியாக ஸம்பந்தஞானமானது உபாயத்தில் துணிவு மற்றும் பேற்றில் பதற்றம் ஆகிய இரண்டிற்கும் அனுகூலம் செய்யத்தக்கதாக உள்ளதையும்; ஸர்வேச்வரனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற கைங்கர்யத்தினை அடைவது எப்போதோ என்பதாலும், ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரனைப் பற்றியவர்களுக்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் ஏதும் இல்லாமையால் விரைந்து பேற்றினைப் பெறவேண்டும் என்பதாலும் கூறப்படும் பேற்றில் பதற்றத்துக்கு, ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகிய இரண்டும் அனுகூலமாக உள்ளதையும் கூறுகிறது [அதாவது இவை இருபடை மெய்க்காட்டு, உடன்பாடு என்பதால் கூறப்படுகிறது]. இவ்விதம் ஸம்பந்தஞானம் என்பது இரண்டிற்கும் துணையாக இருத்தல் என்பது, பேற்றில் பதற்றத்திற்குத் தடைகளான ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகிய இரண்டும் வேறுபாடு காரணமாக அவற்றுக்கு அநுகூலமாக இருத்தல் என்பதாகும். இது நடுவில் உள்ள நிலையாகும். – உதறுதல், கொண்டாட்டம் ஆகியவற்றால் கூறப்படுவது – அநுகூலமாகத் தோன்றுவதான ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகியவை, ஸர்வேச்வரன் தானாகவே வந்து ஏற்பான் என்பதுவரை பொறுமையுடன் இருத்தலே சரியானது என்று பதற்றத்திற்குத் தடையாக உள்ளபோது, பேற்றில் பதற்றமானது ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகியவற்றுக்குத் தாழ்வு ஏற்படுத்துகிறதோ என்று எண்ண வைக்காமல், கொண்டாடத்தக்கபடியாக உள்ளதைக் கூறுகின்றன. இவ்விதம் பேற்றில் பதற்றம் என்பது ஸம்பந்தஞானம் மற்றும் உபாயத்தில் துணிவு ஆகிய இரண்டையும் மீறுதல் மற்றும் அவ்விதம் மீறுதல் என்பதும் கொண்டாடத்தக்கது என்று உள்ளதும் ஆகிய இறுதி நிலையாகும். இதன் மூலம் - ஸம்பந்தஞானம், உபாயத்தில் துணிவு மற்றும் பேற்றில் பதற்றம் ஆகிய மூன்றின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும்படியாகச் சுருக்கமாக அருளிச்செய்தார்.