Acharya Hridayam - இரண்டாம் ப்ரகரணம் (சூர்ணை 136)

இரண்டாம் ப்ரகரணம்

அபிலாஷா சிந்தநாநுஸ்ம்ருதீச்சா ருசி பர பரம பக்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும்.

தலைமகளென்கிறது ப்ராப்யத்வரையையாகில் தலைமகளுக்குச் சொல்லும் பருவமேழும் இங்குக் கொள்ளும்படி யென்னென்னு மபேக்ஷையிலே யருளிச்செய்கிறார் (அபிலாஷாத்யாதி).

– பேற்றினை அடைவதில் உள்ள பதற்றம் என்பதே இங்கு தலைமகள் என்று கூறப்படுவதாகக் கொண்டால், அவளுக்கு உரைக்கப்படும் ஏழு பருவங்களை (வயதில் உள்ள பிரிவுகளை) இங்கு கொள்வது எப்படி என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநுபாவ்யவிஷய ப்ரதம தர்சநத்தில் பிறக்கும் ஆசையாகிற அபிலாஷையும், த்ருஷ்டமான அவ்விஷயத்திலுண்டாம் ஸ்மரணமாகிற சிந்தனையும், அந்த ஸ்மரண அநவரதம் நடக்கையாகிற அநுஸ்ம்ருதியும், அவ்விஷயத்தை அவச்ய மநுபவித்தே நிற்கவேணுமென்னுமாசையாகிற இச்சையும், அவ்வாசைதான் ரஸாந்தரத்தால் மாற்றவொண்ணாதபடி முதிருகையாகிற ருசியும், அவ்விஷயத்தில் ஸம்ச்லேஷ விச்லேஷங்களே ஸுகதுக்கங்களாகையாகிற பரபக்தியும், அவ்விஷயத்தினுடைய விச்லேஷத்தில் ஸத்தை கிடவாதொழிகையாகிற பரமபக்தியுமாகிற ஏழவஸ்தையிலும், “பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண்” என்கிற ஏழு பருவமும் தலைமகளான ப்ராப்ய த்வரைக்குக் கொள்ளுமென்றபடி. இத்தால் பக்தி ரூபையான ப்ராப்ய த்வரைக்கு பக்தியினுடைய ப்ரதம தசை தொடங்கி சரம தசாபர்யந்தமான அவஸ்தா விசேஷங்களிலே பர்வ ஸப்தகமும் கொள்ளலாமென்றதாயிற்று.

– (அபிலாஷா) - அனுபவிக்கத்தக்க பொருளை முதன்முதலில் பார்த்தவுடன் ஏற்படுகின்ற ஆசை என்னும் அபிலாஷையும். (சிந்தநா) - அவ்விதம் பார்க்கப்பட்டதான அந்தப் பொருளைக் குறித்த நினைவுகள் என்னும் சிந்தனையும். (அநுஸ்ம்ருதி) அத்தகைய நினைவானது சிறிதும் இடைவெளி இன்றி தொடர்ந்தபடி உள்ளதான நிலையும். (இச்சா) – அந்தப் பொருளை நிச்சயமாக அனுபவித்தே தீரவேண்டும் என்ற ஆசையாகிற இச்சையும். (ருசி) - அந்த ஆசை என்பது, அதனைப் போன்றே வேறு இன்பம் அளிக்கவல்ல பொருளில் மனதை மாற்ற இயலாமல் முதிர்ந்து நிற்பதாகிற ருசியும். (பரபக்தி) அந்தப் பொருளை அடைதல், பிரிதல் என்பதே இன்பம் மற்றும் துன்பம் என்றாகிற பக்தியும். (பரமபக்தி) – அந்தப் பொருளைப் பிரிய நேர்ந்தால் இருப்பு என்பது இல்லாமல் போகின்ற பரமபக்தி என்பதான ஏழு நிலைகளிலும். (பேதை முதலான பருவம் கொள்ளும்) - பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் - என்பதான ஏழு பருவங்களும் பேற்றை அடைவதில் உள்ள பதற்றம் என்று தலைமகளுக்குக் கொள்ளப்படும். இதன் மூலம் பக்தி ரூபமாக உள்ளதான பேற்றினை அடைவதில் உள்ள பதற்றத்துக்கு, பக்தியின் முதல் நிலை தொடக்கமாக இறுதி நிலை முடிய உள்ள நிலைகளில் ஏழு பருவங்களையும் கொள்ளலாம் என்றானது.