Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 137)
இரண்டாம் ப்ரகரணம்
மயில் பிறை வில் அம்பு முத்துப்பவளம் செப்பு மின் தேரன்னம் தெய்வவுரு விகாஸ சுத்தி தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக பக்த்யணுத்வ போக்யதா கதிகளையுடைய அகமேனியின் வகுப்பு.
இனி தலைமகளான வவஸ்தையில் வர்ணிக்கு மவயவ விசேஷங்கள் எவை யென்னுமாகாங்க்ஷையிலே அத்தை தர்சிப்பிக்கிறார் (மயில்பிறையென்று தொடங்கி).
– பேற்றினை அடைவதில் உள்ள பதற்றம் என்பதைத் தலைமகளாகக் கொள்ளும்போது, அவளுடைய அவயவங்களை வர்ணிப்பதன் மூலம் உணர்த்தப்படும் பொருள் என்ன என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “தோகைமாமயிலார்கள்” என்று ஸ்த்ரீகளை மயிலாகச் சொல்லுகிறது அலகபார விஸ்த்ருதியை யிட்டாகையாலே. அத்தால் இங்கு ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச் சொல்லுகிறது. “பிறையுடை வாணுதல்” என்று நெற்றியைப் பிறையாகச் சொல்லுகையாலே அதன் தாவள்யத்தையிட்டு ஸ்வாதந்த்ர்யாந்ய சேஷத்வங்களாகிற தோஷ ஸ்பர்சமற்றிருக்கும் சுத்தியைச் சொல்லுகிறது. “விற்புருவக்கொடி” என்று பருவத்தை வில்லாகச் சொல்லுகிறது - வளைவையிட்டாகையாலே பாஹ்யாப்யந்தரகரண நியமந ரூப தாந்தியைச் சொல்லுகிறது. “அம்பன்ன கண்ணாள்” என்று கண்ணை லக்ஷ்யபாதியான அம்பாகச் சொல்லுகையாலே “தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்று தனக்கடைத்த விஷயத்தை அவலம்பித்த ஜ்ஞாநத்தைச் சொல்லுகிறது. “முத்தன்ன வெண்முறுவல்” என்று முறுவலை முத்தாகச் சொல்லுகையாலே “முத் ப்ரீதி: ப்ரமதோ ஹர்ஷ:” என்கிறபடியைக் கொண்டு அவ்விஷயாநுபவத்தா லுண்டான ஆனந்தத்தைச் சொல்லுகிறது. “பவள வாயாள்” என்று அதரத்தை ப்ரவாளமாகச் சொல்லுகிறது. சிவப்பை யிட்டாகையாலே, அவ்விஷயத்தைப் பற்ற வுண்டான அநுராகத்தைச் சொல்லுகிறது. “செப்பன்ன மென்முலை” என்று பரிணதமான முலையை செப்பாகச் சொல்லுகையாலே, சேஷி விரும்பி மேல்விழும்படி பரிணதையான பக்தியைச் சொல்லுகிறது. “மின்னனைய நுண்மருங்குல்” என்று இடையை மின்னாகச் சொல்லுகிறது நுண்மையை யிட்டாகையாலே, கீழ்ச் சொன்ன ஜ்ஞாநா வஸ்தா விசேஷங்களுக் கெல்லா மாதாரமான ஆத்மஸ்வரூபத்தின் அணுத்வத்தைச் சொல்லுகிறது. – “தேரணங்கல்குல்” என்கிற நிதம்ப வைலக்ஷ்ண்யம் போக்தாவுக்கு போக்யமாயிருக்குமதாகையாலே “தேனும் பாலும் கன்னலுமமுதுமாகித் தித்தித்து” என்கிறபடியே சேஷிக்கு மிகவும் ரஸாவஹமாம்படி யிருக்கிற ஆத்மவஸ்துவின் போக்யதையைச் சொல்லுகிறது. “அன்னமன்ன நடையாள்” என்று அன்னத்தை யொப்பிடுகிறது நடையழகுக்காகையாலே, சேஷியும் ததீயரும் ச்லாகிக்கும்படி ஸ்வரூபாநு ரூபமாக நடக்கையாகிற கதியைச் சொல்லுகிறது. ஆக இப்படி மயில்பிறையித்யாதி வர்ணனார்ஹாவயவ விசேஷ யுக்தமாய் “தெய்வவுரு” என்று அப்ராக்ருதமாகச் சொன்ன ரூபமாவது – ஜ்ஞாந விகாஸ சுத்த்யாதிகளுக்கு ஆச்ரயமாய், “அகமேனி” என்று ஆந்தரமாயிருக்கிற ஆத்மஸ்வரூபத்தின் வகுப்பென்றபடி; வகுப்பாவது – தர்மி தர்ம வைசிஷ்டியாலே ஏவம்பூத ரூபகார்ஹமாம்படி யிருக்கிற கட்டளை. கீழ் ப்ராப்ய த்வரையையன்றோ தலைமகளாகச் சொல்லிற்று; அவயவ வர்ணனையில் ஆத்மஸ்வரூப பரமாகச் சொல்லுவானென் னென்னில் - மூன்றவஸ்தையும் இவர் தமக்கேயாகையாலே தத்ததவஸ்தைகளோடு சேர்ந்த வேஷத்தாலே ஸகலமும் இவர்தாமேயாய் நின்று பேசுகையாலே ப்ராப்ய த்வரையை யடைந்து நிற்கிறவிவர் ஸ்வரூபத்துக்கே தலைமகளான நிலையாகையாலே அப்படி சொல்லக் குறையில்லை.
(மயில் விகாஸ) – திருவாய்மொழி (6-2-2) – தோகைமாமயிலார்கள் - என்பதற்கு ஏற்ப பெண்களை மயிலாக வர்ணித்தல் என்பது அவர்களுடைய கூந்தலின் பரப்பை முன்னிட்டு என்பதால் ஆகும். ஆக இங்கு ஆத்மாவுடைய ஞானமலர்ச்சியைக் கூறுகிறார். (பிறை சுத்தி) - பெரியதிருமொழி (2-9-9) - பிறையுடை வாணுதல் – என்பதற்கு ஏற்ப நெற்றியைப் பிறையாக உரைப்பதன் மூலம் அதன் வெண்மை கூறப்பட்டு, தான் தனக்கு அடிமையாக இருத்தல் மற்றும் மற்றவர்களுக்கு அடிமையாக இருத்தல் போன்றதான தோஷம் ஏதும் இன்றி உள்ளதான ஆத்ம தூய்மையைக் கூறுகிறார். (வில் தாந்தி) – திருவாய்மொழி (6-6-6) – விற்புருவக்கொடி - என்பதற்கு ஏற்ப புருவங்களை வில் என்று கூறுகிறது. இது வளைந்துள்ள தன்மையால் கூறப்படுகிறது. இதன் மூலம் புற இந்த்ரியங்களையும் அந்தகரணத்தையும் அடக்கி ஆளுதல் என்பதை உணர்த்துகின்ற அமைதி கூறப்படுகிறது. (அம்பு ஞானம்) - பெரியதிருவந்தாதி (6-8-6) – அம்பன்ன கண்ணாள் - என்று கண்களை சரியாக இலக்கைச் சென்று தாக்கும் அம்பு எனக் கூறுவதால், முதல் திருவந்தாதி (67) - தாமரையாள் கேள்வ ஒருவனையே நோக்குமுணர்வு - என்பதற்கு ஏற்ப தனக்கு இயல்பாகவே அமையப் பெற்ற விஷயமாகிய அந்தப் பரம்பொருளைப் பற்றும் ஞானத்தைக் கூறினார். – (முத்து ஆனந்தம்) – நாச்சியார் திருமொழி (5-6) – முத்தன்ன வெண்முறுவல் – என்று புன்முறுவலை முத்து என உரைப்பதால், அமரகோசம் – முத் ப்ரீதி: ப்ரமதோ ஹர்ஷ: - முத் என்பது ப்ரீதி, ப்ரமதம், ஆனந்தம் என்று கூறப்படும் – எனக் கூறுவதால், அந்தப் பரம்பொருளை அனுபவிப்பதன் காரணமாக ஏற்படும் ஆனந்தத்தைக் கூறுகிறது. (பவளம் அநுராகம்) – பெரியதிருமொழி (4-8-1) – பவள வாயாள் – என்பதற்கு ஏற்ப உதட்டினைப் பவளம் என்று கூறுவது ஏனென்றால், அதன் சிவந்த நிறத்தால் ஆகும்; ஆக அந்தப் பரம்பொருளைக் காரணமாகப் பற்றி வரும் அன்பைக் கூறுகிறது. (செப்ப பக்தி) – திருப்பாவை (20) – செப்பன்ன மென்முலை - என்று நன்கு முதிர்ந்த ஸ்தனத்தைச் செப்பு என்று கூறுவதால், ஸர்வேச்வரன் மீது விழுந்து வணங்கியபடி உள்ளதான முதிர்ந்த பக்தியைக் கூறுகிறது. (மின் அணுத்வம்) - பெரியதிருமொழி (3-9-5) – மின்னனைய நுண்மருங்குல் – என்று இடுப்பை மின்னலாக வர்ணிப்பது, அதன் நுண்ணிய தன்மை காரணமாக என்பதால், இதுவரை கூறப்பட்ட ஞானத்தின் பல்வேறு நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளதான ஆத்மஸ்வரூபத்தின் அணு போன்ற தன்மையைக் கூறியது. – (தேர் போக்யதை) பெரியதிருமொழி (1-4-6) – தேரணங்கல்குல் - என்பதனான அல்குலுடைய அழகானது, அனுபவிப்பவனுக்கு இனிமையாக இருக்கும் என்பதால், திருவாய்மொழி (4-3-10) - தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து - என்பதற்கு ஸர்வேச்வரனுக்கு மிகவும் இனிமையான பொருளாக உள்ள ஆத்மாவின் இனிமையைக் கூறுகிறது. (அன்னம் கதி) - பெரியதிருமொழி (3-7-9) – அன்னமன்ன நடையாள் - என்று நடை அழகுக்கு உவமையாக அன்னத்தைக் கூறுவதால், எஜமானனாகிய ஸர்வேச்வரனும் அவனுடைய அடியார்களும் கொண்டாடும்படி ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றபடி நடத்தல் என்னும் ஒழுக்கம் கூறப்பட்டது. – ஆகவே இப்படியாக மயில்பிறை என்பது போன்று வர்ணித்து உரைக்கத்தக்கபடியாக அவயவங்களுடைய சிறப்புகளைக் கொண்டதாகவும், திருவாய்மொழி (4-4-2) – தெய்வ உரு – என்று கூறுவதற்கு ஏற்ப இந்த உலகத்துடன் ஸம்பந்தம் அற்றதாகக் கூறப்பட்டதாகவும் உள்ள திருமேனியானது - ஞானமலர்ச்சி மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு ஆதாரமாகவும், (அகமேனியின் வகுப்பு) - திருவாய்மொழி (9-7-10) – அகமேனி - என்பதற்கு ஏற்ப உள்ளே காணப்படுவதும் ஆகிய ஆத்மஸ்வரூபத்தின் வகுப்பு என்று கருத்து. வகுப்பு என்றால் “பண்புகள் – பண்புகள் கொண்டவன்” என்ற சேர்க்கை மூலமாக இப்படிப்பட்ட ரூபத்திற்குத் தகுதியாக உள்ள நிலை. ஆனால் பேற்றினை அடைவதில் உள்ள பதற்றம் என்பதே தலைமகளாகக் கூறப்பட்டது; இப்படி உள்ளபோது, அவயவங்களை வர்ணிக்கும் நேரத்தில், அந்தப் பதற்றத்தை ஆத்மஸ்வரூபமாக உரைப்பது ஏன்? இதன் காரணம், மேலே கூறப்பட்ட மூன்றுவிதமான நிலைமாறுதல்களும் [தோழி, தாய், தலைமகள்], நம்மாழ்வாருக்கே ஏற்படுவது என்பதாலும், அந்தந்த நிலைகளுடன் சேர்ந்து நிற்பதன் காரணமாக மூன்று நிலைகளும் இவராகவே நின்று உரைப்பதாலும், பேற்றினைப் பெறுவதில் பதற்றத்துடன் நிற்கும் அவருடைய ஸ்வரூபத்திற்கே நாயகி என்ற நிலை உள்ளதாலும், இவ்விதம் கூறுவதில் தவறில்லை.